அதிகமான இளையர்கள், மின்சிகரெட் புழக்கத்திற்கு ஆளாகாமல் இருக்க சமவயதினரை ஊக்குவிப்பதாக அண்மைய கருத்தாய்வில் தெரியவந்துள்ளது.
மின்சிகரெட் சட்டவிரோதமானது என்பதையும் அது சுகாதாரச் சீர்கேடுகளுக்கு வழிவகுக்கும் என்பதையும் இளையர்கள் அறிந்துள்ளதாக அந்தக் கருத்தாய்வு கூறியது.
‘இ-வேப்பரைசர்’ எனப்படும் மின்சிகரெட்டின் விற்பனைக்கு சிங்கப்பூர் உள்ளிட்ட ஏறத்தாழ 30 நாடுகள் தடை விதித்துள்ளன.
இங்கு மின்சிகரெட் வைத்திருப்பதோ, பயன்படுத்துவதோ, விற்பதோ குற்றம். எனினும் இதன் புழக்கம் முற்றுப்பெற்றதாகத் தெரியவில்லை.
இந்நிலையில், ‘இ-வேப்பரைசர்’ குறித்து இளையர்களின் கருத்தை அறியும் நோக்குடன் நடத்தப்பட்ட அண்மைய ஆய்வில், 69 விழுக்காட்டு இளையர்கள், சிங்கப்பூரில் மின்சிகரெட் சட்டவிரோதம் என்பதை அறிந்துள்ளதாகக் கூறினர்.
அது உடல்நலத்துக்குக் கேடு விளைவிக்கும் என்று தெரிந்திருந்தும் இளையர்கள் மின்சிகரெட்டைப் பயன்படுத்துவதற்கான முக்கியக் காரணங்களும் ஆய்வில் தெரியவந்தது.
இளையர்கள் பலர் மின்சிகரெட் சார்ந்த பிரச்சினைகள் குறித்து அக்கறை கொண்டுள்ளனர். அதன் புழக்கத்தைப் புறந்தள்ளும் முயற்சிகளைத் துடிப்பாக மேற்கொள்கின்றனர்.
‘நிக்கோட்டின் இல்லா சிங்கப்பூர்’ என்பது குறித்து இளையர்கள் என்ன நினைக்கின்றனர் என்பதை அறிந்துகொள்ள சுகாதார அமைச்சு, சுகாதார மேம்பாட்டு வாரியம், தேசிய இளையர் மன்றம் ஆகியவை இணைந்து ஆய்வு நடத்தின. இணையம் வழியாக மேற்கொள்ளப்பட்ட கருத்தாய்வில் 16 முதல் 35 வயதுக்குட்பட்ட 500 இளையர்கள் பங்குபெற்றனர்.
தொடர்புடைய செய்திகள்
ஆய்வு கூறும் செய்தி என்ன?
* ஆய்வில் பங்கேற்றவர்களில் 26 விழுக்காட்டினர், சிகரெட் புழக்கத்தைக் கைவிட மின்சிகரெட் உதவும் என்ற எண்ணம் கொண்டிருந்தனர். ஆயினும் இந்த எண்ணம் சரியன்று என ஆய்வறிக்கை குறிப்பிட்டது.
* மின்சிகரெட்டில் பொதுவாகக் காணப்படும் ‘நிக்கோட்டின்’ இளையர்களின் மூளைக்குப் பாதிப்பு விளைவிக்கக்கூடும். உலோக நுண்துகள்கள் உட்பட, புற்றுநோய் உண்டாக்கும் ரசாயனங்களும் மின்சிகரெட்டில் காணப்படுகின்றன. இவை இதயம், நுரையீரல் சார்ந்த நோய்களை விளைவிக்கக்கூடும் என்கின்றன ஆய்வுகள்.
* நுரையீரலின் உட்புற, வெளிப்புறச் சுவர்களுக்கு இடையிலான இடைவெளியில் காற்று சூழும் ஆபத்தான நிலை ‘நியூமோதொராக்ஸ்’ எனப்படும். மின்சிகரெட் இத்தகைய நிலையை ஏற்படுத்தக்கூடியது.
* இன்னும் அறியப்படாத நீண்டகால உடல்நலத் தீங்குகளும் மின்சிகரெட் பயன்பாட்டால் ஏற்படக்கூடும் என்று ஆய்வறிக்கை எச்சரிக்கின்றது.
* புகைபிடிக்காதவர்கள், குறிப்பாக இளையர்கள், சிகரெட்டைப் பயன்படுத்தத் தொடங்குவதற்கு மின்சிகரெட் ஓர் நுழைவாயிலாக இருக்கும் என்பதற்கான சான்றுகள் உள்ளதாக ஆய்வு குறிப்பிட்டுள்ளது.
* சிகரெட் புகைப்பதை நிறுத்துவதற்கு மாற்றாக மின்சிகரெட் புழக்கத்திற்கு மாறியதாகக் கூறுவோரும் மின்சிகரெட்டை நீண்டகாலம் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் இது தொடர்ந்து நிக்கோடின் போதைக்கு அடிமையாவதற்கு வழிவகுக்கும் என்றும் அறிக்கை விவரித்தது.
* சிகரெட் புழக்கத்தைக் கைவிட முயன்று தோற்ற பலர் சிகரெட், மின்சிகரெட் என இரண்டையும் பயன்படுத்தி, இறுதியில் இவ்விரண்டின் தீங்குகளுக்கும் ஆளாகியுள்ளனர் என்பது ஆய்வு கூறும் மற்றொரு தகவல்.
அரசாங்கம் மின்சிகரெட் குறித்த விழிப்புணர்வை அதிகரித்தாலும் மின்சிகரெட் புழக்கமும் அதன் விற்பனைக்காகப் பிடிபடுவோரின் எண்ணிக்கையும் கூடிவருகிறது.
கடந்த 2023ஆம் ஆண்டு மின்சிகரெட் வைத்திருந்ததாகக் கூறப்படும் 7,838 பேர் பிடிபட்டனர். இந்த ஆண்டின் முற்பாதியில் கிட்டத்தட்ட 5,480 பேர் மின்சிகரெட் வைத்திருந்ததற்காக அல்லது புழங்கியதற்காகப் பிடிபட்டுள்ளனர். அவர்களில் பள்ளி, உயர்கல்வி நிலைய மாணவர்களும் அடங்குவர்.
நிக்கோட்டின் புழக்கத்தைக் கைவிட முற்படுவோர்க்கு, சுகாதார மேம்பாட்டு வாரியம் உதவி அளிக்கிறது. மின்சிகரெட் புழங்கியதாகப் பிடிபடும் மாணவர்களுக்கு ‘குவிட் லைன்’ எனப்படும் தொலைபேசி வழியிலான ஆலோசனை சேவையும், மாணவ சுகாதார ஆலோசகர்கள் வழங்கும் நேரடி ஆலோசனை சேவையும் கிடைக்கும்.
கடந்த 2023ஆம் ஆண்டில் ஏறக்குறைய 2,350 இளையர்கள் மேற்கூறிய திட்டங்களின் வாயிலாக ஆலோசனை பெற்றுள்ளனர்.
இதனிடையே, மின்சிகரெட் விளைவிக்கும் உடல்நலச் சீர்கேடுகள், இந்தச் சட்டவிரோத செயலில் ஈடுபடுவோருக்கான தண்டனைகள், அதன் தொடர்பான அபராதம் ஆகியவை குறித்த விழிப்புணர்வை பள்ளிகளிலும் கல்வி நிலையங்களிலும் தீவிரப்படுத்தும் வகையில் சுகாதார மேம்பாட்டு வாரியம், கல்வி அமைச்சுடன் தொடர்ந்து பணியாற்றும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைய ஆய்வு தொடர்பில் கருத்துரைத்த சுகாதார மேம்பாட்டு வாரியத் தலைமை நிர்வாக அதிகாரி டே சூன் ஹொங், “சமூகத்தை, குறிப்பாக இளையர்களை ‘இ-வேப்பரைசர்’ புழக்கத்தால் ஏற்படும் தீங்கிலிருந்து பாதுகாக்க வேண்டும். சமூக ஊடகம், மின்னிலக்கப் பிரசாரம், பள்ளித் திட்டங்கள் உட்பட, இளையர்கள் விரும்பும் பல்வேறு தளங்கள் வாயிலாக ‘நிக்கோட்டின் இல்லா சிங்கப்பூர்’ தொடர்பான முயற்சிகளில் அவர்களை ஈடுபடுத்த, தொடர்ந்து முயல்வோம்,” என்று கூறினார்.

