சென்னையில் 39 வயது மருத்துவர் ஒருவர் கடந்த வாரம் திடீர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம், இளையர்களிடையே அதிகரித்து வரும் இதய நோய்களின் அபாயத்தை மீண்டும் நினைவூட்டுகிறது.
ஒரு காலத்தில் முதியோரை அச்சுறுத்திய இதய நோய்கள், இப்போது 20, 30 வயது மதிக்கத்தக்க இளையர்களை அதிக அளவில் தாக்கி வருகின்றன.
உலகச் சுகாதார அமைப்பின் ஆய்வுகள்படி, இந்தியாவில் ஏற்படும் மாரடைப்புகளில் 25 விழுக்காட்டுச் சம்பவங்கள், 40 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு ஏற்படுகின்றன.
அவசரமான வாழ்க்கைமுறை, இளையர்கள் எதிர்கொள்ளும் அதிகப்படியான வேலைப்பளு, மன அழுத்தம், சரியான உறக்கமின்மை, உடல் உழைப்பற்ற வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற உணவுகளை அதிகம் உட்கொள்வது போன்றவை அவர்களின் இதய ஆரோக்கியத்தை வெகுவாகப் பாதிக்கிறது.
இதன் விளைவாக, இளையர்களின் இதயம், அவர்களின் உண்மையான வயதைவிட 10 முதல் 20 ஆண்டுகள் மூப்பு அடைந்திருப்பதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்த ஆபத்தான போக்கைத் தடுக்க, வாழ்க்கை முறையில் சில எளிய மாற்றங்களைச் செய்வது அவசியம். வழக்கமான உடற்பயிற்சி, சமநிலையான உணவு, போதுமான தூக்கம் மன அழுத்தத்தைக் குறைக்கும். ஆண்டுக்கு ஒருமுறை மருத்துவப் பரிசோதனைகளைச் செய்துகொள்வதும் மிகவும் முக்கியம்.
இளமையான இதயத்திற்கான எளிய வழிகள்
இதயத்தின் மீதான சுமையைக் குறைப்பது இதன் நோக்கம். வாழ்க்கையைச் சிறிய, தொடர்ச்சியான பழக்கவழக்கங்களில் இருந்து படிப்படியாக மாற்றலாம்.
அதிகம் நடமாடுங்கள், குறைவாக அமருங்கள்: நீங்கள் உடற்பயிற்சிக் கூடத்திலேயே இருக்க வேண்டியதில்லை. மதிய உணவு இடைவேளையின்போது நடப்பது, படிக்கட்டுகளைப் பயன்படுத்துவது, ஒவ்வொரு மணி நேரமும் உடலை வளைப்பது போன்ற செயல்களால் உங்கள் அன்றாட வாழ்க்கையில் அதிக இயக்கத்தைச் சேர்த்துக்கொள்ளுங்கள். 15 நிமிடங்கள் வேகமாக நடந்தால்கூட பெரிய மாற்றம் ஏற்படும்.
தொடர்புடைய செய்திகள்
இதயத்திற்கு ஏற்ற உணவை உண்ணுங்கள்: முழு உணவுகள், பழங்கள், காய்கறிகள், தானிய வகைகள் ஆகியவற்றிலுள்ள ஆரோக்கியமான கொழுப்புகளில் கவனம் செலுத்துங்கள். இரத்த அழுத்தம் மற்றும் எடையை எதிர்மறையாகப் பாதிக்கக்கூடிய சர்க்கரை மற்றும் உப்பு உட்கொள்வதில் எச்சரிக்கையாக இருங்கள்.
உறக்கத்திற்கு முன்னுரிமை கொடுங்கள்: நாள்தோறும் 7-9 மணி நேரம் தரமான தூக்கத்தை இலக்காகக் கொள்ளுங்கள். தூக்கம் என்பது உங்கள் உடல் தன்னைத் தானே சரிசெய்து கொள்வதற்கான நேரம். இது இதய ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமானது.
அளவீடுகளைச் சரிபாருங்கள்: பிரச்சினை வரும் வரை காத்திருக்காதீர்கள். ரத்த அழுத்தம், கொழுப்பு, ரத்த சர்க்கரை அளவுகளைச் சரிபார்க்க உங்கள் மருத்துவரை அணுகுங்கள். நீண்ட கால உடற்சேதத்தைத் தடுக்க முன்கூட்டிய கண்காணிப்பு அவசியம்.