தீபாவளித் திருநாளுக்கு இன்னும் இரு வாரங்களே இருக்கும் நிலையில், இந்தியா சென்று பண்டிகைக்குத் தேவையான பொருள்களை வாங்க விரும்புவோர்க்கு ஒரு நற்செய்தி!
சிங்கப்பூர் மட்டுமின்றி சென்னை, மும்பை, டெல்லி, ஜெய்ப்பூர், ஹைதராபாத் என இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட விற்பனையாளர்களை ஒரே கூரையின்கீழ் கொண்டுவந்துள்ளது ‘ஸாக் சலாம் இந்தியா’ மாபெரும் தீபாவளிச் சிறப்புத் தள்ளுபடி விற்பனைத் திருவிழா.
40வது முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக்கண்காட்சி, அக்டோபர் 2ஆம் தேதிமுதல் 5ஆம் தேதிவரை சிங்கப்பூர் எக்ஸ்போ, மண்டபம் 5Aல் நடைபெறுகிறது.
ஸாக் வணிகக் கண்காட்சிகள் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடக்கும் இந்தக் கண்காட்சியில் பஞ்சாபி உடைகள், சேலைகள், ரவிக்கைகள், பாவாடைகள், மற்ற வடஇந்திய உடைகள் ஆகிய பலவிதமான பாரம்பரிய இந்திய ஆடைகளும் பல்வேறு அணிகலன்களும் குவிந்துள்ளன.
“தீபாவளிச் சிறப்புச் சலுகையாக, 75 வெள்ளிக்குமேல் பொருள்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இலவச வைரக்கல் வழங்குகிறோம்,” என்றார் நான்கு தலைமுறைகளாகச் செயல்பட்டுவரும் மதுரை டி.எம். சில்க்ஸ் நிறுவனர் தேன்மொழி மீனாட்சி சுந்தரம், 55.
“இளையர்களுக்கேற்ப பழங்கால பாணியில் வடிவமைக்கப்பட்ட பருத்திப் பட்டுச் சேலைகள், புதுப்பாணி கரையுடன் (border) கூடிய மென்மையான, தூய பட்டுச் சேலைகள், 50 வெள்ளிக்கு ‘டிஷ்யூ’ (tissue) சேலைகள், குழந்தைகளுக்கான பாவாடைகள் அனைத்தும் உள்ளன,” என்றார் திருவாட்டி தேன்மொழி.
ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவருக்கும் தேவையான பொருள்கள் அனைத்தும் குறைந்த விலையில் விற்கப்படுகின்றன.
வீட்டிற்குத் தேவையான பொருள்கள், கைவினைப் பொருள்கள், பலவகை உணவுகள், தின்பண்டங்கள், அணிகலன்கள் என ஏராளமான பொருள்களும் விற்பனைக்காகக் குவிந்துள்ளன.
தொடர்புடைய செய்திகள்
ஒவ்வொரு கடையும் தீபாவளியை முன்னிட்டு சிறப்புத் தள்ளுபடியை வழங்குகின்றன.
“மசாலா டீ, லாட்டே (latte), கேப்புச்சினோ (cappuccino) போன்ற பானங்களில்தான் கவனம் செலுத்தி வருகிறேன். ஆயினும், சற்று புதுமையாக, இந்தியச் சமூகத்திற்கு ஒரு சக இந்தியராக பபள் டீயை (bubble tea) அறிமுகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இதைத் தொடங்கினேன்,” என்றார் முதன்முறையாக எக்ஸ்போவில் தமது கடையை அமைத்துள்ள கேஃப்பின் (Kkaffeine) நிறுவனர் கங்கா குமார், 32.
“வண்ணமிகு சேலைகள், அதுவும் வெவ்வேறு நாடுகளிலிருந்து வந்திருப்பதால் எங்களுக்குப் பல தெரிவுகள் உள்ளன. அதுவும் மலிவான விலையில், நாங்கள் சேலைகள், பலகாரங்கள், உணவுப்பொருள்கள், சமையல் பொருள்கள் எனப் பலவற்றை வாங்கினோம்,” என்றார் மூன்றாவது முறையாகத் தம் குடும்பத்தாருடன் ‘ஸாக் சலாம் இந்தியா’வுக்கு வந்திருந்த திருவாட்டி பி சிவகாமி, 65.
தஞ்சாவூர் ஓவியங்கள், செட்டிநாடு ஊஞ்சல்கள், மேசைகள் போன்ற வீட்டிற்குத் தேவையான பொருள்கள் அனைத்தும் இங்குக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறினார், பத்தாண்டுகளுக்கும் மேலாக ‘ஸாக் சலாம் இந்தியா’ எக்ஸ்போவில் கடையை நடத்திவரும் சென்னை ‘ஆர்ட்டிசன்ஸ்’ நிறுவனத்தின் திரு தயாளன்.
நான்கு நாள்களிலும் வருகையாளர்களைக் கவரும் விதமாகப் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கும் போட்டிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அக்டோபர் 2ஆம் தேதி மாலை 5 மணிக்கு ரங்கோலிப் போட்டி இடம்பெற்றது.
அக்டோபர் 5ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்குச் சமையல் போட்டி நடைபெறும்.
மக்கள் தேவையான பொருள்களை வாங்கவும் கண்காட்சியின் இதர அம்சங்களைக் கண்டுகளிக்கவும் இந்த விற்பனைத் திருவிழாவிற்குச் சென்றுவரலாம்.