வயது ஏற ஏற, பலரது உடல்நலனிலும் மனநலனிலும் பின்னடைவு ஏற்படுகிறது. நரம்புத் தளர்ச்சி, மூட்டு வலி, மறதி எனப் பலவற்றால் பெரியவர்கள் பாதிப்படைகின்றனர்.
இதனால் அவர்கள், முதுமையில் பிறரைச் சார்ந்தே வாழவேண்டிய இக்கட்டான சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர்.
ஒரு சிலரோ முதுமையிலும் இளமையான தோற்றத்துடன் இருக்கின்றனர். வாழ்க்கையைச் சுதந்திரமாக, நோய் நொடியின்றி வாழ்கின்றனர்.
இந்நிலையை எவ்வாறு அடைவது?
உடற்பயிற்சியில் ஈடுபடுதல்
சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். வயதானாலும் துடிப்புமிக்க வாழ்க்கையை மேற்கொண்டால் மறதிநோயால் அவதியுறுவதைத் தடுக்க முடியும் என்கின்றன ஆய்வுகள்.
அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வுகளின்படி, அல்செய்மர்ஸ் நோயால் (Alzheimer’s Disease) பாதிக்கப்படக்கூடிய பெரியவர்களில், அன்றாடம் அதிகம் நடப்போரின் மூளை குறைவான பாதிப்புக்குள்ளானது தெரியவந்தது. எனவே, அன்றாடம் குறைந்தது 3,000லிருந்து 5,000 அடிகளை எடுத்துவைப்பது உடலுக்கு நல்லது.
சுத்தத்தில் கிடைக்கும் சொர்க்கம்
தொடர்புடைய செய்திகள்
நம் மனநிலையின் ஒரு பிம்பமே நம்முடைய சுற்றுச்சூழல் என்று கூறலாம். ஏனெனில், மனம் குழப்பத்தில் இருந்தால், சிந்தனையில் தெளிவு இல்லை என்றால், நம்மைச் சுற்றிலும் அலங்கோலமாக இருக்கும். ஆகவே, மனம் குழப்பத்திலோ வேதனையிலோ ஆழ்ந்தால், வீட்டில் ஏதேனும் ஓர் இடத்தை மட்டும் சுத்தம் செய்துபாருங்கள். ஓரிரு நிமிடங்களுக்காவது மனம் நிம்மதியடையும்.
சுய அன்பின் முக்கியத்துவம்
பிறரின் பிரச்சினைகளைச் செவிமடுக்கும்போது அவர்களைத் தேற்ற ஆறுதலாகப் பேசுவோர், தாங்களே பிரச்சினைகளை எதிர்கொள்ளும்பொழுது தங்களைத் தாங்களே கடிந்துகொள்வதுண்டு.
இவ்வாறின்றி, ஒரு சிக்கலில் இருக்கும்பொழுது நாம் ஆளாகும் பல்வேறு உணர்வுகளை முதலில் கண்டறியவேண்டும். பிறகு, அதற்கேற்றாற்போல, ஆறுதலாகச் சில வார்த்தைகளை நமக்கு நாமே சொல்லிக்கொள்ளவேண்டும்.
நண்பர்களோடு பேசுங்கள்
வயதானாலும், சிலரது அறிவாற்றலும் நினைவாற்றலும் குறையாததற்கு முக்கியக் காரணியாக விளங்குவது, பிறரோடு தொடர்புகொள்வது என்கிறார் நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழக மருத்துவப் பள்ளியின் முனைவர் சான்டரா வைண்டராப்.
இயற்கையோடு இணைந்திருங்கள்
மனம் மிகவும் அலைபாய்கிறதா? இயற்கையை நாடுங்கள்.
நான்கு சுவர்களுக்குள் முடங்கிக் கிடக்காமல் வெளியே செல்வது, குறிப்பாகப் பச்சைப் பசேலென இருக்கும் இடங்களுக்குச் செல்வது ஒருவரின் கவனத்தையும் சிந்தனையாற்றலையும் மேம்படுத்தும் என்கின்றன ஆய்வுகள்.
அதோடு, ஒருவரின் மனநிலையை வெகுவாக மாற்றக்கூடிய தன்மை இயற்கையிடம் இயல்பாகவே உள்ளது.
மின்னிலக்க உலகிலிருந்து விடுபடுங்கள்
‘த டெக் எக்ஸிட்’ புத்தகத்தின் ஆசிரியர் கிளேர் மொரெல், வாரத்தில் ஒரு நாள் கைத்தொலைபேசியைப் பயன்படுத்தாமல் இருக்குமாறு அறிவுறுத்துகிறார். கைக்கு எட்டும் தூரத்தில், கைப்பேசியை வைக்காமல், அது தேவைப்படாத, நீச்சல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடலாம்.
செவித்திறனைப் பாதுகாத்தல்
காது கேளாமையினால் பாதிப்புறும் வயதானவர்களுக்கு, மறதி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
ஏனெனில், ஓசைகளைச் செவிமடுத்து, அவற்றைப் புரிந்துகொள்ளக் கைகொடுக்கும் மூளையின் ஒரு பகுதி, தகவல்களை நினைவில் வைத்துக்கொள்வதற்கான பகுதிக்கு அருகில் அமைந்திருப்பதால், ஓசைகளைக் கேட்காத நிலையில் நினைவாற்றல் நாளடைவில் மந்தமடையக்கூடும்.
இதனால், இரைச்சலான இடங்களில் இருக்கும்பொழுது காதுகளில் ‘இயர்ப்ளக்’ (Earplug) எனப்படும் செவிக்குள் பொருத்தும் கருவியைப் பயன்படுத்துங்கள்.
தரமான உறக்கம்
ஏழு முதல் எட்டு மணி நேரம் வரை உறங்கிய பின்னும் சோர்வாக உணர்கிறீர்களா? இதற்கு உறக்கத்தின் தரம் ஒரு காரணமாக இருக்கலாம்.
பொதுவாக, உறக்கத்தில் நான்கு விதமான நிலைகள் உண்டு. அவற்றில், ஆழ்ந்த உறக்கம், கண்கள் விரைவாக அசையும் நிலை உறக்கம் (REM sleep) எனும் இரண்டும் அறிவாற்றலுக்கு இன்றியமையாதவை எனக் கருதப்படுகின்றன.
ஆழ்ந்த உறக்கத்தின்போது, மூளையின் திசுக்கள் புதுப்பிக்கப்படுகின்றன. கண்கள் விரைவாக அசையும் நிலை உறக்கத்தின்போது, நாள் முழுவதும் நிகழ்ந்த சம்பவங்கள் நெடுநாள் நினைவில் வைத்துக்கொள்ள ஏதுவாக ஒருங்கிணைக்கப்படுகின்றன.
அன்றாடம் காலையில் குறிப்பிட்ட நேரத்தில் எழுவதும் இரவில் குறிப்பிட்ட நேரத்தில் உறங்கச் செல்வதும் நம் உறக்கத்தின் தரத்தை, குறிப்பாக, ஆழ்ந்த உறக்கம், ‘ரெம்’ உறக்கம் ஆகியவற்றை மேம்படுத்தும். உறங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக மின்னணுச் சாதனங்களைப் பார்ப்பதைத் தவிர்ப்பது நல்லது.

