கழுத்துத் தசைகளை வலுவாக்குவதற்கான வழிகள்

கழுத்துத் தசைகளை வலுவாக்குவதற்கான வழிகள்

படம்: பிக்சாபே

17 Nov 2026 - 6:19 am

3 mins read

இந்த நவீன உலகம் நமது கழுத்துப் பகுதிக்கு மிகுந்த சவால்கள் நிறைந்த இடமாக மாறியுள்ளது.

சில நேரங்களில் நமது மனிதத் தலையின் எடையைப் பற்றி யோசித்துப் பார்ப்பது நல்லது. நாம் நேராக அமர்ந்திருக்கும்போதோ நின்றிருக்கும்போதோ, நமது தலை கழுத்திற்குத் தரும் எந்திரவியல் சுமை வெறும் 12 பவுண்டு (கிட்டத்தட்ட 5.4 கிலோ) மட்டுமே என்று லண்டனில் உள்ள குவின்ஸ் மருத்துவமனையின் ‘என்எச்எஸ்’ முதுகெலும்பு நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் ஆன்டணி கோஷ் கூறுகிறார். இதனால் கழுத்திற்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஆனால், உலகம் முழுவதும் நம்மில் பில்லியன்கணக்கானோர் நமது உடலைக் கூன் விழுந்தவாறு நாளின் பெரும் பகுதியைச் செலவிடுகிறோம். நாம் நமது மடிக்கணினிகள், திறன்பேசிகள் ஆகியவற்றை நோக்கி உடலை வளைக்கும்போது, கழுத்தின்மீது விழும் எடையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறோம்.

அந்த அசௌகரியமான, கீழ்நோக்கிப் பார்க்கும் நிலையில், தலை கழுத்திற்குக் கொடுக்கும் சுமை ஏறக்குறைய 60 பவுண்டு (கிட்டத்தட்ட 27.2 கிலோ) வரை அதிகரிக்கிறது என்று கோஷ் கூறுகிறார்.

“எனவே, உங்கள் கழுத்து தாங்கிக்கொள்ள முயலும் அழுத்தம் உண்மையில் மிக மிக அதிகம்,” என்று அவர் விவரிக்கிறார்.

அந்த அழுத்தத்தைச் சமாளிக்க பின்வரும் ஐந்து பயிற்சிகள் உங்களுக்கு உதவக்கூடும்.

தலையைத் திருப்புதல்

நீங்கள் கழுத்து வலியால் அவதிப்படுகிறீர்கள் என்றால், தசை வலிமையையும் அசைவையும் மீண்டும் பெற ஓர் எளியப் பயிற்சியை ‘என்எச்எஸ்’ பரிந்துரைக்கிறது.

நிமிர்ந்து அமர்ந்த நிலையிலோ மல்லாந்த படுத்த நிலையிலோ, உங்களால் முடிந்தவரை வலதுபுறமாகத் திரும்பிப் பார்த்து இரண்டு நொடிகள் அப்படியே இருக்கவும். அப்போது உங்கள் கழுத்தின் எதிர்ப் பகுதி லேசாக இழுக்கப்படுவது போல் நீங்கள் உணர்வீர்கள். பின்னர் இயல்பு நிலைக்குத் திரும்பி, உங்களால் முடிந்தவரை இடதுபுறமாகப் பார்க்கவும். இந்தப் பயிற்சியை இரண்டு அல்லது மூன்று முறை திரும்பச் செய்யவும்.

நல்ல உடல் தோரணையைக் கொண்டிருத்தல்

சரியான கழுத்துத் தோரணையைக் கொண்டிருப்பது மிக முக்கியம். ஏனெனில், தவறான தோரணை உங்கள் கழுத்துத் தசைகளில் கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. அவ்வப்போது கழுத்தை அனைத்துப் பக்கங்களிலும் அசைத்துக்கொண்டே இருப்பது ஒரு சிறந்த யோசனையாகும்.

முன்னோக்கி நீளும் தாடைப் பிரச்சினையைச் சரிசெய்தல்

கணினித் திரையைப் பல ஆண்டுகளாக உற்றுப் பார்த்துக்கொண்டிருப்பது, உங்கள் தலை, தோள்பட்டைக்கு நேராக இருக்க வேண்டிய இயல்பு நிலைக்கு மாறாக, தாடை முன்னோக்கி நீட்டிக்கொண்டிருக்கும் ‘போக்கிங் சின்’ (poking chin) என்ற தவறான தோரணைக்கு வழிவகுக்கும். இருப்பினும், நீங்கள் அமரும் பழக்கவழக்கங்களை மாற்றுவதாலும், எளிய பயிற்சிகளைச் செய்வதாலும் இதைச் சரிசெய்துவிட முடியும்.

நீங்கள் உங்கள் தாடையை உள்ளிழுத்துக்கொண்டே, கழுத்துப் பகுதியை மெதுவாக மேல்நோக்கி நீட்டலாம்.

கழுத்து வளைப்புத் தசைகளின் சகிப்புத்தன்மையை அதிகரித்தல்

தற்போது நாம் பல மணிநேரம் திரைகளைப் பார்த்துக்கொண்டிருப்பதால், நமது கழுத்து வளைப்புத் தசைகளின் சகிப்புத்தன்மையை அதிகரிப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று டாக்டர் கோஷ் விவரிக்கிறார்.

உங்கள் கழுத்து வளைப்புத் தசைகளுக்குப் பயிற்சியளிக்க, முழங்கால்களை மடக்கியும் பாதங்களைத் தரையில் பதியவைத்தும் கட்டிலில் மல்லாந்து படுக்கவும். பின்னர் உங்கள் தாடையை நெஞ்சை நோக்கி உள்ளிழுத்துக் கொள்ளவும்.

உங்கள் ஒரு கையைத் தலையின் பின்புறத்தில் வைத்து, தலையைக் கட்டிலின் மேற்பரப்பிலிருந்து கிட்டத்தட்ட ஓர் அங்குலம் மேலே உயர்த்தவும். அதன்பின் கையை எடுத்துவிட்டு, உங்களால் முடிந்தவரை அந்த நிலையிலேயே தலையைப் பிடித்து வைத்திருக்கவும். தொடக்கத்தில் சில நொடிகள் மட்டுமே இதைச் செய்யுங்கள். ஆனால், படிப்படியாக அதை 30 நொடிகள்வரை அதிகரிக்க முயற்சிக்கவும்.

ஆழமான கழுத்து வளைப்புத் தசைகளுக்கான பயிற்சி

உங்கள் கழுத்து வளைப்புத் தசைகளுக்கு தீவிரமாகப் பயிற்சியளிப்பதற்கான மற்றொரு வழி, தலைசாய்க்கும் வசதி கொண்ட நாற்காலியைப் பயன்படுத்துவதாகும்.

நாற்காலியில் நேராக அமர்ந்து, முன்னால் பார்த்தவாறு, தலையைப் பின்னோக்கி அந்தத் தலைசாய்க்கும் வசதிமீது அழுத்துங்கள். அதன்பின் தாடையை நெஞ்சை நோக்கிக் கீழே கொண்டுவந்து, சில நொடிகள் அப்படியே பிடித்து வைத்துவிட்டு, மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புங்கள். இச்செயலை பலமுறை திரும்பச் செய்யுங்கள்.

காலப்போக்கில், இந்தப் பயிற்சிகள் 21ஆம் நூற்றாண்டு வாழ்க்கை முறையின் சவால்களை எதிர்கொள்ளும் வகையில், உங்கள் கழுத்துப் பகுதியை மேலும் மீள்திறன் கொண்டதாக மாற்ற உதவும்.

குறிப்புச் சொற்கள்