மீண்டும் ஒரு புதிய ஆண்டு, புதிய வாய்ப்புகளை வரவேற்கும் ஒரு தருணம். புத்தாண்டை இன்புற வரவேற்க சில குறிப்புகளைப் பகிர்கிறது தமிழ் முரசு.
சுய பரிசீலனை
கடந்த ஆண்டில் ஏற்பட்ட வாய்ப்புகள், கடந்து வந்த இலக்குகள், முன்னேற்றங்கள், பின்னடைவுகள் போன்றவற்றைப் பற்றி ஆழ்ந்து சிந்தியுங்கள். கடந்த ஆண்டின் உயர்வு தாழ்வுகளை நன்றாகப் புரிந்துகொள்ளவும் வரவிருக்கும் புத்தாண்டுக்காக புதிய இலக்குகளை அமைக்கவும் தன்னைத்தானே பரிசீலனை செய்துகொள்வது உதவும்.
செய்வன திருந்தச் செய்
முடிக்காத செயல்கள் எதுவாயினும், புத்தாண்டு பிறப்பதற்குமுன் அவற்றைச் செய்து முடிப்பது சிறந்தது. எந்தப் பொறுப்புகளும் எஞ்சியிராமல், புத்துணர்ச்சியுடன் புத்தாண்டைத் தொடங்குங்கள்.
உறவுகளால் சிறப்பு
புத்தாண்டில் அன்பான உற்றார் உறவினர்களுடன் இருக்கும் உறவை வலுப்படுத்த எண்ணினால் அவர்களுக்கென சிறிது நேரம் ஒதுக்குங்கள். நம்மைச் சுற்றி நல்ல உறவுகள் இருப்பது புத்தாண்டை மேலும் சிறப்பாக்கும்.
தூய்மை பேணவும்
சுற்றுப்புறம், வீடு, அலுவலகத்தைச் சுத்தம் செய்து புத்தாண்டை வரவேற்பது மகிழ்ச்சியையும், மனநிறைவையும், மன அமைதியையும் தரும். தூய்மையான சூழலுடன் புத்தாண்டைக் கொண்டாடுங்கள்.
புதிய இலக்குகள்
புதிய இலக்குகளை வகுத்துக்கொள்ள புத்தாண்டு சரியான நேரமாகும். பணியிடம், உடல்நலம், உறவுகள் போன்றவற்றுக்கென சிறுசிறு இலக்குகளை அமையுங்கள். அவற்றைப் பட்டியலிட்டு, பார்வைக்கு எட்டும் விதம் சுவரில் அல்லது கைப்பேசியில் வைத்திருங்கள்.
உங்களைக் கவனித்துக்கொள்ளுங்கள்
இதற்கெல்லாம் முதற்படி - உங்களை கவனித்துக்கொள்ளுங்கள். புத்தாண்டில் புதிய வாய்ப்புகளை கையாள நலமிக்க உடலும் உள்ளமும் அவசியம். எதுவாயினும், உங்கள் தேவைகளுக்கு முன்னுரிமை அளியுங்கள் - நன்மை தானே தேடி வரும்!

