செய்தி: கி. விஜயலட்சுமி
மகப்பேற்றுக்குப்பின் வாழ்க்கையையே புரட்டிப்போடும் அளவிற்கு மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டார் 36 வயது மதீனா பேகம்.
கர்ப்பமாக இருந்த திருவாட்டி மதீனாவுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. 26 மணி நேரம் பிரசவ வலியால் துடித்த அவர், தம் பிள்ளையைக் கையில் ஏந்தியபோது அவ்வலி அனைத்தும் பறந்துபோனது போல் உணர்ந்தார்.
வேலைப்பளு காரணமாக மதீனாவின் தாயாரும் அவரது கணவரும் பணிக்குத் திரும்ப வேண்டிய சூழல் ஏற்பட்டது. யாருடைய துணையுமின்றி குழந்தையைக் கவனிக்கத் தொடங்கிய அவரை உடற்சோர்வு, தூக்கமின்மை போன்ற பிரச்சினைகள் துரத்த ஆரம்பித்தன.
தாய்ப்பாலைத் தவிர அதற்கு மாற்றாகப் பயன்படுத்தப்படும் பால் மாவு போன்றவற்றைக் குழந்தைக்குக் கொடுக்காமல் பராமரித்து வந்த அவர் மனச்சோர்வுக்கு ஆளானார்.
தொடர்ந்து அழுதுகொண்டே இருந்த குழந்தையைச் சமாளிக்க முடியாமல் ஒருகட்டத்தில் நான்கு மாதக் குழந்தையுடன் தாம் வசித்து வந்த அவருக்கு, புளோக்கின் மாடியிலிருந்து குதித்து உயிரை மாய்த்துக்கொள்ளலாம் என்ற எண்ணம்கூட தோன்றியது.
சிறப்புத் தேவையுடைய பிள்ளைகளுக்கான ஆதரவு, பிள்ளை வளர்ப்பு ஆலோசகரான அவர், அதுபோன்ற எண்ணம் அடிக்கடி வருவது தவறு என்பதை உணர்ந்தார். உடனே உதவிபெற தம் கணவரை அழைத்தார்.
அவரது உதவியுடன் மனநல ஆலோசகரை அணுகிய திருவாட்டி மதீனா, தற்போது தமது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூரில் 10ல் ஒரு தாய் பிரசவத்திற்குப் பின்வரும் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவதாக அப்பாதிப்புக்கு ஆலோசனை வழங்கும், மனநலம் பேணும் தொண்டு நிறுவனமான ‘கிளேரிட்டி சிங்கப்பூர்’ தெரிவித்துள்ளது.
அந்நிறுவனத்தை அணுகி அப்பாதிப்புக்கு ஆளானோரிடையே காணப்படும் அறிகுறிகள், அவர்களுக்குத் தரப்பட வேண்டிய ஆதரவு, தற்காத்துக்கொள்ள பின்பற்றவேண்டிய வழிமுறைகள் ஆகியவற்றை தமிழ்முரசு அறிந்துவந்தது.
மகப்பேறு கவலைக்கும் மகப்பேற்றுக்குப் பின்வரும் மனச்சோர்வுக்கும் இடையிலான வேறுபாடு
பொதுவாக, மகப்பேற்றுக்குப் பின் ஒரு தாய் சற்று மனச்சோர்வுடன் காணப்படுவது இயற்கைதான் என்றாலும், அந்நிலை தொடர்ந்தால் அவர் மன அழுத்தத்திற்கு ஆளாகக்கூடும் என்பதை பலரும் அறியாமல் போகலாம்.
ஒரு தாயின் அன்றாடச் செயல்பாட்டை பாதிக்காமல், குறுகிய காலம் மட்டுமே நீடிக்கும் மனச்சோர்வை ‘பேபி புளூஸ்’ என ஆங்கிலத்தில் அழைக்கின்றனர். குறிப்பாக, முதல்முறையாகத் தாய்மை அடையும் பெண்களில் 80 விழுக்காட்டினர் அவ்வகை மனச்சோர்வால் பாதிக்கப்படுவது இயல்பே என ‘கிளேரிட்டி சிங்கப்பூர்’ கூறுகிறது.
அதே மனச்சோர்வு இரு வாரங்களுக்குமேல் நீடித்தால் அந்நிலையையே மகப்பேற்றுக்குப் பின்வரும் மன அழுத்தம் என்றும் சிங்கப்பூரில் கிட்டத்தட்ட 5-7% தாய்மார்கள் அப்பிரச்சினையால் பாதிக்கப்படுகின்றனர் என்றும் அது தெரிவிக்கிறது.
அறிகுறிகள்
எப்பொழுதும் கவலையாக இருப்பது, கோபம், எரிச்சல், ஆர்வமின்மை, இயல்புக்கு மீறிய அழுகை, தன்னைப் பற்றியும் தன் பிள்ளை பற்றியும் எதிர்மறையான எண்ணங்கள் கொண்டிருப்பது, அதிகப்படியான குற்றவுணர்வு, வாழ்க்கையில் நம்பிக்கையின்மை, உயிர்மாய்ப்பு எண்ணம் ஆகியவை அப்பிரச்சினையால் பாதிக்கப்படுவோர்க்கான அறிகுறிகள். அவை, லேசானது முதல் கடுமையானது வரை இருக்கலாம்.
ஆதரவு, தற்காப்பு வழிமுறைகள்
இல்லறத் துணையும் குடும்ப உறுப்பினர்களும் நண்பர்களும் புதிய தாய்மார்களுக்குத் தேவையான உணர்வுபூர்வமான ஆதரவையும் பராமரிப்பு நடைமுறையில் உதவிகளையும் நல்க வேண்டும்.
மனநல ஆலோசகர்களை அணுகி சிகிச்சை பெற அவர்களுக்கு உதவி புரிதல், ‘Mums for life, New Mothers Support group’ போன்ற சமுதாய ஆதரவுக் குழுக்களில் அவர்களை இணைத்து அப்பிரச்சினை ஒன்றும் புதிதன்று என விளக்கி, அவற்றிலிருந்து மீண்டுவந்த பலர் குறித்து அவர்களிடம் எடுத்துரைத்தல் போன்ற ஆதரவையும் அவர்களுக்கு வழங்க வேண்டும்.
தம்பதியராக மனநல ஆலோசகரை அணுகி தேவையான வழிமுறைகளைப் பெறுவது, பிரசவத்திற்குப் பிந்தைய மனச்சோர்வு தொடர்பான அறிகுறிகளை அறிந்துகொண்டு அதற்கான மருத்துவரை அணுகி சிகிச்சை தேவைப்படும் நேரங்களில் தயங்காமல் அதை மேற்கொள்வது போன்றவை அப்பிரச்சினையிலிருந்து இணையர் தங்களைத் தற்காத்துக்கொள்வதற்கான வழிமுறைகள்.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக, பிள்ளை வளர்ப்பு குறித்து சமுதாயத்தில் நிலவும் கட்டுக்கதைகளும் தம்பதியரின் நடைமுறை இயல்பை மீறிய எதிர்பார்ப்புகளும் உள்ளன. குறிப்பாக, பிள்ளையைக் காணும்போதெல்லாம் நாம் மகிழ்ச்சியாக உணர வேண்டும் என்ற எண்ணம் போன்றவற்றைக் கைவிட்டால் அனைத்து பெற்றோருக்கும் மகப்பேற்றுக்குப் பிந்திய காலம் வசந்தகாலமாகவே இருக்கும் என்கிறது ‘கிளேரிட்டி சிங்கப்பூர்’.
இப்பிரச்சினையிலிருந்து மீண்ட திருவாட்டி மதீனா, “பிரசவத்திற்குப் பிறகு பச்சிளங்குழந்தைக்குக் கிடைக்கும் அதே கவனிப்பு ஒரு தாய்க்கும் கிடைக்க வேண்டும். அந்நிலை அப்பெண்ணுக்குப் புதிது. அவர் தன்னிலை உணரும் வரை குடும்பத்தின் அன்பும் ஆதரவும் அவருக்கு மிகவும் முக்கியம்,” எனக் கூறினார்.
இந்தியச் சமூகத்தினரிடையே இவ்வகை மனச்சோர்வு குறித்த விழிப்புணர்வு மிகவும் குறைவாகவே உள்ளது எனக் கூறிய அவர், தாய்மார்களின் மனநலன் குறித்து அறிய பிரசவித்த நான்கு முதல் ஆறு மாதங்களுக்குள் அவர்களை மருத்துவமனைகள் பரிசோதிக்கின்றன என்றார்.
இருப்பினும், பெரும்பாலானோருக்கு மனச்சோர்வுக்கான அறிகுறிகள் அதற்குப் பின்னரே எழுவதால், இளம் தாய்மார்களுக்குக் கூடுதல் ஆதரவு தேவை என்பதை வலியுறுத்தினார் திருவாட்டி மதீனா.