உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஒன்பதாம் மாநாடு

2 mins read
605acf54-6678-4677-b468-82e21232357c
புகழ்பெற்ற எழுத்தாளரும் பேச்சாளரும் தமிழறிஞருமான தி.மு. அப்துல் காதர். - படம்: ஏற்பாட்டாளர்கள்

தமிழக இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் ஏற்பாட்டில் அடுத்த மாதம் (2025 மே) 9, 10, 11 ஆகிய நாள்களில் திருச்சி எம்.ஐ.இ.டி. பொறியியல் கல்லூரியில், உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஒன்பதாம் மாநாடு நடைபெறவிருக்கிறது.

இஸ்லாமிய இலக்கியக் கழகம் தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இது ‘பொன்விழா மாநாடு’ என்ற சிறப்பையும் பெறுகிறது.

கழகத்தின் தலைவர் பேராசிரியர் சேமுமு முகமது அலி, துணைத் தலைவர் எம்.ஜி.எம்.நிஜாமுத்தீன், செயலாளர் பேராசிரியர் மு. இ. அகமது மரைக்காயர், பொருளாளர் ஷாஜஹான் ஆகியோருடன் புகழ்பெற்ற எழுத்தாளரும் பேச்சாளருமான தி.மு. அப்துல் காதர் எனப் பலரும் இந்த மாநாட்டின் வெற்றிக்காகத் தீவிரமாகப் பணியாற்றி வருவதாகக் கூறப்பட்டது.

மாநாட்டின் வெற்றிக்காக வெளிநாட்டுப் பேராளர்களை நேரில் அழைக்கத் தமிழறிஞர் தி.மு. அப்துல் காதர், பொருளாளர் எஸ். எஸ். ஷாஜஹான் இருவரும் மலேசியப் பயணத்தை முடித்துக்கொண்டு சிங்கப்பூர் வரவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

டன்லப் ஸ்திரீட் அப்துல் கஃபூர் பள்ளிவாசலில் வரும் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 11) இரவு 7.20 மணிக்கு (மஃரிப் தொழுகைக்குப் பிறகு) கலந்துரையாடல் அங்கத்தில் அவர்கள் கலந்துகொள்வர் என்று ஏற்பாட்டாளர்கள் கூறினர்.

மே மாத மாநாட்டில், தொடக்க நிகழ்ச்சி, கவியரங்கம், படைப்பாளர் கலந்துரையாடல், ஆய்வரங்கங்கள், மார்க்க அறிஞர் அரங்கம், மகளிர் அரங்கம், ஊடக அரங்கம், அயல்நாட்டு அரங்கம், கருத்தரங்கம், நூல்கள் வெளியீடு, விருதுகள் வழங்கல், நிறைவு விழா முதலியன இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டது.

மே 9ஆம் தேதி நடைபெறும் தொடக்க நிகழ்ச்சியில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றுவார்.

மாநாட்டில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசியத் தலைவர் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன், தமிழக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், சமூகத் தலைவர்கள், வெளிநாட்டுப் பேராளர்கள் எனப் பலரும் கலந்துகொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்