வெறுப்புணர்வைச் சிந்தையில் வைத்திருப்பது என்பது, ‘நஞ்சை நாம் குடித்துவிட்டு மற்றவர் இறக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது போன்றது’ என்று ஒரு கூற்று உண்டு.
பல ஆண்டுகளாக, தென்றல் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தம் நெருங்கிய முன்னாள் தோழியான முல்லை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மீது மிகுந்த மனக்கசப்புடன் வெறுப்புணர்வையும் கொண்டிருந்தார்.
கல்லூரியில் பயிலும் காலத்தில் முல்லை, தென்றலின் நீண்டகால ரகசியத்தை அவர்களின் மற்ற நண்பர்கள் வட்டத்தில் விளையாட்டாகப் பகிர்ந்துகொண்டபோது முளைத்த மனக்கசப்பு, பிறகு விரிசலாக மாறி, உட்பகையாக வளரத்தொடங்கியது.
நாளடைவில் முல்லை செய்தது மன்னிக்க முடியாத துரோகம் என்ற நினைப்பு தென்றலின் எண்ணத்தில் மேலும் ஆழமடைந்தது.
நாள்கள் மாதங்களாகின. மாதங்கள் ஆண்டுகளாகி உருண்டோடின. எனினும், தென்றலின் மனத்தில் தோன்றிய தோழி மீதான மனக்கசப்பும் உட்பகையும் குறையவேயில்லை.
நாளுக்கு நாள் அவரது கோபம் அதிகமானது. விளைவு, தென்றலின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. அவரிடம் பதற்றம் கூடியது; காரணமில்லாக் கவலைகளால் செயல்திறனும் குன்றியது.
எப்படியாவது தன்னைக் காயப்படுத்தியவருக்குத் தொந்தரவு கொடுக்க வேண்டும்; அல்லது ஏதாவது பதிலடி கொடுத்து தம் தோழியை அமைதியில்லாமல் செய்ய வேண்டும் என்று எண்ணினார் தென்றல்.
ஆனால், இவரின் மன அமைதிதான் சீர்குலைந்தது; மற்றவர்களுடனான உறவும் மோசமடைய தொடங்கியது.
தொடர்புடைய செய்திகள்
இதனால் நன்றாகச் சென்ற தென்றலின் வாழ்க்கை ஒருகட்டத்தில் தேக்கமடையத் தொடங்கியது; உடல்நலமும் நலிவடைய ஆரம்பித்தது.
மனக்கசப்பு என்றால் என்ன?
ஒருவர் உங்களைக் காயப்படுத்தும் செயலைச் செய்து நீண்ட காலத்திற்குப் பிறகும் உங்களுக்குக் குறிப்பிட்ட அம்மனிதர்மீது ஏற்படும் கோபம், கசப்பு, வெறுப்பு உள்ளிட்ட பிற எதிர்மறை உணர்வுகள் மனக்கசப்பு என்று குறிப்பிடப்படுகிறது.
கடந்த காலத்தில் ஒருவர் உங்களுக்குச் செய்த ஏதோ ஒரு தீங்கின் காரணமாக நீங்கள் கொண்டிருக்கும் கோபம் அல்லது வெறுப்பு உணர்வே மனக்கசப்பு என்று ஆக்ஸ்ஃபர்ட் அகராதி சுட்டுகிறது.
சினத்தால் விளைந்த சேதம்
ஏதோ ஒரு செயலால், சொல்லால் தீங்கிழைத்தோரை மன்னிக்க முடியாமல், மறக்கவும் முடியாமல் அவதியுறுவோர் தங்களையும் அறியாமல் நாட்பட்ட மன அழுத்தத்திற்கும் தூக்கமின்மைக்கும் ஆளாகின்றனர் என்கிறது மருத்துவ உலகம்.
“பல ஆண்டுகளாக இந்த வெறுப்பையும் காழ்ப்புணர்ச்சியையும் தங்கள் மனத்தில் குவித்து வைத்திருப்பதால் தோன்றும் உடல்சார்ந்த பாதிப்பு பேரழிவை ஏற்படுத்தும்,” என்று எச்சரிக்கிறார் இங்கிலாந்துப் பேராசிரியர் மருத்துவர் ஜேன் ஸ்மித்.
“இத்தகைய உணர்ச்சிகள் நம்மை விழுங்குவதற்கு முன்பு அவற்றைக் களைவது முக்கியம்.” என்கிறார் மருத்துவர் ஜேன்.
இப்பகுதியில் இடம்பெற்ற தென்றலின் கதை எப்போதோ எங்கோ நடந்தது அன்று. இந்த உணர்வு பலரைப் பல சமயத்தில் கட்டிப்போடுகிறது.
அகத்தில் மறைப்பதால் அதிக இழப்பு
மனக்கசப்பைத் தொடர்ச்சியாக அகத்தில் மறைத்து வைப்பது, புறவாழ்விலும் வெளிப்படத் தொடங்கிவிடும்.
இது மாந்தரின் மன, உடல்நலனில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று அனைத்துலக ஆராய்ச்சிகளும் குறிப்பிடுகின்றன.
இது குறித்து மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ‘உதவும் கரங்கள் பிரசாரம்’ எனும் அங்கத்தின் ஓர் அம்சமாக உலகளாவிய ஆய்வொன்று நடத்தப்பட்டது.
இணையத்தில் பயனுள்ள ஆக்கவழி உரையாடல்களை மேற்கொள்வதை நினைவூட்டுவது இதன் இலக்கு.
இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகளிலிருந்து ஏறத்தாழ 2,000 பேர் கொண்ட குழுவிடம் முறையே நடத்தப்பட்ட அந்தக் கருத்தாய்வு பல விவரங்களைக் கண்டறிந்தது.
ஓயாமல் சண்டை போடுவதின் நேரடி விளைவாக தங்கள் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக மூன்றில் ஒரு பகுதியினர் ஆய்வில் ஒப்புக்கொண்டனர்.
சிலருக்கு, இணையம்வழி கலந்துரையாடுகையில் வெறுப்புணர்வை அதிகரிப்பதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவும் ஆய்வின்மூலம் தெரியவந்தது.
குறிப்பாக, சமூக ஊடகங்களில் செய்திகள், கருத்துகள் அல்லது பதிவுகளை இடும்போது மூர்க்கமாக வெறுப்புடன் நடந்துகொள்வதாகப் பங்கேற்பாளர்கள் பரவலாகக் கருத்துரைத்திருந்தனர்.
வெறுப்புணர்வின் சுழற்சியிலிருந்து விடுபடுதல் முக்கியம்
வெறுப்புணர்வால் சீர்கெடும் உணர்வுகள் மனச்சோர்வில் தொடங்கி உடலைப் பலவீனப்படுத்துவதாகவும், அத்துடன் இருதய நோய், செரிமான பிரச்சினைகள், குறைவான நோயெதிர்ப்பு சக்தி உள்ளிட்ட அபாயங்கள் அதிகரிக்கவும் கூடும் என்று மனநலன் சார்ந்த ஆய்வுகள் அறைகூவல் விடுக்கின்றன.
எனவே, இந்த எதிர்மறை உணர்ச்சிகளால் ஒருவரின் சிந்தையைத் தூண்டும் காரணங்களை நினைவுகூர்தல் அவசியம் என்று வலியுறுத்துகின்றனர் மனநல மருத்துவர்கள்.
மன்னிப்பின் மகத்துவம்
இந்த கசப்பான உணர்ச்சிகளின் பிடியைத் தளர்த்துவதற்கு மன்னிப்பு மிகச் சிறந்த கருவி என்கிறார் குளோஸ்டர்ஷியர் பல்கலைக்கழகத்தின் பொதுப் பாதுகாப்புத் துறை பேராசிரியர் மாங்க்டன் ஸ்மித்
“வெறுப்புகளை விட்டுவிடுவதன் மூலம், கோபம், கசப்பு உள்ளிட்ட சுழற்சியிலிருந்து விடுபடலாம், இதனால் குணமடையவும், வளர்ச்சியடையவும் முன்னேறவும் முடியும்.
“இது புண்படுத்தும் நடத்தையை மறப்பது அல்லது மன்னிப்பது பற்றியது அன்று; அந்த அனுபவங்கள் நம்மீது வைத்திருக்கும் பிடியைத் தளர்த்துவது பற்றியது,” என்பது திரு ஸ்மித்தின் கருத்து.
மனக்கசப்பை மறக்கடிக்கும் வழிகள்
கோபத்திற்கான, மனக்காயங்களுக்கான அடிப்படைக் காரணங்களைப் புரிந்துகொள்வது பலன் தரலாம்.
மன்னிப்பை நோக்கிய பயணம் எளிமையானது. ஆனால், ஒருவர் இழைத்த தீங்கை மறக்காமல் அந்தக் கசப்பான உணர்வுகளைப் பிடித்துக்கொள்வது, குறிப்பிட்ட அம்மனிதரை மேலும் காயப்படுத்துவதுடன், அவர்கள் முன்னேற்றத்தையும் தடுக்கிறது.
எனவே, மனத்தால் அவற்றை அகற்ற இயலவில்லை எனில் அதற்குரிய மருத்துவ ஆலோசனைகள், ஆதரவுக்குழுக்களின் வழிகாட்டுதல்களுடன் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பத் தொடங்குவது நன்மை பயக்கக்கூடும் என்று மனநல நிபுணர்கள் கூறுகின்றனர். மன்னிக்கக் கற்றுக்கொள்வதும் நல்லது.
மனமாணா உட்பகை தோன்றின் இனமாணா ஏதம் பலவும் தரும்’ என்கிறது திருக்குறள். அதாவது, மனம் திருந்தாத அளவுக்கு உட்பகை விளைவிக்கும் உணர்வு ஒருவனுக்கு ஏற்பட்டுவிடுமானால், அது அவனைச் சேர்ந்தவர்களையே பகைவராக்கும் கேட்டினை உண்டாக்கிவிடும்.

