வீட்டிற்குத் தேவையான பொருள்களை வாங்க தாம் அவ்வப்போது சந்திக்கும் சிரமத்தைக் களையவும், தம்மைப் போன்ற பிறருக்கு உதவவும் ஏதுவாக ‘வாங்கி வாங்க’ எனும் இணையப்பக்கத்தை வடிவமைத்துள்ளார் திரு அமானுல்லாஹ், 61.
தகவல் தொழில்நுட்ப, கணிதத் துறையில் இணை விரிவுரையாளராகப் பணியாற்றும் இவர், “என் வீட்டிலிருந்து வாங்க வேண்டிய பொருள்களின் பட்டியல் ஒலிச் செய்தியாக வாட்ஸ்அப் மூலம் வரும். அதனைப் பொறுமையுடன் கேட்டு, வாங்கி வருவது சிரமமான ஒன்று. அவர்களுக்கும் தமிழில் தட்டச்சு செய்து அனுப்புவதில் சிரமம் நிலவியது,” என்றார்.
‘இன்ஃபோகாம் கன்சல்டன்ட்ஸ்’ எனும் தொழில்நுட்ப நிறுவனத்தையும் நடத்திவரும் திரு அமானுல்லாஹ், தாம் அடிக்கடி சந்திக்கும் சிக்கலைத் தீர்க்க விடுமுறைக் காலத்தைப் பயன்படுத்தி இணையப்பக்கம் ஒன்றை வடிவமைத்துள்ளார். அதன்மூலம் பொருள்களை எளிதாகத் தேர்வுசெய்து, பட்டியலிட்டுப் பகிர முடியும்.
இதற்காக, குடும்பத்தினர், நண்பர்களுடன் கலந்தாலோசித்து, மொத்தம் 14 தலைப்புகளின்கீழ் வீட்டிற்குத் தேவையான பொருள்களை அதில் பட்டியலிட்டுள்ளார்.
செயற்கை நுண்ணறிவின் துணையுடன் ‘வைப் கோட்’ முறையில் அதனை வடிவமைத்துள்ளதாகச் சொன்ன அவர், “இந்தச் செயலியின்மூலம், தேவையான பொருள்களைத் தேடி, அளவுகளையும் குறிப்பிட்டு, அதனை வாட்ஸ்அப் மூலம் அனுப்ப முடியும்,” என்றார்.
ஒருவாரகால உழைப்பில் இந்த இணையப்பக்கம் உருவானதாகக் கூறிய அமானுல்லாஹ், இது எளிய பயனர் அனுபவத்தை வழங்குவதுடன் ஆங்கிலம், தமிழ் என இரு மொழிகளிலும் பட்டியலிடலாம் என்றும் சொன்னார்.
இதில் உள்ள பொருள்களைத் தவிர, பிற பொருள்களையும் இணைக்கும் வசதி அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய இவர், “தமிழ் மட்டுமே தெரிந்தவர்களும், இருமொழித்திறன் பெற்றவர்களும் இதனைப் பயன்படுத்த முடியும். நேரடியாக வாட்ஸ்அப் மூலம் பட்டியல் அனுப்பினால் சில பொருள்களை மறக்க வாய்ப்புள்ளது. இந்தப் பட்டியல் அதற்கும் உதவும்,” என்றார்.
https://www.infocomonline.com/vaangivaanga/ எனும் இந்த இணையப்பக்கத்தை அனைவரும் இலவசமாகப் பயன்படுத்தலாம்.