முட்டை உண்ண விரும்பாத சைவப் பிரியர்களும் விரும்பக்கூடிய சைவ ‘முட்டை’யைச் சிங்கப்பூர்க் கடைகளில் ஆகஸ்ட் மாதத்தில் எதிர்பார்க்கலாம்.
தேசிய தினத்துக்கு முன்பே இது சாத்தியமாகும் என்கிறார் ‘அக்ரோகார்ப்’ (Agrocorp) நிறுவனத் தலைமை நிர்வாகி விஷால் விஜய், 37.
பருப்பிலிருந்து தயாரிக்கப்படும் இந்தச் சைவ முட்டை தற்போது https://herby-vore.com/ இணையத்தளத்தில் மட்டுமே விற்கப்படுகிறது.
‘ஹெர்பிவோர்’ வணிக முத்திரையுடன் கூடிய பொருள்களை ‘அக்ரோகார்ப்’ நிறுவனம், பட்டாணியால் செய்யப்பட்ட பனீருடன் (Plant Protein Block) 2021ல் தொடங்கியது.
சிங்கப்பூர்த் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்துடன் (எஸ்ஐடி) மேற்கொண்ட இணை ஆராய்ச்சி மூலம், ‘ஜஸ்ட் லைக் சீஸ்’ (Just Like Cheese) எனும் பெயரில் 2023ல் மூன்று விதமான பாலில்லா பாலாடைக்கட்டிகளை வெளியிட்டது ‘ஹெர்பிவோர்’. அதேபோல் சைவ முட்டையும் ‘எஸ்ஐடி ஆதரவோடு தற்போது மலேசியாவில் உற்பத்தியாகிறது.
‘ஜஸ்ட் லைக் சீஸ்’, பட்டாணியால் செய்யப்பட்ட பனீர் இரண்டையும் ‘ஃபேர்பிரைஸ் ஃபைனஸ்ட்’, ‘ரெட்மார்ட்’ போன்ற கடைகளில் வாங்கலாம்.
இவை அனைத்தும் பால், சோயா, குளூட்டன், மரபணு மாற்றப்பட்ட மூலப்பொருள்கள் ஆகியவற்றைத் தவிர்த்துத் தயாரிக்கப்படும் பொருள்கள்.
திரு விஷாலின் குடும்பத்தினர் அனைவரும் சைவம்தான்.
தொடர்புடைய செய்திகள்
“நீடித்த நிலைத்தன்மைமிக்க உணவுகளை வழங்குவதே எங்கள் நோக்கம்,” என்றார் திரு விஷால்.
சிங்கப்பூரில் தொடங்கி உலகமயமான நிறுவனம்
உலக வேளாண் சரக்கு வணிகப் பெருநிறுவனங்களில் ஒன்றான ‘அக்ரோகார்ப்’, ஆண்டுக்குக் கிட்டத்தட்ட S$4 பில்லியன் வருவாய் ஈட்டுகிறது.
சிங்கப்பூரில் தொடங்கப்பட்ட நிறுவனம் என்பது இதன் சிறப்பம்சம்.
1990ல் கோல்மேன் சாலையில் கண்ணாடி இல்லாத அலுவலகத்தில் தொடங்கிய ‘அக்ரோகார்ப்’ இந்த அளவு முன்னேறியுள்ளதற்குக் காரணம் திரு விஷாலின் பெற்றோரின் உழைப்பே.
மும்பையில் வளர்ந்த தந்தை விஜய் ஐயங்கார், ‘ஐஐடி’யில் பொறியியல் பட்டமும் கார்னெல் பல்கலைக்கழகத்தில் ‘எம்பிஏ’ பட்டமும் பெற்றபின் லண்டனில் பணியாற்றினார். பின்னர் அந்நிறுவனத்தின் கிளையைத் திறக்கச் சிங்கப்பூருக்கு 1986ல் வந்தார். சில முதலீட்டாளர்களுடன் இணைந்து 1990ல் சிங்கப்பூரில் ‘அக்ரோகார்ப்’பைத் தொடங்கினார்.
‘அக்ரோகார்ப்’ என்ற நிறுவனத்தின் பெயரையும் சின்னத்தையும் (logo) உருவாக்கியவர் அவரது மனைவி அகிலா.
திரு ஐயங்காரின் சிறுவயது நண்பர் ரவி ராகவன் இணை நிறுவனராகவும் பங்குதாரராகவும் இணைந்தார்.
இன்று 50 நாடுகளில் தானியங்கள், சீனி, முந்திரிப் பருப்பு, சோளம், கோதுமை, பாதாம், பிஸ்தா என 30க்கும் மேற்பட்ட வேளாண் பொருள்களுடன் சரக்கு வணிகம் செய்துவருகிறது அக்ரோகார்ப். ஆண்டுக்கு 10 மில்லியன் டன்னுக்கும் அதிகமான பொருள்களை உலகெங்கும் விநியோகிக்கிறது.
“உணவு விலைகளைக் கட்டுப்படுத்துவதிலும் விநியோகச் சங்கிலியைச் சீர்படுத்துவதிலும் நாங்கள் முக்கியப் பங்காற்றுகிறோம்,” என்றார் திரு விஷால்.
தந்தையின் வர்த்தகத்தை வழிநடத்தும் மகன்கள்
தந்தை தொடங்கிய வர்த்தகத்தில் தலைமை நிர்வாகிப் பொறுப்பை 2024 பிப்ரவரியில் ஏற்றார் திரு விஷால். அதற்கு முன்பே, 2016ல் அவர் அக்ரோகார்ப்பில் பணியாற்றத் தொடங்கிவிட்டார்.
அவருடைய தம்பி திரு அபினவ் விஜய், 33, அக்ரோகார்ப்பில் இயக்குநராகவும் நீடித்த நிலைத்தன்மைத் தலைவராகவும் பணியாற்றிவருகிறார். தந்தை நிர்வாகத் தலைவராகவும் தாயார் இயக்குநராகவும் செயல்படுகின்றனர்.
“தந்தையிடம் எனக்குப் பிடித்த அம்சம், தொழில் ரீதியாக யாருடனாவது விரிசல்கள் ஏற்பட்டிருந்தாலும் அடுத்த முறையும் அவருடன் வர்த்தகம் செய்யத் தயங்கமாட்டார்,” என்றார் திரு விஷால்.
மாறிவரும் உலகச் சூழலுக்கேற்பப் புதிய பரிமாணங்கள்
அமெரிக்கச் சுங்க வரி விதிப்பு, செங்கடல் சச்சரவு, ரஷ்யா-உக்ரேன் போர் போன்ற பலவற்றையும் சமாளிக்கவேண்டியிருந்தாலும், ஒவ்வொரு பிரச்சினையிலும் புதிய வாய்ப்புகளைத் தேடுகிறது அக்ரோகார்ப்.
“எடுத்துக்காட்டாக, கொவிட்-19 காலகட்டத்தில் என்டியுசிக்குப் பதப்படுத்திய உணவுகளைக் கொண்டுவர உதவினோம். ரஷ்யா-உக்ரேன் போரின்போதும் அந்நாடுகளிலிருந்து கோதுமையை இந்தோனீசியாவுக்கு அனுப்புகிறோம்,” என்றார் திரு விஷால்.
சரக்கு வணிகத்துக்கும் அப்பால், உணவு உற்பத்தியிலும் கால்பதித்துள்ளது அக்ரோகார்ப். பருப்பு, பட்டாணிகளிலிருந்து புரதத்தை உற்பத்திசெய்யும் ஆலையைக் கட்டும் பணிகள் ஜோகூரில் தொடங்கின.
“விலைவாசி, நிலப் பற்றாக்குறையினால் சிங்கப்பூருக்குள் உணவைத் தயாரிப்பது கடினமாக உள்ளதால் அண்டை நாடுகளை நாடுகிறோம்,” என்றார் திரு விஷால்.

