சுடச்சுட பரோட்டா வழங்கும் தானியங்க இயந்திரம்

3 mins read
cc9c5022-3063-4fc2-ba42-5bb2cc68b2d3
பிரபலமான ‘ஸ்பிரிங்லீஃப்’ பரோட்டாவை இப்போது ஒரு தானியக்க இயந்திரத்திலிருந்து சுடச்சுட வாங்கிக்கொள்ளலாம். - பட;ம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், ஒன் ஹலால் நேஷன்

உடனே சாப்பிடக்கூடிய பரோட்டாவைச் சுடச்சுட வழங்கும் தானியக்க இயந்திரம் சிங்கப்பூரில் முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

‘ஒன் ஹலால் நேஷன்’ நிறுவனம், ‘ஸ்பிரிங்லீஃப்’ பரோட்டா உணவகம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் உருவான அந்தப் புத்தாக்கம், மாத்தார் ரோட்டில் உள்ள ‘லயன் சிட்டி செயிலர்ஸ்’ காற்பந்துப் பள்ளியில் அமைந்துள்ளது.

இன்றைய பரபரப்பான வாழ்க்கைச்சூழலில், வெளியே பயணிக்கும்போதும் உள்ளூர் சுவைகளைப் பாதுகாப்பான, எளிமையான முறையில் ரசிக்க அது வழிவகுக்கிறது.

வாடிக்கையாளர்களுக்கு 2 பரோட்டாக்கள் அல்லது ஒரு பரோட்டா, ஒரு முட்டை பரோட்டா ஆகிய இரண்டு ‘பரோட்டா-இன்-அ-கப்’ தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

தனித் தனியாக மூடப்பட்ட காகிதக் கோப்பைகளில் பரோட்டாவும் மீன் குழம்பு பொட்டலமும் வழங்கப்படுகின்றன. தானியக்க இயந்திரத்தின் ஒரு பக்கத்தில் சாப்பிடத் தேவையான உணவுக் கருவிகள் வைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு கோப்பையின் விலையும் $3.80 முதல் $5.00 வரை இருக்கும்.

சிங்கப்பூர் உணவு அமைப்பின் வழிகாட்டுதல்களின்படி, பரோட்டா கோப்பைகள் 65 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பராமரிக்கப்படுகின்றன. இதன்மூலம், உணவு நீண்ட நேரம் சூடாகவும் புதியதாகவும் இருக்கும்.

இது வெறும் ஒரு தானியக்க இயந்திரம் என்பதை தாண்டித் தொழில்நுட்பத்தின் மூலம் உள்நாட்டு உணவுக் கடைகளை எடுத்துக்காட்டி நமது சமையல் அடையாளத்தைப் பாதுகாப்பதற்கான முயற்சி என்று ‘ஒன் ஹலால் நேஷனின்’ நிறுவனரும் இயக்குநருமான அமாண்டா அட்டன் கூறினார்.

“சுடச்சுட, உடனடியாகச் சாப்பிடக்கூடிய பிரபலமான உள்நாட்டு உணவு வகைகளில் பரோட்டா சிறந்த தேர்வாக இருந்தது. ‘ஸ்பிரிங்லீஃப்’ ஹலால் சான்றிதழ் பெற்ற நம்பகமான உள்நாட்டு உணவகமாக இருப்பதால், அவர்களுடன் இணைந்து செயல்பட முடிவு செய்தோம்,” என்று அவர் கூறினார்.

தனிப்பயனாக்கப்பட்ட அந்தத் தானியக்க இயந்திரம் குஜராத்தில் வடிவமைக்கப்பட்டு சிங்கப்பூருக்கு இறக்குமதி செய்யப்பட்டது. அந்தத் திட்டத்திற்கான யோசனை மூன்று ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியது எனவும், அதன் முதற்கட்ட அம்சங்கள் நீண்ட ஆய்வுகளுக்குப் பின்பே உருவாயின எனவும் திருவாட்டி அட்டன் தெரிவித்தார்.

கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் கடுமையான சோதனைகள், ‘பேக்கேஜிங்’ ஒப்புதல்கள், வெப்பநிலை கண்காணிப்பு ஆகியவற்றுக்குப் பிறகு, அந்த இயந்திரம் இப்போது செயல்பாட்டில் உள்ளது.

“இந்த இயந்திரத்தில் உணவு நுண்ணலை அடுப்பின் மூலம் மறுபடியும் சூடாக்கப்படுவதில்லை. மாறாக உயர்ந்த வெப்பநிலையில் தொடர்ந்து பராமரிக்கப்படுவதால் உணவு நீண்ட நேரத்திற்குச் சூடாகவும் புதியதாகவும் இருக்கும்,” என திருவாட்டி அட்டன் வலியுறுத்தினார்.

ஒவ்வொரு சுழற்சியும் கவனமாகக் கண்காணிக்கப்படுவதாகவும் உணவு அதிகபட்சம் 12 முதல் 24 மணி நேரத்திற்குள் அகற்றப்படுவதால், எப்போதும் புதிய, உட்கொள்வதற்குப் பாதுகாப்பான நிலையில் உணவு இருப்பதை தாங்கள் உறுதி செய்வதாகவும் திருவாட்டி அட்டன் தெரிவித்தார்.

அவரது குழு, ‘ஸ்ப்ரிங்லீஃப்’ பரோட்டா உணவகத்தின் மத்திய சமையலறையுடன் நெருக்கமாக இணைந்து செயல்படுகிறது. ஒவ்வோர் இயந்திரத்திலும் சுமார் 300 பரோட்டா கோப்பைகள்வரை சேமிக்க முடியும். இருப்பினும், உணவின் புதுப்பிப்புத்தன்மை, வாடிக்கையாளர்களின் தேவை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, எப்போதும் சரியான அளவிலேயே இயந்திரம் நிரப்பப்படுகின்றது.

தினமும் காலை 7 மணிக்கு பரோட்டாவின் சமையல் செய்முறை தொடங்கிவிடுவதாக ‘ஸ்பிரிங்லீஃப்’ பரோட்டா உணவகத்தின் நிறுவனரும் திருவாட்டி அட்டனின் முன்னாள் பள்ளித் தோழருமான சு.வி. குணாளன் குறிப்பிட்டார்.

புதிய ‘பரோட்டா-இன்-அ-கப்’ புத்தாக்கத்தைக் கையில் பிடித்திருக்கும் ‘ஸ்பிரிங்லீஃப் பரோட்டா’ உணவகத்தின் நிறுவனர் சு.வி.குணாளன்.
புதிய ‘பரோட்டா-இன்-அ-கப்’ புத்தாக்கத்தைக் கையில் பிடித்திருக்கும் ‘ஸ்பிரிங்லீஃப் பரோட்டா’ உணவகத்தின் நிறுவனர் சு.வி.குணாளன். - படம்: ஸ்ப்ரிங்லீஃப் பரோட்டா உணவகம்

“நாங்கள் தினமும் பரோட்டாவையும் குழம்பையும் புதிதாகச் சமைக்கிறோம், பரோட்டாவைச் சிறிய துண்டுகளாக வெட்டி, கோப்பைகளில் அடைத்து மூடி விடுவோம். அட்டனின் குழு காலை 8 மணிக்குள் அவற்றைச் சேகரித்து காலை 8.30 மணி முதல் 9.30 மணிவரை இயந்திரத்தில் அடுக்கி வைப்பார்கள்,” என்று அவர் தெரிவித்தார்.

மேலும், ஆரம்ப கால வாடிக்கையாளர்களில் சிலர், குழம்பை நேரடியாகக் கோப்பைக்குள் ஊற்றும்போது பரோட்டா அதிக ஈரமாகிவிடுவதாகக் கூறியுள்ளதை திரு குணாளன் சுட்டினார். அதைச் சரிசெய்யும் நோக்கத்தில், குழம்பைத் தனி கொள்கலனில் வழங்கும் வகையில் ‘பேக்கேஜிங்’கை மேம்படுத்துவது குறித்து தமது குழு சிந்தித்து வருவதாக அவர் கூறினார்.

உடல்நலத்தைக் கவனிப்பவர்களுக்கு உகந்தவாறு உயர் ‘ஃபைபர்’ பரோட்டாவும், ‘நாசி கோரேங் கம்போங்’, ‘மீ கோரேங்’, ‘பீஹூன் கோரேங்’ போன்ற ‘கோரேங்-இன்-அ-கப்’ தேர்வுகளும் இப்போது அந்த இயந்திரத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

தொடர்ந்து அதிகரிக்கும் தேவை காரணமாக, ஆகஸ்ட் இறுதிக்குள் பள்ளிகள், தொழிற்சாலைகள், அலுவலகக் கட்டடங்கள் போன்ற இடங்களில் மேலும் நான்கு பரோட்டா இயந்திரங்கள் நிறுவப்படும் என திருவாட்டி அட்டன் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்