மனிதன் என்பதற்கு அடையாளமே வெவ்வேறு அடையாளங்கள் இருப்பது. அடையாளங்களுக்கு இடையேயான இழுபறி, சராசரி மனிதனுக்குத் தனிமனிதப் போராட்டமாக இருக்கலாம். ஆனால், பலரது மனங்களில் குடிபுகும் எழுத்தாளரின் அடையாள நெருக்கடி சமூகச் சவாலாக மாறிவிடுகிறது.
அதனை எவ்வாறு எதிர்கொள்வது என்பதை எழுத்தாளர்களிடமே கேட்டுத் தெரிந்துகொள்ள வழிவகுத்தது சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் ஏற்பாடுசெய்த ‘கடல் தாண்டிய கதைகளும் கலாசார அடையாளங்களும்’ எனும் கலந்துரையாடல் நிகழ்ச்சி.
“ஒரு நாட்டின் பண்பாட்டைப் பற்றித் தெரிந்துகொள்ள செய்தித்தாள், இணையம் அல்லது நூல்கள் படிக்க வேண்டும். அந்நூல்களை எழுதியவர்கள் என்னென்ன சிரமங்களை எதிர்கொண்டனர் என்பதை விவாதிப்பதற்காகவே இன்று கூடியுள்ளோம்,” எனக் கூறி நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தார் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத் தலைவர் சு. முத்துமாணிக்கம்.
அடையாளம் எனும் மரம் இரு நிலங்களில் வேரூன்றி நிற்கமுடியாது என்று சிங்கப்பூரின் முதல் வெளியுறவு அமைச்சர் எஸ் ராஜரத்தினம் கூறியதைச் சுட்டினார் கலந்துரையாடலை வழிநடத்திய எழுத்தாளர் சிவானந்தம் நீலகண்டன்.
தலைப்பில், கடல் என்பது பூமிப்பரப்பில் இருக்கும் கடலை மட்டுமின்றி சிந்தனைக் கடலையும் குறிப்பதாக அவர் சுட்டினார்.
‘கலாசார அடையாளம் குறித்த தன்னுணர்வு அவசியமா?’
தம் கதைகளைப் பகிர்வதற்கென்றே கடல் தாண்டி, தமிழகத்திலிருந்து சிங்கப்பூர் வந்திருந்தார் புனைகதை எழுத்தாளர், கவிஞர், திரைப்பட இயக்குநர், பாடலாசிரியர் எனப் பன்முகம் கொண்டவரான தமயந்தி.
சரிபாதியாக 25 ஆண்டுகள் தமிழகத்திலும் 25 ஆண்டுகள் சிங்கப்பூரிலும் வாழ்ந்து வந்துள்ள எழுத்தாளர் அழகுநிலா, சிங்கப்பூரின் முதல் பெண் தமிழ் நாவலாசிரியராக அங்கீகரிக்கப்டும் சூர்ய ரத்னா என மூன்று எழுத்தாளர்களும் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர் .
“சமூகத்தால் தனிமைப்படுத்தப்பட்டதால் உடைந்த மனங்கள் எப்போதுமே கலையுலகினுள் சென்று தஞ்சமடைகின்றன. அங்கேதான் நானும் உயிர்த்தெழுந்தேன்; என்னை நான் அடையாளம் கண்டேன். எழுத்தாளர் என்ற அடையாளமே நிரந்தரம் என்பதால் எந்த இடத்திலும் புறக்கணிக்கப்பட்ட, காயத்தையும் வலியையும் வேதனையையும் சுமப்பவர் எங்கு இருக்கிறாரோ அங்கேதான் நானும் நிற்பேன்,” என்றார் தமயந்தி.
தொடர்புடைய செய்திகள்
“எழுத்தாளர் என்ற அடையாளத்தை எக்காலத்திலும் விட்டுக்கொடுக்காததை நான் மிகவும் பெருமையாக எண்ணுகிறேன்,” என்றார் அவர்.
சில அடையாளங்களை எழுத்திலும் மனத்திலுமிருந்து நீக்கவே முடியாது என்றாலும், சிலவற்றைத் தாம் குறைத்துக்கொள்வதாகக் கூறினார் அழகுநிலா. சிங்கப்பூரில் இவ்வளவு சிறப்புமிக்க சீன, மலாய் மொழிகளைக் கண்டதும் ‘என் மொழியே முதன்மை மொழி’ என்ற எண்ணத்தைத் தாம் கைவிட்டதாக அவர் சொன்னார்.
‘ஒரு கலாசாரத்தை முழுமையாகப் புரிந்துகொள்ளாமல் எழுதலாமா?’
“சிங்கப்பூருக்குப் புலம்பெயர்ந்தவர் புலம்பெயர்ந்தவரெனும் கண்ணோட்டத்தில் கதைகள் எழுதும்போது அதை நம்மால் பாராட்ட முடிகிறது. ஆனால், சிங்கப்பூரர் அல்லாதவர், சிங்கப்பூரரின் குரலாக மாறும்போதுதான் கருத்து வேறுபாடுகள் எழலாம்,” என்றார் சூர்ய ரத்னா.
‘ஆறஞ்சு’ எனும் தன் முதல் சிறுகதைத் தொகுப்பில், ‘பெயர்த்தி’ எனும் சிறுகதையை எழுதிய அனுபவத்தை அவர் நினைவுகூர்ந்தார். சீன ஆண், தமிழ்ப் பெண்ணுக்கு இடையே நடந்த திருமணத்தில் பிள்ளை சந்திக்கும் சவால்களை அது ஆராய்ந்தது.
“ஆனால், அக்கதை மேலோட்டமாக இருந்தது என விமர்சனம் வந்தது. அன்றிலிருந்து மற்ற கலாசாரங்களைப் பற்றி எழுதும்போது கவனமாக இருக்கிறேன். நம்மில் பெரும்பாலோரால் அத்தகைய கதைகளை எழுதமுடிவதில்லை,” என்றார் அழகுநிலா.
மற்றொருவரின் பண்பாட்டு அடையாளத்தை எழுதலாம்; என்றாலும், அவர்களின் காலணியில் நின்று அவர்களாக மாறவேண்டும் என வலியுறுத்தினார் தமயந்தி.

