உலகெங்கும் தற்போது ஐவரில் ஒருவர் செவித்திறன் இழப்பால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. இந்த விகிதம் 2050ல் நால்வரில் ஒருவராக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிங்கப்பூர் முதியவர்களிடம் அண்மையில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், மருத்துவரால் கண்டறியப்பட்டாலும் செவித்திறன் இழப்புக்கு உடனடியாகச் சிகிச்சை பெறப்போவதில்லை என்று மூவரில் ஒருவர் (34%) தெரிவித்துள்ளனர்.
மேலும், 68 விழுக்காட்டினர் செலவுகள் காரணமாக செவித்திறன் இழப்பு சார்ந்த கவனிப்பைத் தவிர்த்தது தெரியவந்தது.
கேள்திறன் கருவிகளைத் (hearing devices) தயாரிக்கும் ‘கோக்லியர்’ நிறுவனம் நடத்திய ‘ஆரோக்கியமான செவிகள், ஆரோக்கியமான ஆண்டுகள்’ என்ற ஆய்வில் இத்தகவல்கள் கண்டறியப்பட்டன.
மார்ச் 3ஆம் தேதி உலக செவித்திறன் நாளை முன்னிட்டு ஆஸ்திரேலியா, சீனா, ஜப்பான், சிங்கப்பூர் முழுவதும் 25 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய 4,000க்கும் மேற்பட்டவர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது.
செவித்திறன் இழப்புத் தடுப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உலக அளவில் செவிப்புலன் பராமரிப்பை மேம்படுத்தவும் இந்த நாள் ஊக்குவிக்கிறது.
செவித்திறன் இழப்புக்காக சிகிச்சை நாடாத மக்கள்
கருத்தாய்வில் கலந்துகொண்ட சிங்கப்பூரர்களில் ஏறக்குறைய 91 விழுக்காட்டினர், செவித்திறன் இழப்புக்கான தீர்வுகள் கிடைப்பதை ஒப்புக்கொண்டுள்ளனர். இருப்பினும் செவித்திறனைப் பாதுகாக்கும் நடவடிக்கைகள் குறைவாகவே உள்ளன.
“செவித்திறன் இழப்பால் பாதிக்கப்பட்டுள்ள பலருக்கு அவர்களின் செவித்திறன் படிப்படியாகக் குறைந்து வருகிறது. சில நேரங்களில் அது உடனடியாகக் கவனிக்கப்படாததால் உதவி நாடுவதற்கு நீண்ட காலம் எடுக்கும்,” என்றார் காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர் யுவன் ஹெங் வை.
மூத்தோர் சிகிச்சை நாடாததற்குக் காரணங்கள்
மருத்துவரால் கண்டறியப்பட்ட பிறகும் செவித்திறன் இழப்பு சிகிச்சை பெறப்போவதில்லை என்று 55 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையோரில் 29 விழுக்காட்டினர் தெரிவித்தனர். அது தங்கள் அன்றாட வாழ்வில் தலையிடும் அளவுக்கு இருந்தால் சிகிச்சை தேவை என்றும் அவர்கள் நம்புகிறார்கள்.
மேலும், பலர் தங்கள் செவித்திறன் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிப்பதில் விலை உயர்ந்த சிகிச்சைக்கு செலவு ஒரு தடை எனக் குறிப்பிட்டுள்ளனர்.
செவித்திறன் இழப்புக்கு விரைவான சிகிச்சை
மூத்தோர் 65 வயது முதல், மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்கள் செவித்திறனைச் சரிபார்க்க வேண்டும். இருப்பினும் 56 விழுக்காட்டினர் மட்டுமே கடந்த ஓரிரு ஆண்டுகளில் செவித்திறனைப் பரிசோதித்துள்ளனர்.
“செவித்திறன் இழப்பைச் சரியான நேரத்தில் சரிசெய்வது ஒட்டுமொத்த உடல்நலனுக்கும் நல்வாழ்விற்கும் முக்கியம்,” என்று தெரிவித்தார் ‘கோக்லியர்’ நிறுவனத்தின் பொது மேலாளர் ஏமி செங்.
‘சில்வர் ஸ்கிரீன்’ போன்ற அரசாங்க மானியத் திட்டங்கள் மூலம், சிங்கப்பூரர்கள் மூத்தோர் செவிப்புலன் பரிசோதனைகளை எளிதில் பெறலாம்.
இந்தத் திட்டம் மூத்தோருக்கு நிதி உதவி செய்வதுடன் செவித்திறன் இழப்பைத் தொடக்கத்திலேயே கண்டறிந்து தேவையான சிகிச்சை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.