எள்ளில் இருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெய் உடலுக்கு உள்ளும் வெளியிலும் பல நன்மைகளை அளிக்கக்கூடியது. தனித்துவமான சுவை, நன்மைகளுக்காக இந்த எண்ணெய் பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த எண்ணெய் பலவகையாகக் கிடைக்கிறது. எனினும், கலப்படமில்லாத செக்கு நல்லெண்ணெய்யே சிறந்ததாகக் கொள்ளப்படுகிறது.
நல்லெண்ணெய்யை ஒருவர் ஒரு நாளைக்கு 25 முதல் 30 மில்லி வரை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். உணவில் சேர்க்கும்போது, குடலியக்கம் சீர்ப்படுகிறது.
நல்லெண்ணெய்யில் உள்ள ஸிங்க் (Zinc) கனிமச்சத்து எலும்புகளில் கால்சியம் இருக்க உதவுகிறது. எனவே எலும்புகள் வலுவுடன் இருக்க கால்சியம் உள்ள உணவுகளுடன், நல்லெண்ணெயையும் சாப்பிடுவது நல்லது.
காலையில் எழுந்து பல் தேய்த்த பின்னர் 25 மில்லி லிட்டர் நல்லெண்ணெய்யை வாயில் ஊற்றி 10 நிமிடம் வாய்க்குள்ளேயே வைத்திருந்து பற்களுக்கிடையே நன்றாகப் படும்படி கொப்பளிக்க நுரைத்து வெண்மை நிறமாக மாறி இருக்கும். பின் அதை வெளியே கொப்பளித்து விடவேண்டும். இப்படிச் செய்வதால் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள், அரிப்பு போன்றவை நீங்கிவிடும். உள் உறுப்புகள் பலம் அடையும். நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும். பல் வலி, ஈறு வீக்கம், தலை வலி சரி செய்யப்படும்.
நல்லெண்ணெய்யை சமையலுக்குப் பயன்படுத்துவதன் மூலம் உடலில் கொழுப்புக் கட்டிகள் ஏற்படுவது குறைகிறது.
சிலருக்கு அதிக உடல்சூட்டால் அடி வயிறு வலி, சிறுநீர் பிரிவதில் சிரமம் ஏற்படும். அவர்கள் அடி வயிற்றுப்பகுதியில் எண்ணெய்யை தேய்த்தால் நிவாரணம் கிடைக்கும்.
மரச்செக்கு நல்லெண்ணெய்யில் சீசேமோல் என்னும் பொருள் நிறைந்துள்ளது. இது இதயத்திற்கும் பலம் சேர்க்கிறது.
நல்லெண்ணெய்யில் உள்ள இன்சுலின் சுரப்பை தடுக்கும் பொருளை எதிர்த்துப் போராடி, உடலில் நீரிழிவு வருவதைத் தடுக்கும்.
நல்லெண்ணெய்யில் உள்ள ஆன்டி-ஸ்பாஸ்மோடிக் சுவாசப் பாதையில் ஏற்படும் பிடிப்புகள் நீங்கி, சரியான முறையில் சுவாசிக்க உதவியாக இருக்கும்.
இதில் உள்ள மக்னீசியம், ரத்த அழுத்தத்தைக் குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும்.
நல்லெண்ணெய்யில் வைட்டமின் ஈ சத்து அதிகம் உள்ளதால் மிகச்சிறந்த ஆன்டி ஆக்சிடென்ட் ஆக செயல்படுகிறது.
நல்லெண்ணெய்யில் ஈஸ்ட்ரோஜென் இருக்கிறது. மெனோபாஸ் காலகட்டத்தில் ஈஸ்ட்ரோஜென் குறைந்து எலும்பு தேய்மானம் ஏற்படும். இதை வரும் முன் தடுக்க வேண்டுமென்றால் நல்லெண்ணெய்யை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
உடலுக்கு நன்மைகள்
வாரத்திற்கு ஒருமுறையாவது தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்துக் குளித்தால் உடல் சூடு குறையும். தலைமுடி வறட்சி நீங்கும். நல்லெண்ணெய் மிகவும் பிரபலமான பல்வேறு க்ரீம்கள், ஆயின்மென்ட், சோப்புகள், லோஷன் மற்றும் பாடி ஸ்கரப் போன்றவற்றில் பயன்படுத்தப் படுகிறது.
நல்லெண்ணெய் சருமத்தில் சுரக்கும் அதிகப்படியான எண்ணெய்ப் பசையைக் கட்டுப் படுத்த உதவுகிறது, முகப்பருக்களால் வரும் தழும்புகளைத் தடுக்கும்.
சரும வறட்சியைத் தடுக்கும். உதடுகளுக்கு ஒரு நல்ல நிறத்தை வழங்கும்.
1 மேசைக்கரண்டி கடலை மாவில் 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, 1 மேசைக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து கலந்து, தோலின் கருமையான பகுதிகளில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும் வெயிலால் ஏற்பட தோல் கருமை நீங்கிவிடும்.
நல்லெண்ணெய்யையும் ரோஸ் வாட்டரையும் சம அளவில் கலந்து, இரவில் படுக்கும் முன் குதிகாலில் தடவி காலையில் வெதுவெதுப்பான நீரால் கழுவிவர குகுதிகால் வெடிப்பு நீங்கும்.
நல்லெண்ணெய்யைக் குளிர்படுத்தி, கண்களின் மீது தடவ கண்களின் வீக்கம் குறைவதோடு, கருவளையங்களும் நீங்கிவிடும்.

