காலத்தை வென்ற அணிகலன் 

ஆடவரை வசீகரிக்கும் கைக்கடிகாரங்கள்

3 mins read
b0a1cebe-5cee-45be-a2d0-80ad841a53cc
ஆண்கள் பலருக்குக் கைக்கடிகாரம் என்பது நேரத்தைக் கூறும் சாதனமாக மட்டுமின்றி, அவர்களது ஆளுமையின் அடையாளமாகவும் திகழ்கிறது.   - படம்: இணையம்

திறன்பேசிகளும் அறிவார்ந்த கருவிகளும் ஆதிக்கம் செலுத்தும் இன்றைய காலத்திலும், ஆடவர்களின் கரங்களை அலங்கரித்து வருகின்றன கைக்கடிகாரங்கள். 

நேரம் கணிக்கும் கருவி என்பதற்கு அப்பால், காலம்காலமாக கைக்கடிகாரங்கள் ஓர் ஆளுமையின் அடையாளமாகவே இருந்து வருகிறது.

புதிய தொழில்நுட்பம், நவீன வடிவங்கள் என கடிகாரங்கள் பல மாற்றங்களைக் கண்டு வந்தாலும் பாரம்பரியமான நிறுவனத்தின் பாரம்பரிய வடிவங்கள் இன்றளவும் நாடப்படுகின்றன.

ஆண்களின் ஒப்பனையுலகில் கைக்கடிகாரங்கள் என்றென்றும் இடம்பிடித்திருப்பதற்கு பல காரணங்கள்.

ஆளுமையின் அடையாளம் 

ஒருவரின் பண்பியல்கள், பாணி, அவர்களின் மதிப்பு ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாக ஆண்கள் கடிகாரத்தை பார்க்கின்றனர்.

கிளாஸ்கோவ் அறிவியல், தொழில்நுட்பக் கல்லூரி நடத்திய ஆய்வில் 17 முதல் 54 வயதுக்கிடைப்பட்ட 112  பேரிடம், கடிகாரம் அணிவதற்கும், மனிதர்களின் தனித்துவப் பண்புகளுக்கும் ஏதேனும் தொடர்புண்டா என்பது கேட்கப்பட்டது.

பத்துக் கேள்விகளுடன் கூடிய கேள்வித்தாளுக்கு பதிலளித்தவர்களில் பெரும்பாலானோர் தந்த தகவல்கள் பல சுவாரஸ்யங்களைக் கொண்டிருந்தன.

விலையுயர்ந்த ‘ரோலெக்ஸ்’ முதல் மலிவு விலைக் கடிகாரம் வரை எதுவாக  இருந்தாலும், ஆண்களில் கணிசமானோர் இந்த ஆபரணத்தைத் தங்கள் சுயத்தின் வெளிப்பாடாகவும்   அடையாளமாகவும் பார்க்கின்றனர்.

கைமாற்றப்படும் கடிகாரங்களில் இழையோடும் நேசம்

ஆண்கள் கடிகாரங்களை விரும்புவதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று, அவர்களுக்கும் அந்தச் சாதனத்துக்குள்ளும் உள்ள உணர்வுபூர்வ தொடர்பு என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

கடிகாரங்கள் குடும்பத்தில் உள்ள மூத்தோரிடமிருந்து இளையோருக்கு கைமாற்றப்படுகையிலும், அன்புக்குரியவர்களால் பரிசளிக்கப்படும்போதும், அவை உணர்வுபூர்வ நேசத்தின் குறியீடாக ஆண்களால் கருதப்படுகிறது.  

ஆய்வில் பங்கேற்றவர்களில் சிலர், தங்கள் தந்தை, தாத்தா ஆகியோரிடமிருந்து பெற்ற கடிகாரங்கள், அவர் மறைந்தாலும் அவர்களின் நல்லாசிகளை நினைவூட்டும் பொக்கிஷமாக இருப்பதாகக் கூறியுள்ளனர்.

குறிப்பாக வாழ்வில் சோர்வடைந்து, பின்னடவைச் சந்திக்கும் தருணங்களில், அந்தக் கடிகாரம் அளிக்கும் ஊக்கம், வாழ்வைத் தொடர உற்சாகம் அளிக்கும் என்றும் அவர்கள் கூறினர்.

வரலாறு, தொன்மையான வடிவமைப்பின் மீது ஆர்வம் கொள்வதும் ஆடவருக்கு பிடித்த காரணிகளில் ஒன்றாக அறியப்படுகிறது.

கடிகாரத்தை நாளும் அணிவது தொடங்கி,  அதனைச் சேகரித்து பாதுகாக்கும் ஆர்வலர்களாகவும் ஆடவர்கள் திகழ்கின்றனர்.

கடிகார வடிவமைப்பில் உள்ள இயந்திரவியல், மின்னிலக்க அம்சங்கள், அவற்றின் புத்தாக்கமிக்க தொழில்நுட்பத்தால் கவரப்படுவோர், சந்தையில் அறிமுகம் காணும் பல்வேறு ரகக் கடிகாரங்களை பொழுதுபோக்கிற்காக வாங்குவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. 

அனுதினமும் கைக்கடிகாரத்தை அணியும் பழக்கம் கொண்டவர்கள், பேரளவில் நேர்மையாளர்களாகத் திகழவும், நேரம் தவறாமை எனும் குணநலனை கைக்கொள்ளவும் முற்படுகிறார்கள் எனவும் ஆய்வு சுட்டியது.

ஆடவர்கள் தங்களின் சமூக தகுதியின் அளவுகோலாகவும் கைக்கடிகாரங்கள் அணிகின்றனராம். 

ஒருவரின் செல்வாக்கு, பொருளியல் நிலை, அவர்களின் திறன், எனப் பல்வேறு சிறப்பியல்புகளை ஒட்டுமொத்தமாக உலகிற்கு அறிவிக்கும் அறிக்கையாகக் கைக்கடிகாரங்கள் இன்றளவும் பார்க்கப்படுகின்றன.

இந்த அம்சம், ஆண்களின் அலங்கார சாதனத்திற்கான பட்டியலில் கைக்கடிகாரத்திற்கு முக்கிய இடத்தைப் பெற்றுத்தந்துள்ளன.

திறன்பேசிகள் உள்ளிட்ட பல்வேறு அறிவார்ந்த சாதனங்கள் நேரத்தைக் கணித்துக் கூற பல்வேறு பாணியைக் கடைப்பிடிக்க தொடங்கியபோதும், கைக்கடிகாரம் மீதான ஆர்வம் ஆண்களுக்குக் குறையவேயில்லை என்பதும் பங்கேற்பாளர்கள் சொல்லிய உண்மை.

மொத்தத்தில் கைக்கடிகாரங்கள் வெறும் அலங்கார அணிகலனாக மட்டும் பார்க்கப்படவில்லை; அவை பண்புநலன்களின் வெளிப்பாடாகவும் ஒருவர் நடந்துகொள்ளும் பாங்கு போன்றவற்றின் முன்னோட்டத்தை மற்றவர்களுக்கு வெளிக்காட்டும் உளமார்ந்த அடையாளமாகவும் கருதப்படுகின்றன.

அதுவே காலம் கடந்தும், மெய்நிகர் உலகு மேலோங்கும் தருணத்திலும் ஆடவர்களின் அங்கத்தில் கைக்கடிகாரம் இன்றளவும் பிரியா உறவாக நீடித்திருப்பதற்கான குறிப்பிடத்தகுந்த காரணங்களாகத் திகழ்கின்றன என்றும் விவரித்தது ஆய்வு.

குறிப்புச் சொற்கள்