ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு சிங்கப்பூரில் ‘வி‌‌‌ஷால்-சேகர்’ இசை நிகழ்ச்சி

ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு சிங்கப்பூரில் ‘வி‌‌‌ஷால்-சேகர்’ இசை நிகழ்ச்சி

2 mins read
dd8006cc-cdd3-481a-99af-0082641bf0c1
வி‌‌‌ஷால் தத்லானி (இடது) - சேகர் ரவ்ஜியானி. - படம்: ஏற்பாட்டுக் குழு

இந்திய திரையிசையில் தமிழ், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் பிரபல பாடல்களுக்கு இசையமைத்தும் பாடியும் உள்ள விஷால் - ஷேகர் ஆகியோரின் நேரடி இசை நிகழ்ச்சி வரும் அக்டோபர் 4 ஆம் தேதி சிங்கப்பூரில் நடைபெறவுள்ளது.

தனித்துவமான விஷால் தத்லானியின் குரலில் வெளிவந்த கத்தி திரைப்படத்தின் ‘ஆத்தி என நீ’ பாடல், ரோமியோ ஜூலியட் திரைப்படத்திலிருந்து ‘தூவானம் தூவ தூவ’ பாடல், வணக்கம் சென்னை படத்தின் ‘ஓ பெண்ணே பெண்ணே’ உள்ளிட்டவை ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றன.

இவர்கள் கூட்டணி இசையமைப்பில் வெளிவந்த ‘பதான்’ திரைப்படப் பாடல்களின் தமிழாக்கம் பிரபலமடைந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்தி மொழியில் பல பிரபலமான படங்களுக்கு இவர்கள் இசையமைத்ததுடன் அனைத்துலக விருதுகள் பலவற்றையும் வென்றுள்ளனர்.

சிங்கப்பூரில் ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு இவர்களது நேரடி இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

சிங்கப்பூர் எப்போதுமே தங்களுக்குப் பிடித்த நாடுகளில் ஒன்று என்று கூறிய விஷால்-சேகர் இருவரும், “சிங்கப்பூர் ரசிகர்கள் அளித்து வரும் ஆதரவும் அன்பும் அரவணைப்பும் மறக்க முடியாதது. அவர்கள் அனைவருடனும் மீண்டும் இணைய இந்நிகழ்ச்சி ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும் எனக் கருதுகிறோம்,” என்றனர்.

மேலும், துடிப்புமிக்க இசையுடன் அந்த இரவை ரசிகர்களுக்கு வண்ணமயமானதாக மாற்ற ஆவலுடன் காத்திருப்பதாகவும் தெரிவித்தனர்.

இந்த ‘விஷால்-சேகர்’ நேரடி இசை நிகழ்ச்சி த ஸ்டார் தியேட்டர், 1 விஸ்தா எக்ஸ்சேஞ் கிரீனில் அக்டோபர் 4 ஆம் தேதி இரவு 7:30 மணிக்கு நடைபெற உள்ளது. நுழைவுச்சீட்டு விலை 60 வெள்ளியிலிருந்து தொடங்குகிறது.

நுழைவுச்சீட்டுகளைப் பெற இந்த இணையத்தளத்தை நாடலாம்: https://sg.bookmyshow.com/events/TEAMVS24

குறிப்புச் சொற்கள்