தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

குறிக்கோளை எட்ட உதவும் இலக்குப் பலகை

2 mins read
புத்தாண்டிற்கான குறிக்கோள்கள் எதுவாயினும் அவற்றை அடைய இலக்குப் பலகை நமக்குக் கைகொடுக்கலாம் 
0131cade-7879-444a-b27e-72606204c44f
மின்னிலக்க இலக்குப் பலகைகளை ‘கேன்வா’ (Canva) போன்ற இலவச இணைய வடிவமைப்புச் செயலியின் துணையுடன் உருவாக்கலாம்.  - படம்: ‘கேன்வா’ இணைய வடிவமைப்பு கருவி

ஒவ்வொரு புத்தாண்டின்போதும் புதுப்புது இலக்குகளை வகுத்துக்கொள்வது பலருக்கும் வழக்கமாக இருக்கலாம்.

அப்படி வகுத்துக்கொண்ட இலக்குகளும் எடுத்துக்கொண்ட தீர்மானங்களும் குறித்த காலத்தில் நிறைவேற்றப்பட்டனவா என்பது கேள்விக்குறிதான்.

இந்நிலையில், அத்தகைய புத்தாண்டுத் தீர்மானங்களை, புதிய இலக்குகளை எட்ட இலக்குப் பலகை (Vision Board) நமக்கு உதவலாம்.

வாழ்க்கை செல்லும் பாதையை இலக்குப் பலகை குறிக்கிறது. மேலும், அவற்றை உருவாக்குவதற்கென விதிமுறைகள் இல்லை. 

காட்சி வடிவத்தில் இலக்குகளை ஓர் இலக்குப் பலகையில் வைப்பது அவற்றை நோக்கி நம்மை உறுதியுடன் நடைபோட வைக்கும். இலக்குகளை காட்சிப்படுத்துவதால் அவற்றை நிறைவேற்ற மிகுந்த நம்பிக்கை பிறக்கிறது. அதுமட்டுமல்லாமல், இலக்குகளை அடைந்தால் எப்படி இருக்கும் என்று பார்ப்பதற்கும் இலக்குப் பலகை உதவுகிறது. 

இலக்குப் பலகையை உருவாக்குவது எப்படி? 

உங்கள் வாழ்க்கையில் மாற்றம் தேவைப்படும் ஒரிரு அம்சங்களைப் பற்றி சிந்தியுங்கள். உடல்நலம், கல்வி, பணி, உறவுகள் என அவற்றை வகைப்படுத்துங்கள். இவை குறுகியகால அல்லது நீண்டகால இலக்குகளா என்பதை முடிவுசெய்வதும் முக்கியம். 

உதாரணத்துக்கு புத்தாண்டில் பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் செய்வது ஒரு தீர்மானமாக இருந்தால், அதற்கேற்ப ஐஃபில் கோபுரம் (Eiffel Tower), லூவர் (The Louvre) அரும்பொருளகம் போன்ற படங்களை சேகரித்து உங்கள் இலக்குப் பலகையில் வைக்கலாம். இந்த இலக்கை அடைந்தால் என்ன ஆகும் என்ற கண்ணோட்டமே ஓர் இலக்குப் பலகையை உருவாக்குகிறது. 

வகைப்படுத்திய பிறகு அவற்றை எடுத்துக்காட்டும் படங்களை பழைய செய்தித்தாள்கள், நாளிதழ்களிலிருந்து எடுத்து அவற்றை ஒரு காகிதத்தில் ஒட்டவும். 

தொழில்நுட்பம் தற்போது நம் விரல் நுனிகளில் இருப்பதால் பலரும் மின்னிலக்க இலக்குப் பலகைகளை இன்ஸ்டகிராம் அல்லது ‘பின்ட்ரஸ்ட்’ (Pinterest) செயலிகள் மூலம் படங்களை சேகரிக்கலாம். அப்படிச் சேகரித்த படங்களை ‘கேன்வா’ (Canva) போன்ற இலவச இணைய வடிவமைப்புச் செயலியின் மூலம் உங்களுக்கான இலக்குப் பலகையை உருவாக்கலாம். 

நீங்கள் தேர்ந்தெடுக்கும் படங்கள் பார்வைக்குத் தெளிவாக, கவர்ச்சியாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அதுமட்டுமல்லாமல், உங்கள் இலக்குப் பலகை அடிக்கடி கண்ணில் படும்படியான இடங்களில் வைத்துக்கொள்வது முக்கியம். படுக்கை அறையில், அலுவலக மேசையில் அல்லது கைப்பேசியின் ‘ஸ்கிரீன்சேவர்’ ஆகவும் வைக்கலாம்.

இலக்குகள் மாறலாம் 

குறிக்கோள்களை அடைய உதவும் இலக்குப் பலகை ஓர் அற்புதமான கருவியாக இருப்பினும், அவற்றைச் செயல்படுத்த நம் சொந்த முயற்சியும் தேவை. இதனால், நம் யோசித்து வைத்திருக்கும் இலக்குகள் காலத்துக்கு ஏற்ப மாறலாம்.  மாற்றங்கள் பெரும்பாலும் நமக்கு அச்சத்தை அளிக்கலாம். அந்த மாற்றங்களை பரந்த உள்ளத்துடன் வரவேற்று உங்கள் இலக்குப் பலகையை மாற்றியமைப்பது தவறன்று.

சிறிதளவு படைப்பாற்றல், கைப்பிடி நம்பிக்கை, நிறைய முயற்சி கலந்த ஓர் இலக்குப் பலகை புத்தாண்டில் புதிய வளர்ச்சி வாய்ப்புகளுக்கு வழிவகுக்கும் என உறுதியாக நம்பலாம்!

குறிப்புச் சொற்கள்