தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உள்ளூர்ப் பாடகர் மலர்விழிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

2 mins read
bbcf8556-02f8-4426-a481-3f0f2f391979
‘மலரும் நினைவுகள்’ நிகழ்ச்சி வழியாக வாழ்நாள் சாதனையாளர் விருதை வென்ற மூத்த கலைஞர் மலர்விழி சச்சிதானந்தன். - படம்: மலரும் நினைவுகள்

தொலைக்காட்சியிலும் உள்ளூர் மேடை நிகழ்ச்சிகளிலும் பாடிப் பெயர்பெற்ற மூத்த பாடகர் மலர்விழி சச்சிதானந்தனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது.

இரண்டாவது ஆண்டாக நடைபெறும் உள்ளூர், தமிழ் ‘மலரும் நினைவுகள் நிகழ்ச்சி’, முதன்முறையாக வழங்கும் இந்த விருதைத் திருவாட்டி மலர்விழி, 60, ஏற்கவுள்ளார்.

வரும் சனிக்கிழமை (ஏப்ரல் 5) கிரேத்தா ஆயர் சமூக மன்றத்தில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் அவருக்கு அந்த விருது அளிக்கப்படும்.

நாற்பது ஆண்டுகளாக நீடிக்கும் கலைத்துறை அனுபவம் மூலம் தாம் கற்றதும் பெற்றதும் ஏராளம் என்று தமிழ் முரசுக்கு அளித்த நேர்காணலில் அவர் கூறினார்.

மூன்று பெண் பிள்ளைகளில் மூத்தவராகப் பிறந்த திருவாட்டி மலர்விழி, தம் தந்தையும் புகழ்பெற்ற முன்னாள் இசைக்கலைஞருமான சச்சிதானந்தனின் வழிகாட்டுதலைப் பெற்றவர்.

காவல்துறையில் முழுநேரமாகப் பணியாற்றிய தம் தந்தை, ஆர்வத்தால் இசைத்துறையின்பால் ஈர்க்கப்பட்டு நேரடி இசை நிகழ்ச்சியை நடத்தியதாக அவர் கூறினார்.

“சிங்கப்பூரில் தமிழ் இசைத்தட்டை முதன்முதலாக வெளியிட்ட பெருமை என் தந்தையைச் சேரும்,” என்று திருவாட்டி மலர்விழி கூறுகிறார்.

அக்காலத்தில் சிங்கப்பூரில் செயல்பட்டு வந்த வெண்ணிலா கலையரங்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்த தம் தந்தை, விண்ணொளி இசைக்குழுவையும் நிறுவியதாக அவர் குறிப்பிட்டார்.

நல்ல பாடல் வரிகளின் பொருளைச் சிந்தனையுடன் ரசித்த மனப்போக்கு நிலவியதைத் திருவாட்டி மலர்விழி சுட்டினார்.
நல்ல பாடல் வரிகளின் பொருளைச் சிந்தனையுடன் ரசித்த மனப்போக்கு நிலவியதைத் திருவாட்டி மலர்விழி சுட்டினார். - படம்: மலரும் நினைவுகள்

“பள்ளி விடுமுறை நாள்களில் இசை நிகழ்ச்சிகள், கச்சேரிகள் ஆகியவற்றுக்குச் செல்வேன். 1970களில் சவுத் பிரிட்ஜ் ரோட்டில் நடைபெற்ற நவராத்திரி விழா ஒன்றின்போது பாடத் தொடங்கினேன். அப்போது எனக்கு வயது 13,” என்றார் திருவாட்டி மலர்விழி.

விக்டோரியா கலையரங்கம் போன்ற பல்வேறு இடங்களில் பாடிய அவர், 1982ஆம் ஆண்டு தம் 17வது வயதில் முதன்முறையாக உள்ளூர்த் தொலைக்காட்சியில் பாடத் தொடங்கினார். அந்த ஆண்டில் நடைபெற்ற கலைத்திறன் பாட்டுப் போட்டியில் இரண்டாவது பரிசு பெற்றதை அடுத்து, சிங்கைக் கலைஞர் வட்டத்தில் புகழ் பெற்றார்.

திருவாட்டி மலர்விழி முறையாக வாய்ப்பாட்டு கற்றவரல்லர். மேடை நிகழ்ச்சிக்கான ஒத்திகைகளில் தொடர்ந்து பாடியதன் மூலமே அவரது குரல் வளம்பெற்றது.

முன்னைய காலத்தில் ஒலிப்பதிவுத் தொழில்நுட்பத்தில் நீக்குப்போக்கு குறைவாக இருந்ததால் அதனை ஈடுகட்ட இசைக்கலைஞர்களும் தொழில்நுட்பர்களும் கட்டுக்கோப்புடன் இருந்ததை அவர் நினைவுகூர்ந்தார்.

நல்ல பாடல் வரிகளின் பொருளைச் சிந்தனையுடன் ரசித்த மனப்போக்கு நிலவியதைத் திருவாட்டி மலர்விழி சுட்டினார். “காலத்தை விஞ்சிய பாடல்களில் தனிப்பட்ட கவர்ச்சி, உணர்ச்சிகளின் தீவிரம் ஆகியவற்றை இன்றும் வெகுவாக ரசிக்கிறேன்,” என்று அவர் கூறினார்.

“ஆன்மிகம், பக்தி, தத்துவ உண்மைகள் போன்றவை இதயங்களை எளிதில் சென்றடைகின்றன. கவியரசு கண்ணதாசனின் பாடல் வரிகள், ஆழமாகத் தமிழ் படிக்காதவர்களையும் தமிழைக் காதலிக்க வைக்கும்,” என்றார் திருவாட்டி மலர்விழி.

“மலரும் நினைவுகள் நிகழ்ச்சி வழியாக இந்த அங்கீகாரம் எனக்கு வழங்கப்படவிருப்பதை நினைத்து மகிழ்ச்சியாக இருக்கிறது. கடந்த 40 ஆண்டுகளாக நீடிக்கும் இந்த இசைப் பயணத்தில் எனக்குப் பக்கபலமாக இருந்தவர்களுக்கு மனமார்ந்த நன்றியைக் கூறி விருதைப் பணிவோடு ஏற்றுக்கொள்கிறேன்,” என்றார் திருவாட்டி மலர்விழி.

குறிப்புச் சொற்கள்