சிறுநீரகத்தைப் பாதிக்கும் பீகார் இருமல் மருந்துக்குப் புதுச்சேரியில் தடை

1 mins read
2ccdb253-09e5-473a-925e-acb435cbcc51
கடந்த 2025 ஏப்ரல் 2ஆம் தேதி பீகார்-உத்தரப் பிரதேச எல்லையில் உள்ள சௌசா சோதனைச் சாவடியில், தடை செய்யப்பட்ட ஃபென்செடைல் இருமல் மருந்துப் புட்டிகள் கைப்பற்றப்பட்டன. - கோப்புப் படம்: drugcontrol.org

காரைக்கால்: சிறுநீரகத்தைப் பாதிக்கக்கூடிய, அதிக அளவு ‘எத்திலீன் கிளைக்கால்’ அடங்கிய, பீகார் மாநிலத்தில் தயாராகும் ‘அல்மாண்ட் கிட் சிரப்’ மருந்தை விற்கவும் பயன்படுத்தவும் புதுச்சேரி தடை விதித்துள்ளது.

பாதுகாப்பற்ற வேதிப்பொருள்கள் கலந்திருப்பதாகக் கண்டறியப்பட்டதை அடுத்து, பீகாரைச் சேர்ந்த ஒரு மருந்து நிறுவனம் தயாரித்த இருமல் மருந்திற்கு இந்திய மருந்துத் தரக்கட்டுப்பாட்டுத் துறை தடை விதித்துள்ளது.

இது குறித்து அனைத்து மாநில மருந்துக் கட்டுப்பாட்டுத் துறைகளுக்கும் கடிதம் அனுப்பியுள்ளது. அதையடுத்து கோல்கத்தா, தெலுங்கானா மாநிலங்களில் இம்மருந்து விற்பனைக்கு உடனடியாகத் தடை விதிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, புதுச்சேரியிலும் அம்மருந்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

விநியோகிப்பாளர்கள், மருந்துக் கடை உரிமையாளர்கள் இந்த மருந்தை விற்க வேண்டாம். இருப்பில் உள்ள மருந்துகளை நிறுவனத்திற்கே திருப்பி அனுப்ப வேண்டும் என்று புதுச்சேரி மருந்துத் தரக் கட்டுப்பாட்டு ஆணைய அதிகாரி ஆனந்த கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பீகாரின் ‘செனட் லேபரட்டரிஸ்’ நிறுவனம் அக்டோபர் 2025ல், தயாரித்த இருமல் மருந்துகளில், சிறுநீரகத்தைப் பாதிக்கும் நச்சுத்தன்மை கொண்ட எத்திலீன் கிளைக்கால், டைஎத்திலீன் கிளைக்கால் வேதிப்பொருள்கள் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் அதிகமாக இருப்பது ஆய்வில் தெரியவந்தது.

இந்த மருந்தை உட்கொண்டால் அதில் உள்ள நச்சுப் பொருள்கள் சிறுநீரகச் செயலிழப்பு மற்றும் மரணத்தை விளைவிக்கக்கூடும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. எனவே, மருத்துவரின் ஆலோசனையின்றி இதுபோன்ற இருமல் மருந்துகளை வாங்கவோ உட்கொள்ளவோ வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்