உப்பு, அனைத்து உணவு வகைகளிலும் சேர்க்கப்படும் மிக முக்கியமான ஒரு பொருளாகும். கசப்புத்தன்மை, இனிப்பு போன்றவற்றைக் குறைத்து உணவின் ஒட்டுமொத்த சுவையையும் மெருகூட்டுவது உப்புதான்.
ஆனால், அமெரிக்காவில் 90 விழுக்காட்டினர் அதிக அளவில் உப்பை உணவில் சேர்த்துக்கொள்வதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க உணவு வழிகாட்டுதல்களின்படி, பெரியவர்கள் ஒரு நாளைக்கு 2,300 மில்லிகிராமிற்கு அதிகமாக உப்பை உட்கொள்ளக் கூடாது எனப் பரிந்துரைக்கப்படுகிறது.
ஆனால், அமெரிக்கர்கள் சராசரியாக ஒரு நாளைக்கு 3,400 மில்லிகிராம் அளவு உப்பை உட்கொள்வதால் பக்கவாதம், இதய நோய்கள், சிறுநீரகக் கோளாறு போன்ற ஆபத்துகளை எதிர்கொள்கின்றனர்.
ஒருவர் குறைவான அளவில் உப்பு சேர்த்து, சுவையான உணவு சாப்பிடப் பல வழிகள் உள்ளன.
உப்புக்குப் பதிலாக எலுமிச்சைச் சாறு, ஆப்பிள் சைடர் வினிகர் அல்லது இதர புளிப்பு நிறைந்த மூலப்பொருள்களைப் பயன்படுத்தி உப்பு சேர்த்தது போன்றே உணவைச் சமைக்கலாம்.
வீட்டில் அடிக்கடி சமைப்பவர்கள் உப்பு சேர்க்காமல் ஆழமான, சுவையான மணத்துடன் உணவைத் தயாரிக்க, இறைச்சியைச் சுடுவது, காய்கறிகளை வதக்குவது, கொட்டைகளை வறுப்பது போன்ற முறைகளைப் பின்பற்றலாம்.
ரத்த நாளங்களைத் தளர்த்தும் தன்மை கொண்டது பொட்டாசியம். சிறுநீரகங்கள் அதிகப்படியான உப்பை வெளியேற்ற உதவுவதால் பொட்டாசியம் கலந்த உப்பு வகையைச் சமையலுக்குப் பயன்படுத்தலாம்.
தொடர்புடைய செய்திகள்
பொட்டாசியம் கலந்த உப்பைப் பயன்படுத்துவதற்கு முன்னர் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக்கொள்வது சிறந்தது.
சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் பொட்டாசியம் கலந்த உப்பைச் சாப்பிடும்போது அவர்களின் உடலில் பொட்டாசியம் அளவு அதிகரிக்கக்கூடும்.
உணவுக்குக் கூடுதல் இறைச்சி போன்ற மணத்தால் வகைப்படுத்தப்படும் சுவையைச் சேர்க்க, உப்புக்குப் பதிலாக காளான் தூள், ஊட்டச்சத்து ஈஸ்ட் போன்றவற்றைச் சேர்த்துப் பார்க்கலாம்.
உப்பை ஈடுசெய்யும் விதமாகச் சுவையை அதிகரிக்க, புளிக்க வைக்கப்பட்ட உணவுகள், தக்காளி, பழைமையான பாலாடைக் கட்டிகளை உணவில் சேர்த்துப் பார்க்கலாம்.
மூலிகைகள், மசாலாப் பொருள்களும் மணமறியும் உணர்வைத் தூண்டி உப்பு இல்லாமல் சுவையை அதிகரிக்கின்றன.
வறுத்த கொட்டை அல்லது தானியம் போன்ற சுவைக்குச் சீரகத்தையும் வறுத்த மண் போன்ற சுவைக்குப் புகைமூட்டப்பட்ட பாப்ரிகாவையும் இனிப்பு, மிளகு போன்ற மணத்துக்குத் துளசியையும் பயன்படுத்திப் பார்க்கலாம்.
சமைக்கும்போது உப்பைக் குறைத்துக்கொண்டாலும் உணவில் உட்கொள்ளும் உப்பில் கிட்டத்தட்ட 70 விழுக்காடு, முன்னரே தயாரிக்கப்பட்ட அல்லது உணவகச் சாப்பாட்டிலிருந்து வருகிறது.
உறையவைத்த உணவுகள், சூப் வகை, பதப்படுத்தப்பட்ட இறைச்சி போன்றவற்றில் அதிக அளவு உப்பு உள்ளது.
பதப்படுத்தப்பட்ட உணவுகள் எளிதில் கிடைப்பதால் சில குடும்பங்கள் அவற்றை அடிக்கடி சாப்பிடும் போக்கைக் கொண்டுள்ளன.
ஊட்டச்சத்து முத்திரைகளை ஒப்பிட்டு ஒரு வேளைக்கு மிகக் குறைந்த உப்பு அளவு கொண்ட தயாரிப்பைத் தேர்ந்தெடுக்கலாம்.
அதிகமான உப்பை அகற்ற, டப்பாக்களில் அடைக்கப்பட்ட காய்கறிகள் அல்லது பருப்பு வகைகளைக் கழுவிப் பயன்படுத்தலாம்.
வெளியே சாப்பிடுவதைக் குறைத்தால் உடலில் சேரும் உப்பின் அளவும் குறையும்.
சுவைச்சாறு, சல்சா, டெரியாக்கி சாஸ் போன்ற பல சுவையூட்டிகள் அதிக உப்புத்தன்மைக் கொண்டவை. சுவையை மேம்படுத்த எலுமிச்சை அல்லது சோயா சாற்றுக்குப் பதிலாக வினிகர் சேர்க்கலாம்.

