இசைத்துறையில் முழுநேரமாக ஈடுபடுவதற்குமுன் பிறந்த மண்ணுக்கும் தாய்மொழிக்கும் அடுத்தடுத்த தலைமுறையினர்க்கு, குறிப்பாக பள்ளி செல்லும் பிள்ளைகளுக்குப் பயன்படும் வகையிலும் ஏதாவது செய்யவேண்டும் என்ற உறுதிதான் ‘குறளிசைக் காவியம் 1330’ என்ற பெருந்திட்டத்திற்கான உந்துதல் என்கின்றனர் இளையர்கள் லிடியன் நாதஸ்வரமும் அமிர்தவர்ஷினியும்.
பதின்ம வயதிலிருந்தே இதில் முனைப்புடன் ஈடுபட்ட அனுபவங்களைத் தமிழ் முரசின் ‘ஆய கலை அரிய கலைஞர்’ வலையொளித் தொடருக்கான சிறப்பு நேர்காணலில் இருவரும் பகிர்ந்துகொண்டனர்.
மிகச் சிறு வயது முதலே அருந்திறனாளர்களாக (Child prodigies) அறியப்படும் இவர்களில் இளையவரான லிடியனின் 20வது பிறந்தநாளில் (2025 செப்டம்பர் 6) குறளிசைக் காவியத்தின் முதல் பகுதி சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில் வெளியீடு கண்டது.
கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு முன்பே அக்கா அமிர்தவர்ஷினி 400 குறள்களுக்கு மெட்டமைத்ததாகவும் ஆனாலும் முப்பாலுக்கும் புரிதலோடு இசையமைப்பதற்குமுன் அந்தக் குறள்களை நன்கு உள்வாங்கி, முதிர்ச்சியுடன் பங்களிக்கச் சில ஆண்டுகள் போகட்டும் என்று தங்கள் தந்தை கூறிய ஆலோசனைக்கேற்பச் செயல்பட்டதாகவும் லிடியன் கூறினார்.
அப்போது திருக்குறள் திட்டத்தை நிறுத்திவிட்டு, இடைப்பட்ட காலத்தில் உலகிலுள்ள பல்வேறு இசைக்கூறுகளை, இசைக்கருவிகளைக் கற்றுத் தேர்ந்து, திருக்குறளையும் தனி ஆசிரியர் மூலம் கற்றுக்கொண்டு, ஈராண்டுக்குமுன் மீண்டும் புதிதாக இந்தத் திட்டத்தைத் தொடங்கியதாக அவர் குறிப்பிட்டார்.
தந்தை அளித்த ஊக்கமும் ஆதரவும் அவரது இசையறிவும் தங்களுக்கு மிகச் சிறந்த அடித்தளத்தை அமைத்துத் தந்ததாகக் கூறினார் அமிர்தவர்ஷினி.
உலகின் ஆகச் சிறந்த திறனாளருக்கான பரிசை 13 வயதில் வென்ற தம்பி லிடியன், பல மணி நேரம் ஈடுபாட்டுடன் இசைக்கருவிகளை வாசித்துப் பயிற்சி செய்வதை அருகிலிருந்து பார்ப்பதே தங்கள் குடும்பத்தினர்க்குக் கிடைத்த வரம் என்று சொல்லலாம் என்று குறிப்பிட்ட அவர், இருவரும் சேர்ந்து மேம்படுவது மகிழ்ச்சியளிப்பதாகக் கூறினார்.
பெற்றோர் சொல்லிக்கொடுத்த ஒழுக்கம், அவர்களின் கடின உழைப்பு, ஆதரவு போன்றவை தங்களை வடிவமைத்ததாக இருவரும் கூறினர்.
தொடர்புடைய செய்திகள்
குறளிசைக் காவியம் திட்டத்தில் பங்கேற்க உலகெங்குமுள்ள, தமிழ்ச் சொற்களை நன்றாக உச்சரிக்கக்கூடிய பாடகர்கள் குரல் மாதிரிகளை அனுப்பும்படி ஈராண்டுகளுக்குமுன் இவர்கள் கேட்டுக்கொண்டனர். அதையடுத்து, இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, இலங்கை, ஆஸ்திரேலியா என கிட்டத்தட்ட 25 நாடுகளிலிருந்து 230,000க்கும் மேற்பட்டோர் குரல் மாதிரிகளை அனுப்பியதாகக் கூறினார் லிடியன். சிங்கப்பூர்ப் பாடகர் ஒருவர்தான் முதன்முதலில் குறளைப் பதிவுசெய்த வெளிநாட்டுப் பாடகர் என்றார் அமிர்தவர்ஷினி.
இசைத்துறையில் ஈடுபடுவோர் பொறுப்புணர்வுடன் செயல்படவேண்டியது முக்கியம் என்று கூறிய லிடியன், குறளிசைக் காவியத்தை உலகெங்கும் தமிழ் பயிலும் மாணவர்களின் கல்வித் திட்டத்தில் இணைப்பது தங்கள் இலக்கு என்றார்.
விரைவில் தனது ‘சிம்ஃபொனி’ இசைத்தொகுப்பை வெளியிடவிருப்பதாகவும் அவர் கூறினார்.
நீண்டகாலத் திட்டங்கள் இருந்தாலும்கூட ஒருவர் இன்றைய வேலையைச் செவ்வனே செய்தால் நாளை அது நிச்சயம் நன்மை தரும் என்று சொல்லித் தந்த தங்கள் பெற்றோரின் சொற்களை தமக்கையும் தம்பியும் நினைவுகூர்ந்தனர்.