அடுத்த ஆண்டு பயணம் மேற்கொள்ளும்போது ஓய்வெடுப்பது, குடும்ப உறவுகளை வலுப்படுத்தத்துவது, புதிய இடங்களைச் சுற்றிப் பார்த்து உற்சாகம் பெறுவது ஆகியவற்றில் மேலும் பல பேர் கவனம் செலுத்தவுள்ளனர்.
மின்னிலக்கப் பயணத் தளமான அகோடா புதிதாக வெளியிட்டுள்ள 2025க்கான பயணப் போக்குகள் கணக்கெடுப்பு வரும் ஆண்டில் விரும்பப்படும் முக்கியப் போக்குகளை எடுத்துக்காட்டுகிறது.
பயணிகளில் 34 விழுக்காட்டினர் அன்புக்குரியவர்களுடன் தரமான நேரம் செலவிடுவதையும் குடும்பப் பயணங்களைத் திட்டமிடுவதையும் முதன்மையாகக் கொண்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, பலர் தம்பதிகளாகவும் (23%) தனியாகவும் (19%) பயணம் செய்ய விருப்பம் தெரிவித்தனர்.
ஓய்வெடுப்பது பயணத்திற்கான மிகப்பெரிய உந்துதல் என்றும் இதுவே பதிலளித்தவர்களில் 75 விழுக்காட்டினர் பயணம் செய்வதற்கான முக்கியக் காரணம் என்றும் கண்டறியப்பட்டது.
சிங்கப்பூரர்கள் இந்தப் போக்கில் முன்னணியில் உள்ளனர். அவர்களில் 87 விழுக்காட்டினர் ஓய்வுக்கு முன்னுரிமை அளிக்கும் அதே நேரத்தில் மற்றவர்கள் குடும்பம், நண்பர்கள், கலாசாரம் அகியவற்றைத் தங்களின் உந்துதலாகக் கருதுகின்றனர்.
மேலும், மற்றொரு பயணத் தளமான டிராவேலோகா நடத்திய முதல் ஆசிய-பசிபிக் பயனீட்டாளர் கணக்கெடுப்பில் சிங்கப்பூரர்களில் 72 விழுக்காட்டினர் சுற்றுப்பயணத்துக்கான இடத்தைத் தேர்ந்தெடுக்கும்போது பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதாகத் தெரியவந்தது.
மக்கள் பயணங்களை எவ்வாறு திட்டமிடுகிறார்கள் என்பதைத் தொழில்நுட்பம் மாற்றியமைத்து வருகிறது. 80 விழுக்காட்டுப் பயணிகள் பயணப் பயன்பாடுகளைப் பயன்படுத்த விரும்புகிறார்கள் என்றும் 12% பேர் தங்கள் அனுபவங்களை முன்னோட்டமிட மெய்நிகர் சுற்றுப்பயண அனுபவங்களைப் பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டுகின்றனர் என்றும் கண்டறியப்பட்டது.
டிராவேலோகாவின் கணக்கெடுப்பின்படி சிங்கப்பூரர்களில் 71 விழுக்காட்டினர் தங்கள் பயணங்களின்போது கடன் பற்று அட்டைகள் மூலம் கட்டணம் செலுத்த விரும்புகிறார்கள் என்றும் அதைத் தொடர்ந்து ரொக்கம் (62%), வைஸ், யூட்ரீப் போன்ற பயணக் கட்டணச் சேவைகளை (37%) பேர் விரும்புகிறார்கள் என்றும் கண்டறியப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
பணத்தைச் சேமிக்க நினைக்கும் பயணிகள் கணக்கெடுப்பில் ஆதிக்கம் செலுத்தினர். 65% பேர் தங்குமிடத்திற்கு ஒரு இரவுக்கு $250க்கு கீழ் செலவிடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளனர். இருப்பினும், அனைத்துலகப் பயணம் பிரபலமாக உள்ளது. 52% பேர் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளத் திட்டமிடுகின்றனர்.
மின்னிலக்க நாடோடிகளின் எழுச்சி நீக்குப்போக்குள்ள வேலைப் போக்குகளை வெளிப்படுத்துகிறது. ஆய்வில் பதிலளித்தவர்களில் 25 பேரில் ஒருவர் 2025ல் வேலையையும் ஒய்வு நேரத்தையும் இணைத்து வேலை செய்ய விரும்புவதாகத் தெரிகிறது.
பயணிகளின் பட்டியலில் அவர்கள் இதுவரை செல்லாத இடங்களுக்குச் சென்று சுற்றிப் பார்ப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. 84 விழுக்காட்டினர் 2025ல் புதிய இடங்களுக்குச் செல்ல விரும்புகின்றனர்.
பயணம் செய்வதற்கான உத்வேகம் தனிப்பட்ட பொழுதுபோக்குகள், கவர்ச்சிகரமான தள்ளுபடிகள், பரிந்துரைகள் ஆகியவற்றிலிருந்து ஏற்படுகிறது. மேலும் சிலர் சமூக ஊடகங்களிலிருந்து பயண யோசனைகளைப் பெறுகின்றனர்.
தோக்கியோ, ஷங்காய், ஹாங்காங் முதலிய இடங்களிலுள்ள டிஸ்னிலேண்ட், சோலில் உள்ள லோட்டே வேர்ல்ட், ஒசாகாவிலும் சிங்கப்பூரிலும் உள்ள யுனிவர்சல் ஸ்டூடியோஸ், அபுதாபியில் உள்ள ஃபெராரி வேர்ல்ட் உள்ளிட்ட ஆசியாவின் பல கேளிக்கைப் பூங்காக்கள் அதிக சுற்றுப்பயணிகளை ஈர்த்து வருகின்றன. அவ்வகையில் எண்மரில் ஒருவர் 2025ல் ஒரு கேளிக்கைப் பூங்காவிற்காவது செல்ல வேண்டும் என்று விரும்புகின்றனர்.