வாசனைத் திரவங்கள் என்பது நம் ஆளுமையின் ஒரு பகுதி. சரியான வாசனையைத் தேர்ந்தெடுப்பது உங்கள் தனிப்பட்ட ரசனை, மனநிலை மற்றும் சூழலுக்கு ஏற்றவாறு இருக்க வேண்டும்.
பிடித்தமான மணம்
வாசனைத் திரவங்களில் பல வகைகள் உள்ளன. மலர் வாசனை (Floral), மர வாசனை (Woody), புத்துணர்ச்சி (Fresh), காரமான வாசனை (Spicy) போன்ற பல்வேறு வகைகளில் எது பிடிக்கும் என்பதை முதலில் முடிவுசெய்யலாம். எடுத்துக்காட்டாக, ஒருவர் மலர்களின் நறுமணத்தை விரும்புபவராக இருந்தால், ரோஜா, மல்லிகை, லாவெண்டர் போன்ற வாசனைகளைத் தேர்ந்தெடுக்கலாம்.
சருமம் ஏற்றுக்கொள்கிறதா?
வாசனைத் திரவங்களைத் தாளில் தெளித்து நுகர்வதைவிடச் சருமத்தில் நேரடியாகத் தெளித்து சோதிப்பது மிக முக்கியம். ஒவ்வொருவரின் சருமத்தின் ‘பிஎச்’ அளவும் வேறுபடும் என்பதால் வாசனைத் திரவம் சருமத்திற்கு உகந்ததா என்பதைக் கண்டறிய இது உதவும். ஒரு சில மணி நேரம் வாசனைத் திரவத்தைச் சருமத்தில் விட்டு கவனிப்பது சிறந்தது.
சூழலுக்கு ஏற்ற தேர்வு
பயன்படுத்தும் வாசனைத் திரவம் செல்லும் இடத்திற்கு ஏற்றவாறு இருக்க வேண்டும். அலுவலகம் போன்ற இடங்களுக்கு லேசான, மிதமான வாசனை பொருத்தமாக இருக்கும். இரவு விருந்துகள், சிறப்பு நிகழ்ச்சிகளுக்குச் சற்று வலுவான வாசனையைத் தேர்ந்தெடுக்கலாம்.
சிறிதாக வாங்கலாம்
புதிதாக ஒரு வாசனைத் திரவத்தை வாங்கும்போது சிறிய அளவில் அல்லது மாதிரிகளை வாங்குவது நல்லது.
ஒருவர் அந்த மணம் தமக்குப் பிடிக்கிறதா என்பதை உறுதிசெய்ய இது உதவும். மேலும், பலவிதமான வாசனைகளை முயன்று பார்ப்பதற்கும் இது வழிவகுக்கும்.
மனநிலையைக் கருத்தில்கொள்ளுங்கள்
சில நேரங்களில் நம் மனநிலையை மேம்படுத்த வாசனைத் திரவங்கள் உதவும். சோகமாக இருக்கும்போது, புத்துணர்வூட்டும் ‘சிட்ரஸ்’ பழ வாசனைகள் உதவலாம்.
அதேபோல் அமைதியான உணர்வைப் பெற விரும்பினால் சந்தனம் போன்ற மர வாசனைகளை முயன்று பார்க்கலாம்.
வாசனைத் திரவம் என்பது ஒவ்வொருவருடைய தனித்துவத்தை வெளிப்படுத்தும் ஒரு கருவியாகும்.
எனவே, உங்களுக்கு மகிழ்ச்சியையும் புத்துணர்வையும் தரும் வாசனையைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துங்கள்!

