உறங்கி எழுந்ததும் காலையில் முதலில் பலரும் செய்யும் நடவடிக்கை குளிப்பதுதான். ஆனால், சிலர் மாலையில் அல்லது இரவில் குளிக்க விரும்புவதும் வழக்கம்.
அதனால், பலருக்கு இது ஒரு குழப்பமாக இருக்கலாம். காலையில் எழுந்தவுடன் குளிக்க வேண்டுமா அல்லது இரவு படுக்கச் செல்லுமுன் குளிக்க வேண்டுமா? இரண்டிலும் நன்மைகள் உள்ளன.
காலையில் குளிப்பது புத்துணர்ச்சி தரும். வெந்நீரில் சில நிமிடங்கள் நிற்பதால் ரத்த ஓட்டம் சீராகி, சுறுசுறுப்பும் விழிப்புணர்ச்சியும் அதிகரிக்கிறது. இதனால் நாள் முழுவதும் ஆற்றலுடன் இருக்க முடியும்.
மாறாக, இரவில் குளிப்பவர்கள், நாள் முழுவதும் உடலில் சேர்ந்த தூசி, வியர்வை, மாசு போன்றவற்றைக் கழுவிவிட்டு தூங்குவதால் சுத்தமான உணர்வும் அமைதியான தூக்கமும் பெறுவதாக நம்பப்படுகிறது.
குளிப்பது உடலிலுள்ள அழுக்கு, எண்ணெய், வியர்வை ஆகியவற்றை நீக்கி, சுத்தத்தையும் சுகாதாரத்தையும் பேண உதவுகிறது. ஒரு நாளின் முழுச் சுழற்சியில் தூசி, மாசு, மகரந்தம் போன்றவை தோலில் தேங்குகின்றன. இதனை நீக்காமல் படுக்கச் சென்றால், அந்த அழுக்கானது படுக்கை விரிப்பு, தலையணை, போர்வை ஆகியவற்றில் படிந்து நுண்ணுயிர் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.
தோலின் ஒவ்வொரு சென்டிமீட்டரிலும் ஆயிரக்கணக்கான பாக்டீரியாக்கள் வாழ்கின்றன. அவை நம் வியர்வைச் சுரப்பிகளிலிருந்து வரும் எண்ணெய்யை உணவாக எடுத்துக்கொள்கின்றன. வியர்வைக்கு தனித்த மணம் இல்லையென்றாலும், பாக்டீரியாக்கள் உற்பத்தி செய்யும் சேர்மங்கள்தான் துர்நாற்றத்தை உருவாக்குகின்றன. எனவே, இரவில் குளிப்பது சுத்தமாகவும் சுகமாகவும் உறங்க உதவலாம். ஆனால், அதுவே முழுமையான தீர்வாகாது.
ஒருவர் இரவில் தூங்கும்போதும் வியர்வை வெளியாவதால் ஆயிரக்கணக்கான தோல் செல்களையும் இழப்பார். இவை தூசிப் பூச்சிகளுக்கு உணவாக மாறி, ஒவ்வாமை அல்லது தோல் பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும். எனவே, இரவில் குளிப்பதோடு மட்டுமல்லாமல், படுக்கை விரிப்பு, போர்வை, தலையணை ஆகியவற்றை அடிக்கடி சுத்தம் செய்வதும் முக்கியம்.
இல்லையெனில் பாக்டீரியாக்கள், தூசிப் பூச்சிகள், பூஞ்சைகள் தேங்கி, மூச்சுக் கோளாறுகளுக்கு வழிவகுக்கும். குறிப்பாக, ஆஸ்துமா அல்லது ஒவ்வாமை கொண்டவர்களுக்கு இது முக்கியம்.
தொடர்புடைய செய்திகள்
குளிக்கும் நேரத்தைத் தீர்மானிக்கும்போது நினைவில் வைத்திருக்க வேண்டிய மற்றொரு முக்கிய அம்சம் தூக்கத்தின் தரம். படுக்கைக்கு ஒரு மணி நேரத்திற்குமுன் வெந்நீரில் குளிப்பது உடல் வெப்பநிலையை உயர்த்தி, குளித்தபின் குறைப்பதன் மூலம் உடலுக்கு ‘இப்போது ஓய்வெடுக்கலாம்’ என்ற உணர்வை ஏற்படுத்துகிறது. இதனால் விரைவாக உறங்கிவிடலாம்; ஆழ்ந்த உறக்கத்தையும் பெறலாம்.
அதே நேரத்தில், காலைக் குளியலுக்கும் தனித்தன்மை உண்டு. இரவில் ஏற்பட்ட வியர்வை, நுண்ணுயிர்களை நீக்கிப் புத்துணர்ச்சி அளிப்பது, மனச்சோர்வைக் குறைப்பது போன்ற பல நன்மைகள் உள்ளன. காலையில் குளிப்பதால் மனமும் உடலும் விழித்தெழுந்து, அன்றைய நாளைச் சிறப்பாகத் தொடங்க முடியும்.
ஆனால், உண்மையில், எந்த நேரத்தில் குளிப்பது சிறந்தது என்ற கேள்விக்கு ஒரே ஒரு சரியான விடை இல்லை. நீங்கள் காலையில் குளித்தாலும் மாலையில் குளித்தாலும் உங்கள் உடல்நலத்தில் பெரிய மாற்றம் ஒன்றும் ஏற்படாது.
எப்போது குளிக்கலாம் என்பதைப் பொறுத்தவரை, அவரவர்க்கும் ஒரு காரணம் இருக்கலாம். எப்போது குளிப்பது என்பதைவிட, சுத்தத்தைப் பேணுவது, அடிக்கடி படுக்கைத் துணிகளைத் துவைப்பது, உடல்நலத்திற்கு உகந்த சூழலை உருவாக்குவது ஆகியவையே முக்கியம்.