தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அன்னையரைப் போற்றிய சிறப்பு யோகா நிகழ்ச்சி

2 mins read
d457bd3a-e295-4e12-9308-5d4dc5603293
ஜூன் 1ல் நடைபெற்ற ‘ஸென் மம்’.  - படம்: வாங்கோ ஸ்டுடியோஸ்

அன்னையரைப் போற்றும் வகையில் ஜூன் 1ஆம் தேதி ‘ஸென் மம்’ என்ற சிறப்பு யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.

‘லிஷா’ எனப்படும் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கத்தின் ஆதரவுடன் தேக்கா பிளேசின் ‘ரூஃப்டாப் பவிலியன்’ இடத்தில் முக்தி நிறுவனம் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

மனதுக்கு அமைதி அளிக்கவும் நன்றியுணர்வைப் பெருக்கவும் இந்நிகழ்ச்சியில் கற்றுத்தரப்பட்டது.

வாழ்க்கையையும் மன தைரியத்தையும் எவ்வாறு மேம்படுத்துவது என்ற குறிப்புகளைத் தன்முனைப்புப் பேச்சாளர்கள் பகிர்ந்துகொண்டனர்.  

லிஷாவின் பொது மேலாளர் திரு அப்துல் ரவூஃப்.
லிஷாவின் பொது மேலாளர் திரு அப்துல் ரவூஃப். - படம்: வாங்கோ ஸ்டுடியோஸ்

லிஷாவின் பொது மேலாளரான அப்துல் ரவூஃப், “அன்னை என்ற சொல்லே அற்புதமானது. தியாகம் என்ற பண்பு ஒவ்வோர் அன்னையிடத்திலும் உள்ளது. அதைப் பாராட்ட இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது,’’ என்றார். 

யோகா பயிற்றுவிப்பாளரான திரு ஜீவன்.
யோகா பயிற்றுவிப்பாளரான திரு ஜீவன். - படம்: வாங்கோ ஸ்டுடியோஸ்

கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக யோகா கலையைக் கற்றுத்தரும் திரு ஜீவன், 53, இந்நிகழ்ச்சியை வழிநடத்தினார். தியானம், சுவாசிக்கும் நுட்பங்கள், சரியான ஊட்டச்சத்து அளவை அடைவதற்கான குறிப்புகள் ஆகியவற்றை அவர் விளக்கினார்.  

முக்தி நிறுவனத்தின் யோகா பயிற்றுவிப்பாளராக உள்ள இவர், “இந்த அன்னையர் தின நிகழ்ச்சியை வித்தியாசமான சூழலில் கொண்டாடுகிறோம். இந்நிகழ்ச்சியில் கண், காது மட்டுமல்லாமல் உடலுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது,” என்றார்.  

‘மெட்டாடெஸ்டினி’ நிறுவனத்தின் தலைவர் திருமதி மஹால் ராஜன்.
‘மெட்டாடெஸ்டினி’ நிறுவனத்தின் தலைவர் திருமதி மஹால் ராஜன். - படம்: வாங்கோ ஸ்டுடியோஸ்

இந்நிகழ்ச்சியில் தன்முனைப்புப் பேச்சாளராகக் கலந்துகொண்ட திருமதி மஹால் ராஜன், பரபரப்பான வாழ்க்கைச் சூழல் எவ்வாறு அன்னையரின் ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது, அந்தச் சூழ்நிலையிலிருந்து எவ்வாறு மீள்வது போன்ற குறிப்புகளைப் பகிர்ந்து கொண்டார். 

‘சிம்ஃபனி சென்ட்சேஷன்ஸ்’ நிறுவனத்தின் தலைவர் திருமதி நிக்கோல் டே.
‘சிம்ஃபனி சென்ட்சேஷன்ஸ்’ நிறுவனத்தின் தலைவர் திருமதி நிக்கோல் டே. - படம்: வாங்கோ ஸ்டுடியோஸ்

மற்றொரு பேச்சாளராக ‘சிம்ஃபனி சென்ட்சேஷன்ஸ்’ என்ற நறுமண எண்ணெய் நிறுவனத்தின் தலைவர் திருமதி நிக்கோல் டே கலந்துகொண்டார்.

தனது வங்கி வேலையிலிருந்து இந்தத் தொழிலுக்கு மாறிய தனது அனுபவத்தைக் கூறி, எவ்வாறு தன்னம்பிக்கையுடன் இருப்பது என்ற குறிப்புகளை அளித்தார்.  

இந்நிகழ்ச்சியில் இருந்த யோகா பயிற்றுவிப்பாளர் சௌம்யா ஆளூர், 43, “ஒரே வாரத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில் 35க்கு மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டனர். பெண்கள் எதிர்நோக்கும் மாதவிடாய் நிறுத்தம், மனநலப் பிரச்சனைகள் போன்றவை பற்றிப் பேசப்பட்டது,” என்றார்.

குறிப்புச் சொற்கள்