உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட நீண்ட கால உடல்நலக் கோளாறுகள் கொண்ட 60 வயது மாது, ஒவ்வொரு முறை தனது வீட்டில் கண்காணிக்கப்படும் ரத்த அழுத்த அளவீடு அதிகமாக இருக்கும் போதும் பதற்றமடைந்துள்ளார்.
இயல்பான அளவிலிருந்து அழுத்தம் சற்றே கூடினாலும், தனது இரு மகள்களில் ஒருவரை அழைத்து உடனடியாக மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அனுப்பச் சொல்வார்.
அவ்வாறு வந்த ஒவ்வொரு மருத்துவமனை வருகையும் தேவையற்றதாகவே இருந்ததை நினைவுக் கூர்ந்தார் மூன்றாண்டுகளாக அப்பெண்ணுக்கு லிட்டில் இந்தியா மருந்தகத்தில் சிகிச்சையளிக்கும் பொது மருத்துவரான முகமது பைசல்.
ரத்த அழுத்த அளவீடு மட்டும் ஒருவரது ஆரோக்கியம் குறித்த முழு விளக்கத்தை வழங்காது என்றும், அந்த அளவீடு அதிகரிப்பில் பிற உடல்நலக் காரணிகளின் தாக்கம் இருக்கலாம் என்றும் அவர் விளக்கினார்.
பணிக்குச் செல்லும் இரு மகள்களும் செய்வதறியாது குழம்பிய நிலையில், அவரிடம் உதவி கோரியபோது எளிய தீர்வை அவர் முன்வைத்தார்.
அதன்படி தற்போது ரத்த அழுத்த அளவு இயல்பை விட அதிகரித்திருந்தால் அவர்கள் உடனடியாக மருந்தகத்தைத் தொடர்பு கொள்கின்றனர்.
தேவைக்கேற்ப அவருக்கு மருத்துவச் சந்திப்பு அவசியமா எனும் ஆலோசனையை வழங்குகிறார் டாக்டர் பைசல்.
“பரிச்சயமான மருத்துவர், அவர் மீதான நம்பிக்கை உள்ளிட்டவை மருத்துவர் அளிக்கும் சிகிச்சைத் திட்டங்களை நோயாளிகள் தயக்கமின்றி ஏற்றுக்கொள்ள உதவுகிறது,” என்றார் டாக்டர் பைசல்.
தொடர்புடைய செய்திகள்
“சில நோயாளிகள் என்னை சளி அல்லது காய்ச்சலுக்கு மட்டும் சிகிச்சையளிக்கும் மருத்துவராகப் பார்க்கிறார்கள். விரைவில் குணமடைந்து அன்றாட வாழ்க்கைக்குத் திரும்புவது மட்டுமே அவர்களது விருப்பமாக உள்ளது,” என்றார்.
“வேறு சிலர் அவர்களுக்கு ஆறுதல் கூறவும், வழிகாட்டவும், ஆலோசனைகளை வழங்கவும் நாங்கள் இருக்கிறோம் என நம்புகிறார்கள்,” என்றார் 14 ஆண்டுகளாக மருந்தகத்தில் பணியாற்றி வரும் குடும்ப மருத்துவர் பைசல்,47.
மூத்தோருக்குச் சிகிச்சையளிக்கும் போது இவ்வகையான நம்பிக்கை உணர்வு இன்றியமையாதது என்று அவர் தெரிவித்தார். தன்னிடம் வரும் நோயாளிகளில் 20 விழுக்காட்டினர் 60 வயதுக்கும் மேற்பட்டோர் என்றும் பெரும்பாலும் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட நீண்ட காலக் கோளாறுகளை நிர்வகிக்க அவர்கள் வழக்கமாக வருவதாகவும் குறிப்பிட்டார்.
நோயாளிகளுடனான பயணம்
சிங்கப்பூர்த் தேசிய பல்கலைக்கழகத்தில் 2004ஆம் ஆண்டு மருத்துவப் பட்டப் படிப்பை முடித்த டாக்டர் பைசலுக்கு, நோய்களுக்கு சிகிச்சையளிப்பதைத் தாண்டி நம்பிக்கை வளர்த்து அதன் மூலம் நல்லுறவை உருவாக்குதல் உள்ளிட்டவை தான் குடும்ப மருத்துவத்தின் அடிப்படை எனும் எண்ணம் உள்ளது.
அவற்றின் மீதான கவனமும் கடந்த ஆண்டு மேலும் ஆரோக்கியமான எஸ்ஜி திட்டத்தில் டாக்டர் பைசலின் மருந்தகம் இணைந்ததற்கான முக்கியக் காரணங்களில் ஒன்றாகும்.
ஆரோக்கியமான எஸ்ஜி, தனிப்பயனாக்கப்பட்ட கவனிப்பின் மூலம் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தும் ஒரு தேசிய சுகாதாரத் திட்டம்.
“இதனை நோய்த்தடுப்பு நடவடிக்கைகளைச் சுகாதார அமைப்பின் மையமாக வைக்கும் சிறந்த வாய்ப்பாகப் பார்த்தேன்,” என்றார் டாக்டர் பைசல்.
“இத்திட்டத்தின் மூலம் உடல்நலம் குறித்த எல்லாக் கேள்விகளுக்கும் நோயாளிகளின் முதன்மைத் தொடர்புப் புள்ளியாக நாங்கள் மாறுகிறோம்,” என்றும் “அது தொடர்ந்து அவர்கள் செய்தவற்றைக் கண்காணிப்பதையும், செய்ய வேண்டியவற்றைத் தீர்மானிப்பதையும் எளிதாக்குகிறது,” என்றும் சொன்னார் டாக்டர் பைசல்.
முதன்மைப் பராமரிப்புக் கட்டமைப்பின் மூலம் மேலும் ஆரோக்கியமான எஸ்ஜி திட்டத்தின் மருந்தகங்கள் தங்கள் மருந்தகங்களுக்கு அப்பாற்பட்ட சேவைகளையும் வழங்க முடியும்.
இது, அத்திட்டத்தில் பங்கேற்றுள்ள பிற மருந்தகங்களின் வளங்களையும் நிபுணத்துவங்களையும் பயன்படுத்தும் வாய்ப்பாக அமையும். எடுத்துக்காட்டாக, மருந்தகங்கள் தங்கள் நோயாளிகளைத் தாதியர் சேவைகள், நீரிழிவு, கால், கண் பரிசோதனை உள்ளிட்டவைகளுக்காக அதற்குரிய பிற மருந்தகங்களை பரிந்துரைக்க முடியும்.
இத்திட்டத்தில் பங்கேற்கும் ஒவ்வொரு மருந்தகமும் சிங்கப்பூரிலுள்ள பத்து முதன்மைப் பராமரிப்புக் கட்டமைப்புகளை சேர்ந்தவையாக இருக்கும்.
“இந்தக் கட்டமைப்பில் இணைக்கப்பட்டிருப்பது, நோயாளிகளுக்கு விரிவான ஒருங்கிணைந்த கவனிப்பை வழங்க உதவுகிறது,” என்றார் டாக்டர் பைசல்.
மேலும் ஆரோக்கியமான எஸ்ஜி முன்னெடுப்பு டாக்டர் பைசல் போன்ற மருத்துவர்களுக்கு, சிகிச்சைகள், மருந்துகளைப் பரிந்துரைப்பது மட்டுமின்றி தனிமைப்படுத்தப்படுதல் உள்ளிட்ட நோயாளியின் நல்வாழ்வைப் பாதிக்கும் சமூகக் காரணிகளையும் கவனித்து, மேம்படுத்த உதவுகிறது.
இதன்முலம், நோயாளிகள் தங்களின் ஒட்டுமொத்த நலனை மேம்படுத்தும் உடற்பயிற்சி வகுப்புகள், பொழுதுபோக்குக் குழுக்கள், சமூக நடவடிக்கைகள் போன்றவற்றுக்குப் பரிந்துரைக்கப்படுகின்றனர்.
“ஒரு நபரின் உடல்நலம் நோய் மேலாண்மை மூலம் மட்டும் உறுதி செய்யப்படுவதில்லை,” என்று கூறிய டாக்டர் பைசல், “தற்போது அவர்கள் சமூகத்தில் ஒருங்கிணைந்து வாழவும், துடிப்புடன் மூப்படையவும் ஆதரவளிக்கும் முழுமையான அணுகுமுறை அவசியம்,” என்றும் குறிப்பிட்டார்.
மேலும் ஆரோக்கியமான எஸ்ஜி என்றால் என்ன?
சுகாதார அமைச்சு, கடந்த 2023ஆம் ஆண்டு ஜூலை மாதம், 40 வயதுக்கு மேற்பட்ட சிங்கப்பூரர்கள் நிரந்தரவாசிகளுக்காக இந்த மேலும் ஆரோக்கியமான எஸ்ஜி திட்டத்தை அறிமுகம் செய்தது.
தனிப்பயனாக்கப்பட்ட திட்டங்கள், முறையான சோதனைகள், தடுப்பூசிகள், குடும்ப மருத்துவர் மூலம் பிற பராமரிப்பாளர்கள், சேவைகள் உள்ளிட்டவற்றுக்கான மானியத்துடன் கூடிய பரிந்துரைகள் போன்ற நோய்த்தடுப்பு நடவடிக்கைகளில் இத்திட்டம் கவனம் செலுத்துகிறது.
இத்திட்டத்தில் பங்கேற்றுள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்தகங்களில், தங்களுக்கு விருப்பமான ஒன்றில் பொதுமக்கள் பதிவு செய்து கொள்ளலாம்.
திட்டம் அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து ஏறத்தாழ 2.4 மில்லியன் சிங்கப்பூர் வாசிகள் இதில் பங்கேற்க அழைக்கப்பட்டதாகவும், அதில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் பதிவு செய்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்தது.
குடும்ப மருத்துவர்கள் இத்திட்டத்தின் முக்கிய பங்காளிகள். கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற மேலும் ஆரோக்கியமான எஸ்ஜி குறித்த விவாதத்தில், குடும்ப மருத்துவர்களை இத்திட்டத்தின் அச்சாணி போன்றவர்கள் எனக் குறிப்பிட்டார் சுகாதார அமைச்சர் ஓங் யி காங்.
“நோயாளிகளுடனான உறவுகளை வலுவாக்கி, அதன் மூலம் தடுப்பு நடவடிக்கைகளில் பெரும்பங்காற்ற மருத்துவர்களை அணிதிரட்ட விரும்புகிறோம்,” என்றும் அவர் சொன்னார்.
ஒத்துழைப்பில் கவனம்
நோய்த்தடுப்பு அதிக நன்மையளித்தாலும், அது நீண்டகாலத் தொடரோட்டம் போன்றது. குறிப்பாக, “நோய்த்தடுப்பு நடவடிக்கைகளினால் குறுகிய கால பலன்களையோ, அன்றாட வாழ்வில் மாற்றத்தையோ அவர்களால் பார்க்க முடிவதில்லை,” என்று சொன்ன டாக்டர் பைசல், “எல்லா நோயாளிகளும் இதனை உடனடியாக ஏற்றுக்கொள்வதில்லை,” என்றார்.
“ஒருவர் ஆரோக்கியமாக இருந்தால், வழக்கமான பரிசோதனைகள் தேவையில்லை எனும் தவறான கருத்து பரவலாக உள்ளது. “எந்தவித அறிகுறிகளும் இல்லாதபோது மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்வது அவசியமா? எனும் கேள்வியும் நிலவுகிறது,” என்றார் அவர்.
நோயாளிகளின் நம்பிக்கையும், அவர்களுடனான உரையாடலும் மட்டுமே இக்கேள்விகளுக்கு விடையாக அமையும் என நம்புகிறார் டாக்டர் பைசல். வருமுன் காப்பதன் முக்கியத்துவத்தை நோயாளிகளுக்கு விளக்கிச் சொல்லிப் புரிய வைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார் இவர்.
முறையான சோதனைகள் நோய்களை ஆரம்பக்கட்டத்திலேயே கண்டறிய உதவும் என்றும், அவ்வாறு கண்டறிவது சிகிச்சையளிக்கவும் நிர்வகிக்கவும் உதவும் என்றும் நீண்ட கால அபாயங்களிலிருந்து காக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
“எடுத்துக்காட்டாக, நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்டவற்றைத் தாமதமாகக் கண்டறிவது சிகிச்சையளிப்பதில் சிரமம் ஏற்படுத்தும்,” என்றும் விளக்கினார்.
அவை நோயாளிகளை உடல் ரீதியிலும், மன ரீதியிலும் பாதிப்பை அதிகரிக்கலாம் என்றும் தெரிவித்தார்.
தேவி சிங்கீ, (Dewi Singgih) எனும் 50 வயதான வரைகலை வடிவமைப்பாளர், எதிர்பாராத உடல்நலக் கோளாறு குறித்து அறிந்து கொள்ளாமல் கண்மூடித்தனமாக இருந்துவிடக் கூடாது என்பதால் இத்திட்டத்தில் இணைந்துள்ளார்.
செப்டம்பர் 2023ஆம் ஆண்டு இணைந்த அவர், “எனக்கு வயதாகிறது. இந்நிலையில் ஏதேனும் உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டால் அதனைத் தெரிந்து கொள்வதும், விரைவில் சிகிச்சை பெறுவதும் முக்கியம்,” என்று சொன்னார். இவர் தனது உயர் ரத்த அழுத்தத்தை நிர்வகிக்கவும், பிற வழக்கமான சோதனைகளுக்காகவும் குடும்ப மருத்துவரைத் தவறாமல் சந்தித்து வருகிறார்.
இரண்டு குழந்தைகளுக்குத் தாயான இவர், “இதற்கு முன்பு வரை நோய் அறிகுறிகள் தென்பட்டால் மட்டுமே மருத்துவரை அணுகி வந்தேன். ஆனால், என் உடல்நிலையை முழுமையாகக் கவனித்துக்கொள்ள வழக்கமான பரிசோதனை அவசியம் என உணர்ந்துளேன்,” என்று சொன்னார்.
டாக்டர் பைசல் இவ்வகை அணுகுமுறையை ஊக்குவிப்பதாகக் கூறினார். அவர் தன்னை, நோயாளிகள் தங்களின் ஆரோக்கியத்திற்கு பொறுப்பேற்க உதவும் சமூகப் பங்காளியாகக் கருதுகிறார். நோயாளிகளும் மருத்துவர்களும் இணைந்து செயல்படுவது நோயாளியின் தேவைகளை அடிப்படையாகக் கொண்டு சிறந்த சுகாதாரத் திட்டங்களை வடிவமைக்க உதவும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அவருடன் ஏற்பட்ட ஒத்துழைப்பும், அவர் மீதான நம்பிக்கையும் ரத்த அழுத்த அளவீடுகளைக் குறித்து கவலை கொண்ட அவரது நோயாளிக்கு மறு உறுதியளித்தது.
இத்திட்டத்தில் இணைந்தது அவரது தேவையற்ற மருத்துவமனை வருகையை நிறுத்தியுள்ளதாகப் பகிர்ந்தார் டாக்டர் பைசல். தனது ஆதரவும், தங்கள் மகள்களின் ஆதரவும் இருப்பதால், அப்பெண்மணி தன் உடல்நிலை குறித்த பதற்றமின்றி இருப்பதாகவும் சுட்டினார் அவர்.
“நோயாளிகளை மையமாகக் கொண்டே எங்கள் செயல்பாடுகள் அமைகின்றன,” என்று சொன்ன அவர், நோயாளிகளின் நல்வாழ்வுக்கு ஆதரவளிப்பதும், அவை குறித்த புரிதலை ஏற்படுத்துவதுமே தங்களை போன்ற குடும்ப மருத்துவர்களின் இலக்கு என்றும் குறிப்பிட்டார்.
மேல் விவரங்களுக்கு healthiersg.gov.sg இணையப்பக்கத்துக்குச் சென்று பிரத்யேகமாக உங்களுக்கென ஒரு மருத்துவருடன் உங்கள் சுகாதாரப் பயணத்தைத் தொடங்குங்கள். 40 வயதும் அதற்கு மேற்பட்ட சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் இத்திட்டத்தில் சேரலாம்.