தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வேலையைத் தள்ளிப்போடும் பழக்கத்தை முறியடிக்க வழிகள்

2 mins read
be92d09f-e583-4270-af7d-43eaf32a74e9
நீண்டகாலம் வேலையைத் தள்ளிப் போடும் பழக்கம், மனச்சோர்வுக்கும் வேலை இழப்புக்கும்கூட இட்டுச்செல்லக்கூடும். - படம்: பிக்சாபே

சோம்பேறித்தனமும் வேலையைத் தள்ளிப்போடும் பழக்கமும் ஒன்று எனப் பலரும் நினைப்பதுண்டு. ஆனால், இவ்விரண்டும் மிகவும் வேறுபட்டவை.

வேலையைத் தள்ளிப்போடுவது என்பது பொதுவாக விருப்பமில்லாத, ஆனாலும் முக்கியமான பணியைத் தள்ளிப்போடுவதாகும். மாறாக, சோம்பல் என்பது அக்கறையின்மை, செயலற்ற தன்மை, செயல்பட விருப்பமின்மை ஆகியவற்றைக் குறிக்கிறது. 

ஆனால், வேலையைத் தள்ளிப்போடும் போக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். எடுத்துக்காட்டாக, சில பணிகளைத் தள்ளிப்போடுவதால் குற்றவுணர்வு ஏற்படும். இது உற்பத்தித்திறனைக் குறைத்து, இலக்குகளை எட்டுவதைத் தடுக்கும். 

நீண்ட நேரம் ஒருவர் தனது பணிகளைப் புறக்கணித்து, காலம் கடத்தினால் வேலையில் தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு ஏமாற்றம் அடையக்கூடும். இது மனச்சோர்வுக்கும் வேலை இழப்புக்கும்கூட இட்டுச்செல்லக்கூடும்.

வேலையைத் தள்ளிப்போடுவதை எப்படிச் சமாளிப்பது?

பெரும்பாலான பழக்கவழக்கங்களைப் போலவே, காலம் கடத்தும் பழக்கத்தையும் கடந்துசெல்ல முடியும். 

காலத்தைக் கடத்தும் பழக்கத்தைச் சமாளிக்கத் தொடங்குவதற்குமுன் அதற்கான காரணங்களை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். உதாரணத்துக்கு, விருப்பமில்லாத காரியங்களைத் தள்ளிப்போடுவதற்குப் பதிலாக அவற்றை விரைவில் முடித்துவிட்டால் மற்ற பணிகளில் கவனம் செலுத்தலாம். 

பட்டியல்கள், பயனுள்ள அட்டவணைகளை உருவாக்குவதால் பணிகளைச் சீரமைக்க முடியும். எந்தெந்தப் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கலாம், எவற்றுக்கு காலக்கெடு உள்ளது என்பதைப் புரிந்துகொண்டால் எளிதில் பணிகளைக் காலம் கடத்தாமல் உரிய நேரத்தில் முடிக்க முடியும்.

பணியில் முழுக் கவனத்துடன் ஈடுபடுவது சிறந்தது. அவற்றை தள்ளிவைப்பதற்குப் பதிலாக, முடிக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படலாம். மேலும், கடினமான பணியைச் சரியான நேரத்தில் செய்து முடித்தால் ஓர் இனிப்புப் பண்டம் உண்பது அல்லது தொலைக்காட்சி பார்க்க சிறிது நேரம் எடுத்துக்கொள்வது போன்ற சிறு பரிசுகளை நமக்கு நாமே வழங்கிக்கொள்ளலாம். காலம் கடத்தும் பழக்கத்தை விட்டொழிக்க இது ஊக்கம் தரும். 

அத்துடன், மின்னிலக்கச் சாதனப் பயன்பாட்டையும் சமூக ஊடகங்களால் வேலையில் கவனம் சிதறுவதைக் குறைப்பதும் நன்று. கவனம் செலுத்துவதற்குச் சாதகமான சூழலைக் கண்டறிந்து செயல்பட்டால் வேலை விரைவில் முடியும்.

நம்மில் பலருக்கும் காலம் கடத்தும் பழக்கம் உள்ளது. சில நேரங்களில் அது நமக்கு நன்மைகளையும் தரும். நல்ல யோசனைகள் செயலுருவம் பெற அவகாசம் தருவது பயன் தரலாம். ஆனால், காலம் கடத்துவது சில வேளைகளில் மனதிற்குச் சோர்வு அளிக்கக்கூடும். 

வேலையைத் தள்ளிப்போடும் பழக்கத்தைப் பலரும் வெவ்வேறு வழிகளில் சமாளிக்கின்றனர். எல்லாவற்றிலும் மிகவும் முக்கியமானது - தன்னைக் கடிந்துகொள்ளாமல் புரிந்துணர்வோடு இந்தப் பழக்கத்தை வெல்வதே.

குறிப்புச் சொற்கள்