தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விழிப்புணர்வை ஏற்படுத்திய உலகப் பக்கவாத நாள் ஒளியூட்டு

2 mins read
சிங்கப்பூரில் ஆண்டுதோறும் பக்கவாதத்தினால் பாதிப்படைந்தோரின் எண்ணிக்கை 2011ல் 6,000லிருந்து 2021ல் 9,000ஆக அதிகரித்தது.
b819918b-6dbc-4c8e-a584-a2db626d2a58
உலகப் பக்கவாத நாளன்று (அக்டோபர் 29) ஒளியூட்டப்பட்ட கேவனாக் பாலம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

சிங்கப்பூரில் ஆக அதிகமான மரணத்தை விளைவிக்கும் நோய்களின் பட்டியலில் நான்காம் இடத்தில் உள்ளது பக்கவாதம்.

இந்நிலையில், உலகப் பக்கவாத நாளன்று (அக்டோபர் 29), பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவு தெரிவிக்க, பல நாடுகளைப் போல சிங்கப்பூரிலும் கட்டடங்கள் ஒளியூட்டப்பட்டன.

அன்றைய நாளுக்கு முன்பே, சுகாதார அமைச்சின் பக்கவாதச் சேவைகள் மேம்பாட்டுப் பிரிவு, தேசிய பக்கவாத இயக்கத்தின்வழி விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்திருந்தது.

வேகம் முக்கியம்

இவ்வாண்டு இயக்கத்தில் புதிதாக ‘Be Stroke S.M.A.R.T, Think F.A.S.T’ என்ற முழக்கவரியும் அறிமுகமாகியுள்ளது.

இவ்வாண்டு தேசிய பக்கவாத இயக்கத்தில் புதிதாக ‘Be Stroke S.M.A.R.T, Think F.A.S.T’ என்ற முழக்கவரி அறிமுகமாகியுள்ளது.
இவ்வாண்டு தேசிய பக்கவாத இயக்கத்தில் புதிதாக ‘Be Stroke S.M.A.R.T, Think F.A.S.T’ என்ற முழக்கவரி அறிமுகமாகியுள்ளது. - படம்: பக்கவாதச் சேவைகள் மேம்பாட்டுப் பிரிவு, சுகாதார அமைச்சு

S.M.A.R.T என்பது புகைபிடிக்காமல் வாழ்வது, ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வது, துடிப்பான வாழ்க்கைமுறையைப் பின்பற்றுவது, வழக்கமான இதயப் பரிசோதனைகளுக்குச் செல்வது, மருத்துவர் அளிக்கும் மருந்துகளை எடுப்பது எனப் பக்கவாதத் தடுப்புக்கான ஐந்து உத்திகளைக் குறிக்கிறது.

முகம் தொங்குவது, கையில் பலவீனம், பேச்சுத் தடுமாற்றம் போன்ற பக்கவாதத்துக்கான அறிகுறிகளைக் கண்டால், உடனடியாக 995 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளவேண்டும் என்பதே F.A.S.T என்பதற்கான பொருள்.

பக்கவாதத்திற்கான அறிகுறிகளை விரைவில் கண்டறிந்து மருத்துவமனையைச் சென்றடைந்தால், உடற்குறைவு ஏதும் ஏற்படாமல் இருக்கும் வாய்ப்பு அதிகரிக்கும் என்று கூறினார் தேசிய நரம்பியல் கழகத்தின் டாக்டர் சுமித் குமார் சோனு.

“நீங்களாக ஒரு மருத்துவமனைக்குச் செல்லாதீர்கள். இது அநாவசிய நேர விரயத்துக்கு உள்ளாக்கும். சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையினரை 995ல் அழைத்தால், அவர்கள் முன்கூட்டியே என்னைப் போன்ற நிபுணரைத் தயார்படுத்திவிடுவர்,” என்றார் டாக்டர் சுமித்.

தேசிய நரம்பியல் கழகத்தின் டாக்டர் சுமித் குமார் சோனு.
தேசிய நரம்பியல் கழகத்தின் டாக்டர் சுமித் குமார் சோனு. - படம்: பக்கவாதச் சேவைகள் மேம்பாட்டுப் பிரிவு, சுகாதார அமைச்சு

பக்கவாத வகைகளும் சிகிச்சைகளும்

“பொதுவாக பக்கவாதம் இருவகைப்படும். ஒன்று, ‘இஸ்‌ஷெமிக்’ (ischemic) பக்கவாதம் - அதாவது இரத்தம் உறைந்துபோய், மூளையில் ரத்த ஓட்டம் தடையாவதால் ஏற்படுவது.

“இரண்டாவது, ‘ஹேமொராஜிக்’ (haemorrhagic) பக்கவாதம். இது மூளையில் ஏற்படும் ரத்தக் கசிவால் ஏற்படும் பக்கவாதம்.”

“இஸ்‌ஷெமிக் பக்கவாதத்திற்கு இரண்டு உடனடி சிகிச்சைகள் உண்டு,” என்றார் டாக்டர் சுமித்.

‘த்ரோம்போலிஸிஸ்’ (thrombolysis) எனும் சிகிச்சையில் மருந்துகள்வழி உறைந்த ரத்தம் கரைக்கப்படும். இதற்கு 4.5 மணி நேரத்திற்குள் மருத்துவமனையை அடைந்தால் சாதகமான விளைவுகளை எதிர்பார்க்கலாம் என்றார் டாக்டர் சுமித்.

இரண்டாவதான ‘என்டோவாஸ்குலர்’ சிகிச்சையில் (endovascular therapy), மூளையில் உள்ள பெரிய ரத்தக்குழாய்களில் (arteries) உறைந்த ரத்தத்தை அகற்ற சிறிய ரத்தக்குழாய்கள்வழி வடிகுழாய்கள் (catheters) செலுத்தப்படும்.

ரத்தக் கசிவுள்ள பக்கவாதத்திற்கு அறுவை சிகிச்சை தேவைப்படலாம் என்றார் டாக்டர் சுமித்.

பக்கவாதத்துக்கான அபாயம்

“55 வயதுக்கு மேல் வாழும் ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் இருமடங்காகிறது. இந்தியர்களுக்கு இந்த வயது 60.

“நம் சமூகம் மூப்படைந்துவருகிறது. அதனால் பக்கவாதத்தினால் பாதிப்படைவோரின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது,” என்றார் டாக்டர் சுமித்.

பக்கவாதத்திலிருந்து தற்காக்க ஆரோக்கிய வாழ்க்கைமுறையைக் கடைப்பிடிப்பதன் அவசியத்தையும் வலியுறுத்தினார் டாக்டர் சுமித்.

“புகைபிடித்தல், அளவுக்கு அதிகமாக மது அருந்துவது, இனிப்புப் பொருள்கள் உண்பது, நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், உடற்பயிற்சியின்மை போன்றவை பக்கவாதத்திற்கான அபாயத்தை அதிகரிக்கும்,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்