தாயின் கருவில் இருக்கும்போதே தமது கலைப் பயணம் தொடங்கிவிட்டதெனக் கூறலாம் என்று கூறியுள்ளார் பல்திறன் வித்தகரான திருமதி விக்னேஷ்வரி வடிவழகன்.
கலைத்துறையில் இவரது முதல் குரு இவரது தாயாரான, சிங்கப்பூரின் முதல் இந்தியப் பெண் தாளவாத்தியக் கலைஞர் மனுநீதிவதி முத்துசாமி. இவரது தந்தை, தாத்தா எனக் குடும்பத்தினர் பலரும் கலைத்துறை சார்ந்தவர்கள்.
நடனமணி, நடிகை, பாடகி, இசைக்கலைஞர், பயிற்றுவிப்பாளர், கலைப் போட்டிகள், தேர்வுகளுக்கு நடுவர் போன்ற பல்வேறு பரிமாணங்கள் கொண்ட விக்னேஷ்வரி, தமிழ் முரசின் ‘ஆய கலை அரிய கலைஞர்’ வலையொளித் தொடரில் தம் கலைப்பயணம் குறித்துப் பகிர்ந்துகொண்டார்.
மூன்றரை வயதில் முறைப்படி தொடங்கிய நடனப் பயிற்சி மூலம் கலைத்துறையில் இவர் கால்பதித்தார்.
மிகச் சிறு வயதில் கலைத்துறையைத்தான் வாழ்க்கைத் தொழிலாகத் தேர்ந்தெடுக்கப் போவதாகத் தாம் கூறிவந்ததையும் சிங்கப்பூர் ஒரு கட்டத்தில் கலைகளுக்கான முக்கிய இடமாக விளங்கப் போகிறது என்று நம்பிக்கையுடன் சொன்னதையும் பின்னர் அதுவே உண்மையானதையும் நேர்காணலில் குறிப்பிட்டார்.
பல்வேறு இசைக்கருவிகளை வாசிப்பதிலும் தேர்ச்சி பெற்றுள்ளார். குறிப்பாக, அதிகமானோர் இப்போது வாசிக்காத ‘ஜலதரங்கம்’ எனப்படும் நீரலை இசைக்கருவியைத் திறம்பட வாசிக்கக்கூடியவர் விக்னேஷ்வரி.
தமிழ் முரசு வாசகர்களுக்காகச் சிறிய இசைக் குறிப்பு ஒன்றை உருவாக்கி, ஜலதரங்கத்தில் அதை வாசித்தும் காட்டினார்.
பல்வேறு கலைகளைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற சிறுவயதுத் தாகம் தணியாமல் தொடர்வதாகக் கூறும் இவர், சிங்கப்பூர் இந்தியப் பல்லிய இசைக்குழுவின் நடத்துநராகவும் மூத்த பயிற்றுவிப்பாளராகவும் உள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
பிற இன மாணவர்களுக்கு இசையோடு மிகச் சிறிய அளவிலாவது தமிழ் எழுத்துகளையும் அறிமுகப்படுத்துகிறார் இவர்.
இவரது நடன வகுப்புகளில் பாடலுக்கு ஏற்ப நடன அசைவுகளைத் தருவதற்காகப் பிற இன மாணவர்கள் கூடுதல் முயற்சி எடுத்து, தமிழைப் புரிந்துகொண்டு நடனமாடுவது தனி அழகு என்கிறார்.
திரைத்துறையில் பன்முகக் கலைஞரான கமல்ஹாசன், 90 வயதைக் கடந்தும் துடிப்புடன் இயங்கும் நடிகை வைஜெயந்தி மாலா, இசையமைப்பாளர் இளையராஜா போன்றோரை மிகவும் பிடிக்கும் என்று கூறிய விக்னேஷ்வரி அதற்கான காரணங்களையும் விளக்கினார்.
இளையராஜா இசையில் பாடும் வாய்ப்பு கிடைத்ததை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார்.
கலைகள் மனித மனத்தைப் பக்குவப்படுத்தும், ஒழுங்கையும் கட்டுப்பாட்டையும் தரும் என்று குறிப்பிட்ட விக்னேஷ்வரி சிறப்புத் தேவையுடைய பிள்ளைகளுக்கும் பயிற்றுவித்துள்ளார்.
சாதாரண செயல்களைப் பயில்வதற்குக்கூட அதிக காலம் தேவைப்படும் நிலையில் உள்ள அத்தகைய பிள்ளைகள் இசையை மிகவும் ஆர்வமாகப் பயின்றதையும் அதன்வழி அவர்களிடம் ஆக்ககரமான மாற்றங்கள் ஏற்பட்டதையும் நினைவுகூர்ந்தார்.
கலை பயில்வதால் விளையக்கூடிய நன்மைகள் ஏராளம் என்று கூறியதுடன், இளம் வயதில் சற்றே பாதை மாறி, குண்டர் கும்பல் செயல்பாடுகளில் ஈடுபட்ட சிலர் தம்மிடம் மாணவர்களாகச் சேர்ந்ததையும் இசையால் பக்குவப்பட்டு அவர்கள் தற்போது சமூகத்தில் உயர்நிலையில் இருப்பதையும் எடுத்துக்கூறினார்.
திரைத்துறை வாய்ப்புகள் பதின்ம வயதிலேயே வரத் தொடங்கினாலும் அப்போதைய சூழலில் அதை ஏற்றுக்கொள்ள இயலவில்லை என்றும் எதிர்காலத்தில் ஒருவேளை அதைப் பரிசீலிக்கக்கூடும் என்றும் குறிப்பிட்டார்.
இயக்குநர் பாலச்சந்தரின் படங்களில் இடம்பெற்ற புகழ்பெற்ற பாடல்கள் இரண்டுக்கு இவர் அரிய முறையில் நடனம் அமைத்து, ஆடியதை நேரில் பார்த்து வியந்த பாலச்சந்தர் திரைத்துறைக்கு வரும்படி வலியுறுத்தியதைக் கூறினார்.
‘நாட்டிய ஜோதி’, ‘கலைகளின் அரசி’, ‘கலைத்தாய்’, பிரதான விழா விருதுகள் எனப் பல்வேறு விருதுகளை வென்றுள்ள விக்னேஷ்வரி, கலைத்துறைச் சாதனையாளர்களுக்குக் குடும்ப ஆதரவு முக்கியம் என்றார்.
சிறுவயதில் பெற்றோர், உடன் பிறந்தோர், திருமணத்திற்குப்பின் கணவர் வடிவழகன் மட்டுமன்றி அவரது பெற்றோரின் பேராதரவும் கிட்டியதை எடுத்துக்கூறிய அவர், தொடர்ந்து சாதிப்பதற்கான உந்துசக்தி அது என்றார்.