சிங்கப்பூரில் 15 வயதுக்கும் 21 வயதுக்கும் இடைப்பட்ட இளையர்களில் பாதிப் பேருக்கு ‘திறன்பேசிப் பயன்பாட்டுச் சிக்கல்’ இருப்பதாகப் புதிய ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது.
இது மனநலப் பாதிப்புக்கும் இட்டுச் செல்லலாம் என்று கூறப்படுகிறது.
மனநலக் கழகம் மேற்கொண்ட இந்த ஆய்வுக்கு உள்துறை அமைச்சும் சுகாதார அமைச்சும் நிதி ஆதரவு அளித்தன.
திறன்பேசிகளைச் சார்ந்திருத்தலையும் அவற்றில் நேரம் செலவிடுதலையும் அதனால் ஏற்படக்கூடிய பிரச்சினைகளையும் இந்த ‘திறன்பேசிப் பயன்பாட்டுச் சிக்கல்’ குறிக்கும் என்றனர் மனநலக் கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள்.
இதுகுறித்து மருத்துவ நிபுணர், பெற்றோர், இளையர்கள் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
மணிக்கட்டில் வலி
மருத்துவ ஆலோசனைக்காக இளையர்களைச் சந்திக்கும்போது அவர்கள் திறன்பேசிப் பயன்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதைக் காண முடிகிறது என்றார் பலதுறை மருந்தக மருத்துவர் சரவணன் சண்முகம்.
குறிப்பாக, இளையர்கள் பின்னிரவு இரண்டு மணிவரை திறன்பேசியைப் பயன்படுத்துகின்றனர். அதன்பிறகு எவ்வளவோ முயன்றும் உறங்க முடியாமல் தவிக்கின்றனர். நம் உடலில் ‘சர்கேடியன் ரிதம்’ என்ற ஒன்று இருக்கிறது.
அதன்படி குறிப்பிட்ட நேரத்தில் நம் மூளையில் ‘மெலட்டேனில்’ என்னும் ஹார்மோன் சுரக்கும். அந்த நேரத்தில் உறங்காவிட்டால் பின்னர் உறங்குவது கடினமான செயலாகத்தான் இருக்கும். திறன்பேசியில் விளையாடும்போது உண்டாகும் உற்சாகத்தால் நம் மூளையில் ‘டோப்போமின்’ ஹார்மோன் அதிகமாகச் சுரக்கும். அது மூளைக்குச் தொடர்ந்து செல்வதால் திறன்பேசியைப் பயன்படுத்தும் நேரத்தைக் குறைப்பது சிரமமே என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
அண்மையில் இளையர்கள் சிலர் மணிக்கட்டில் வலிப்பதாக மருத்துவர்களை நாடி வருகின்றனர். இவர்கள் படுக்கையில் படுத்தவாறு திறன்பேசியைக் கையில் பிடிப்பதால் மணிக்கட்டில் உள்ள தசைநார்கள் இறுக்கமாகின்றன.
அதனால், விரல்களுக்குச் செல்லக்கூடிய நரம்புகள் பாதிக்கப்படுவதால் அவர்களுடைய மணிக்கட்டில் வலி உண்டாகிறது. விரல்களும் மரத்துப் போகின்றன. திறன்பேசிப் பயன்பாட்டால் மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் இளையர்கள் பாதிக்கப்பட்டு மருத்துவர்களை நாடும் நிலையே தற்போது தலைதூக்கியுள்ளது.
அதிக நேர பயன்பாட்டைத் தவிர்த்தல்
திறன்பேசி பயன்பாட்டுச் சிக்கலால் பதின்ம வயதினர் மட்டும் பாதிப்படைவதில்லை. அவர்களின் பெற்றோரும் பாதிப்படைகின்றனர் என்றார் இல்லத்தரசியான தேன்மொழி அசோக் குமார்.
தம் மகள் உயர்நிலைப் பள்ளிக்குச் சென்ற பிறகு பாடங்கள் படிக்கத் திறன்பேசியை அதிக நேரம் பயன்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார். அதுபோலவே தனி நபர் கற்றல் கருவியையும் அதிக நேரம் பயன்படுத்த வேண்டியுள்ளது.
இரவு வரை நீளும் திறன்பேசிப் பயன்பாட்டு நேரத்தைக் குறைக்கப் பள்ளிகள் ஆவனச் செய்ய வேண்டும் என்று இவர் கேட்டுக்கொள்கிறார்.
சாப்பிடும் நேரத்திலும்...
தொடக்கத்தில் கட்டுப்பாடுகளுடன் தொடங்கப்பட்ட திறன்பேசிப் பயன்பாடு, மெல்ல அந்தக் கட்டுப்பாடுகளை இழக்கக் காணலாம் என்றார் மற்றொரு பெற்றோரான சுவர்ணலதா.
வேலைக்குச் செல்லும் இவர், தம் பிள்ளைகள் சாப்பிடும் நேரத்திலும் விடாமல் திறன்பேசியைப் பயன்படுத்துவதாகச் சுட்டினார். இதுவரை உடற்கோளாறுகள் எதுவும் தம் பிள்ளைகளிடத்தில் தென்படவில்லை என்றாலும் கவனச்சிதறல், பதற்றம், பிறருடன் நேரடியாகப் பேசும் நேரம் குறைதல் போன்ற அறிகுறிகள் இருப்பதைத் தம்மால் காண முடிகிறது என்றார் அவர்.
அளவோடு பயன்படுத்துதல்
திறன்பேசிப் பயன்பாட்டுச் சிக்கல் குறித்த செய்தி தமக்குப் பயத்தையும் பதற்றத்தையும் அளிப்பதாக நன்யாங் தொடக்கக் கல்லூரி மாணவி பவித்ராதேவி கூறினார்.
திறன்பேசிப் பயன்பாட்டால் தங்களுக்குப் பாதிப்பு வரும் என்று தெரிந்திருந்தும் இன்றைய இளம் தலைமுறையினர் அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.
திறன்பேசி இல்லாமல் இனி அன்றாட வாழ்க்கையை நடத்துவதும் சிரமம். என்றாலும் அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு என்பதுபோல் திறன்பேசியை அளவோடு பயன்படுத்தினால் திறன்பேசி பயன்பாட்டுச் சிக்கல் நேராது என்று தெரிவித்தார் இந்த மாணவி.
இலக்குகளில் கவனம்
தமது திறன்பேசியில் பதிவிறக்கம் செய்த ‘ஸ்கிரீன் டைம்’ (Screen Time), ‘டிஜிட்டல் வெல்பியீங்’ (digital wellbeing) போன்றவற்றின்வழி எந்தெந்தச் செயலியில் அதிக நேரம் செலவாகின்றது என்பதை எந்நேரமும் தம்மால் அறிந்துகொள்ள முடிகிறது என்றார் சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழக மாணவி முத்து சுவேதா.
இது திறன்பேசியைப் பயன்படுத்தும் நேரத்தைக் குறைக்க உந்துதலாக இருப்பதாகக் கூறினார் அவர்.
ஒரு செயலிக்கு ஒதுக்க வேண்டிய நேரம், அந்த நேரத்தை மீறினால் செயலி தானாக இயங்காமல் நின்றுவிடுதல், செயலியைப் பயன்படுத்த மறுநாள் வரை காத்திருத்தல் எனக் கட்டுப்பாடுகள் இருப்பதால் திறன்பேசிப் பயன்பாடும் குறையும்.
நாம் அடைய விரும்பும் குறிக்கோள்கள் குறித்த தெளிவு இருந்தால் அவற்றில் நாம் நேரத்தைச் செலவழிக்க முற்படுவோம். திறன்பேசியில் செலவழிக்கும் நேரம் குறைவதற்கான வாய்ப்பு இதனால் ஏற்படும் என்றார் அவர்.
கூடுதல் செய்தி: கங்கா பாஸ்கரன்

