தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பெண்களும் தசைவலிமையும்

2 mins read
3e50623b-fa7c-402f-9a1d-b731b2457064
வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை வலிமைப் பயிற்சி செய்துவந்தால் மாற்றத்தைக் காணலாம் என்பது வல்லுநர்களின் கருத்து. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பல்லாண்டு காலமாகவே பெண்கள் எடை தூக்குவதைத் தவிர்த்து வந்தனர். எடை தூக்கினால் பருமனான தோற்றம் வந்துவிடுமென்ற அச்சம் இருந்துகொண்டே இருக்கிறது.

ஆனால், பெண்கள் தங்களின் தசைகளை வலுவாக்குவது உடற்கட்டழகர்போல் தோற்றமளிப்பதைப் பற்றியதன்று என்கின்றனர் உடற்பயிற்சி, அறிவியல் வல்லுநர்கள்.

அது ஒரு பெண்ணின் வலிமை, உடல்நலம், தன்னம்பிக்கையை மேம்படுத்துவதற்கும் பெண்களின் உடலுக்கு நன்மைகள் அளிப்பதற்குமானது என்று அவர்கள் கூறுகின்றனர்.

ஒருவருக்கு வயதாக வயதாக அவரது தசைநிறை (muscle mass) பெரும்பங்காற்றத் தொடங்குகிறது. சுரப்புநீர் மாற்றங்கள், குறைந்த அளவிலான ‘டெஸ்டோஸ்டிரோன்’ காரணங்களுக்காக 30 வயதைத் தாண்டிய பிறகு ஆண்களைவிட பெண்கள் வேகமாகத் தசைநிறையை இழக்கத் தொடங்குவர்.

இதனால் எலும்பு வலுவிழத்தல், எளிதில் காயமடைவது, குறைந்த வளர்சிதை மாற்றம் ஆகியவை பெண் உடலில் ஏற்படும். வலிமைப் பயிற்சியில் கவனம் செலுத்தி, தசைகளை வலுவாக்கும்போது பெண்கள் இம்மாற்றங்களைத் திறம்பட எதிர்கொள்ள முடியும்.

அவர்களால் நீண்டநாள் சுறுசுறுப்பாகவும் தன்னம்பிக்கையுடனும் செயல்பட முடியும். உடல் வலிமையையும் தாண்டி, தசைநிறை ஒருவரின் வளர்சிதை மாற்றங்களையும் சீராக்க உதவுகிறது.

அதிக தசைநிறை இருந்தால் ஓய்வு நேரத்திலும்கூட ஒருவரின் உடலில் கலோரிகள் குறையத் தொடங்கும். இதனால் ஒருவர் ஆரோக்கியமான எடையில் இருக்க முடியும்.

பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் இருக்கும் பெண்களுக்கு நீண்ட நேரம் கார்டியோ உடற்பயிற்சி செய்ய நேரம் கிடைக்காது. வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாள்கள் வலிமைப் பயிற்சி செய்தாலும் அது ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

பெண்களின் தசைக்கும், எலும்புநலத்திற்கும் தொடர்பு உண்டு. எடை தூக்கும் உடற்பயிற்சிகள் எலும்புகளையும் வலுவாக்கி, ‘ஆஸ்டியோபோரோசிஸ்’ எனும் எலும்புப்புரை பிரச்சினை வராமல் தடுக்க உதவுகிறது.

பெண்களின் மாதவிடாய்க்குப் பிந்தைய காலத்தில் எலும்புப்புரை பிரச்சினை வருவது வழக்கம். தசைகளை வலுவாக்குவது ஒரு பெண் தன் உடலைப் பற்றி எவ்வாறு நினைக்கிறார் என்பதையும் மாற்றும் தன்மை கொண்டது.

அதிக எடைகளைத் தூக்கி, புதிய அசைவுகளைக் கற்றுக்கொண்டு, கண்ணாடியில் உடலைப் பார்க்கும்போது அது மெருகூட்டலாக தெரிந்தால் தன்னம்பிக்கை தானாகவே வரும்.

எடை தூக்கும்போது முதலில் குறைந்த எடைகளில் தொடங்க வேண்டும். நாளடைவில் எடை தூக்குவதுடன் இதர உடற்பயிற்சிகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

புரதச்சத்து அதிகம் நிறைந்த உணவுகளான முட்டை, கொழுப்பு இல்லாத இறைச்சி, டோஃபு, பீன்ஸ் போன்றவற்றை உணவில் சேர்த்து வந்தால் தசை பழுதுபார்த்தலும் வளர்ச்சியும் சீராக நடைபெறும்.

வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை வலிமைப் பயிற்சி செய்துவந்தால் நல்ல மாற்றத்தைக் காணலாம் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். இடையிடையே உரிய ஓய்வும் தேவை.

குறிப்புச் சொற்கள்