வைர வணிகத்தில் தனித்துவ முத்திரை

வைர வணிகத்தில் தனித்துவ முத்திரை

2 mins read
ba9a2401-b98b-4b27-a955-2aab497efcef
தம் மகள் அதித்தியுடன் மீனு சுப்பையா. - படம்: ரவி சிங்காரம்
multi-img1 of 2

கண்கவர் நகைகளுடன் பாரம்பரியமும் நவீனமும் கலந்த வைர நிறுவனமான ‘மீனு சுப்பையா டைமண்ட்ஸ்’சை நிறுவி 33 ஆண்டுகளாக நடத்திவந்துள்ளார் திருவாட்டி மீனு சுப்பையா.

செட்டிநாட்டின் நகை வரலாற்றைக் கூறும் ‘பெட்டகம்’ எனும் அருங்காட்சியகத்தைக் காரைக்குடியில் அவர் நிறுவியிருக்கிறார். அண்மையில் சிங்கப்பூர் அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலில் திருவாட்டி மீனு ஒரு கண்காட்சியை நடத்தியபோது தமிழ் முரசு அவரையும், தொழிலில் கைகோத்துள்ள அவரது மகளையும் நேர்கண்டது.

விலைமதிப்பற்ற வைரங்களை உருவாக்குவதிலும் ஆராய்வதிலும் அளவற்ற ஆர்வம் கொண்டவர் திருவாட்டி மீனு. அந்த ஆர்வத்தினால் ‘ஜெமாலாஜிக்கல் இன்ஸ்டிடியூட் ஆஃப் அமெரிக்கா’வில் பட்டம் பெற்ற தென்னிந்தியாவின் முதல் பெண்மணி என்ற பெருமையையும் அவர் பெற்றார்.

“வழக்கமாக, பலருக்கும் நகை அணிவதில் அதிக ஆர்வம் இருக்கும். ஆனால், எனக்கோ சிறுவயதிலிருந்து நகைகளை வடிவமைப்பதில் நாட்டம் இருந்ததுண்டு. இயற்கையான ரத்தினக்கற்களைப் பட்டை தீட்டி அழகாக மாற்றும் விதத்தைக் கண்டு வியந்தேன். திருமணங்களுக்குச் செல்லும்போது பிறர் அணியும் நகைகளைக் காண்பேன்; அவற்றை வரைந்து மீண்டும் உருவாக்கும்படி கற்பனைப்படுத்துவேன்,” என்றார் திருவாட்டி மீனு.

அவரது திறனை அடையாளங்கண்டவர் அவரது தந்தையார் சுப்பையா. தாயாரும் தொழில்முனைவராக இருந்ததால் குடும்பத்திலிருந்து நல்ல ஆதரவு. அமெரிக்காவிலிருந்து திரும்பியதும் 1983ல் தம் தந்தையாருடன் இணைந்து ‘மீனு சுப்பையா டைமண்ட்ஸ்’ நிறுவனத்தை அவர் தொடங்கினார். வீட்டில் ஒரு 120 சதுர அடி அறையில் தொடங்கிய நிறுவனம் இன்று சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, காரைக்குடி, அமெரிக்காவில் காட்சிக்கூடங்களை வைத்துள்ளது.

கடந்த ஓராண்டாக திருவாட்டி மீனு, ‘விலாசம்’, ‘வம்சம்’, ‘மெனாயா’ ஆகிய மூன்று விளம்பரப் பெயர்களில் நகைகளை விற்கிறார். ‘விலாசம்’ என்பது புத்துயிர்பெற்ற அல்லது மறுகற்பனைப்படுத்தப்பட்ட பாரம்பரியச் செட்டிநாட்டு நகைகள், ‘வம்சம்’ என்பது மற்ற இந்தியப் பாரம்பரியங்களின் வம்சாவளியில் வரும் நகைகள், ‘மெனாயா’ என்பது இன்றைய காலகட்டத்திற்கேற்ற நவீன வடிவமைப்பிலான நகைகள்.

செட்டிநாட்டுப் பண்பாட்டில் வளர்ந்ததால் செட்டிநாட்டு நகைகளைப் பலவிதங்களில் பார்த்துள்ள திருவாட்டி மீனு, இன்றைய காலகட்டத்தில் நகைகள் நவீன பாணியில் வருவதைக் கண்டதும் மீண்டும் பாரம்பரிய செட்டிநாட்டு நகைகளைக் கொண்டுவரவேண்டும் என விரும்பினார்.

அதனால், கடந்த 20 ஆண்டுகளாக அவர் செட்டிநாட்டு நகைகள் பற்றி, மூத்தோரிடம் பேசியும் பழங்காலத்துப் படங்களைப் பார்த்தும் நூல்களில் படித்தும் தகவல்களைச் சேகரித்து வந்துள்ளார். அப்படி உருவானதே ‘பெட்டகம்’ எனும் அருங்காட்சியகம். பாரம்பரியச் செட்டிநாட்டு நகைகளில் இருந்த சின்னங்கள், இந்தியா முதல் தென்கிழக்காசியாவரை நேர்ந்த நகை வணிகம் போன்றவற்றைப் பெட்டகத்தில் காணலாம்.

அடுத்த தலைமுறையிலும் தொடரும் வணிகம்

நகைகள் தலைமுறைகளைத் தாண்டி நிற்பதுபோல, திருவாட்டி மீனுவின் நகை வணிகத்தில் அவரின் கணவர் திரு கணேசனும், பின்பு 2021ல் மகள் அதித்தி கணேசனும் இணைந்தனர். மகள் அதித்தியும் நகைகளை வடிவமைப்பவர்; ‘தமாலி’ எனும் நகை வணிகத்தை அவர் நடத்துகிறார்.

“குடும்ப வணிகத்தை என் பெற்றோர் 33 ஆண்டுகளாக வழிநடத்தி வந்துள்ளனர். அதை இன்னும் வலுப்படுத்தி, வெவ்வேறு நாடுகளுக்கு விரிவுபடுத்த வேண்டும் என்பதே என் இலட்சியம்,” என்றார் திருவாட்டி அதித்தி.

குறிப்புச் சொற்கள்