‘எந்த வயதிலும் புதிய முயற்சியைத் தொடங்கலாம்’

2 mins read
e9f2ed82-ee91-41c2-9796-de907cd928b4
‘ஓம் ஜுவல்ஸ்’ நிறுவனர்கள் பி.சிவகுமார் (இடக்கோடி), பி.உமாமகே‌ஷ்வரி (இடமிருந்து இரண்டாவது), தம் குடும்பத்தினருடன். - படம்: ரவி சிங்காரம்

தீபாவளிக்காகப் புதிய தொழில் ஒன்றைத் தொடங்கலாம் என நினைத்து நகை வர்த்தகத்தைத் தொடங்கியுள்ளனர் 52 வயது பி.உமாமகே‌ஷ்வரி-பி.சிவகுமார் தம்பதியர்.

‘ஓம் ஜுவல்ஸ்’ என அழைக்கப்படும் இவ்வர்த்தகம், இந்திய மரபுடைமை நிலையத்தின் தீபாவளிச் சந்தையில் (Festival of Lights) அக்டோபர் 5ஆம் தேதியன்று தொடங்கியது.

“இளம் தொழில்முனைவர்கள் புதிய தீபாவளிக் கடைகள் வைக்கும்போது ஏன் நம்மால் முடியாது?” என்ற கேள்வி இந்த தம்பதியரின் மனத்தில் எழுந்ததால் தொடங்கிய இவ்வர்த்தகம், தற்போது நகைகளை இணையம்வழி விற்கிறது; இல்லத்திற்கு அஞ்சல்வழி அனுப்புகிறது.

குடும்பத்தின் முதல் தொழில்முனைவர்கள்

இந்திய மரபுடைமை நிலையத்தின் தீபாவளிச் சந்தையில் பி.உமாமகே‌ஷ்வரி-பி.சிவகுமார் தம்பதியர்.
இந்திய மரபுடைமை நிலையத்தின் தீபாவளிச் சந்தையில் பி.உமாமகே‌ஷ்வரி-பி.சிவகுமார் தம்பதியர். - படம்: உமாமகே‌ஷ்வரி

தம் குடும்பத்திலேயே முதல் தொழில்முனைவர்களாக இருவரும் இம்முயற்சியில் இறங்கியுள்ளனர்.

தகவல் தொழில்நுட்பத் துறையில் 30 ஆண்டுகளாகப் பணியாற்றிவரும் உமாமகே‌ஷ்வரி, தனியார் வாடகை வாகன ஓட்டுநராகப் பணியாற்றும் சிவகுமார் இருவருக்கும் இது புதிய முயற்சி.

இவ்வர்த்தகம் தற்போது பித்தளை நகைகளையே விற்கிறது.

“பித்தளையைப் பயன்படுத்துவது கவர்ச்சிக்காக மட்டுமல்ல; நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மையையும் அது கொண்டுள்ளது. அதனால் பண்டைய காலத்திலேயே அதை அதிகம் பயன்படுத்தினர்,” என்றார் உமாமகே‌ஷ்வரி.

இந்த தம்பதியருக்கு நெடுநாளாக ‘மீமெய்யியல்’ (metaphysics) மீது ஆர்வம் இருந்துவருகிறது. அதைப் படித்து நடைமுறையில் தம் வாழ்விலும் இருவரும் பயன்படுத்துகிறார்கள்.

“இந்திய சமூகத்தில் பலரும் மீமெய்யியல் பற்றி அவ்வளவாக அறிவதில்லை. சிலருக்குத் தயக்கமும் இருக்கிறது. அனைவரும் நகைகளை விரும்புவதால் நகைகள் மூலம் இது பற்றிய புரிதலை ஏற்படுத்தலாமே என எங்களுக்குத் தோன்றியது.

“இத்தகைய நகைகளை அணிவதால் ஏற்படும் பலன்களை சில வாடிக்கையாளர்கள் அறியாவிட்டாலும் அந்த பலன்கள் அவர்களைச் சென்றடையும்,” என்றார் உமாமகே‌ஷ்வரி.

வேலை, குடும்பம், என பலதரப்பட்ட எதிர்பார்ப்புகள், மன உளைச்சல்கள் இருக்கும் வாழ்வில், படிகங்கள் (crystals) கொண்ட நகைகளை அணிவது உடம்புக்கும் மனத்துக்கும் ஒரு சமநிலையையும் தன்னம்பிக்கையையும் கொண்டுவரும் என்றும் இருவரும் கூறினர்.

பல்லினத்தார், இளையர்களையும் ஈர்க்கும் நகைகள்

“தீபாவளிச் சந்தையில் தங்கம், வெள்ளி பூசப்பட்ட பித்தளை நகைகள் நன்கு விற்பனையாகின. படிகங்கள் பொருத்தப்பட்ட நகைகள் மற்ற இனத்தாரையும் ஈர்த்தன,” என்றார் உமாமகே‌ஷ்வரி.

“முழுமையாகப் பித்தளையால் செய்யப்பட்ட தோடுகளும் சங்கிலிகளும் பாரம்பரிய, நவீன உடைகள் இரண்டுடனும் நன்றாகப் பொருந்துவதால் அவை இளையர்களிடத்தில் நன்றாக விற்பனையாகின,” என்றார் உமாமகே‌ஷ்வரி.

மற்ற இனத்தாரும் படிகம் பொருந்திய நகைகளில் ஆர்வம் கொண்டுள்ளதாகக் கூறினார் உமாமகே‌ஷ்வரி.
மற்ற இனத்தாரும் படிகம் பொருந்திய நகைகளில் ஆர்வம் கொண்டுள்ளதாகக் கூறினார் உமாமகே‌ஷ்வரி. - படம்: உமாமகே‌ஷ்வரி

“நகைகளை வாங்கும்போது அவற்றின் வெளித் தோற்றத்தை மட்டும் பார்க்காமல், அவற்றின் தன்மைகளைப் பற்றியும் மக்கள் மேலும் புரிந்துகொண்டால் பயனடைவர்,” என்றார் உமாமகே‌ஷ்வரி.

குறிப்புச் சொற்கள்