தளர்ந்த வாழ்வை
தாலாட்டிக் கொண்டிருக்கிறது காலம்.
அழுக்கின் வாசம் கலந்த
மாத்திரை நெடி.
மழையில் சிக்கிய
சிலந்தி வலையைப்போலக் கட்டில்.
ஆறு கால்களும்
வலுவிழந்த நிலையில்.
தோல் சுருங்கிய உடல்
கசங்கிய துணி மூட்டையாய்.
சக்தியை ஒன்றுதிரட்டிய
ஓர் இருமலில்
கடைவாயின் ஓரம்
நுரைத்த எச்சில்போல் சளி.
கழுத்துக்குக் கீழே போர்த்திய துணி
மேலேறி இறங்குவதைத் தவிர
வேறெந்த அசைவும் இல்லை.
ஒரு “பெயரைச்” சொல்லி
“நான் வந்திருக்கேன்” என்ற
ஓரிரு குரலுக்கு மட்டும் விழிகள் அசைகின்றன.
உறவின் சில குரலுக்கு
அசைவற்று இருப்பதும் அவ்விழிகளே.
உடம்பும்
உயிரும்
உணவில்லாமல் ஊசலாடுகின்றன.
பட்டமரத்தின்
பசுமை நாள்களை
நினைவுக்குள்ளிருந்து எடுத்து
நெஞ்சுருகும் சலசலப்பு கேட்கிறது.
பெருங்காற்று ஏதுமின்றி
வாழ்வின் திரி ஒன்று
எரிவதிலிருந்து விடுபடுகிறது.
இப்படித்தான்
ஒரு நிறைவுக்கு வருகிறது
ஓர் உயிர்க்கூடு.
இனி,
அழுவோரும்
தேம்புவோரும்
இவ்வியல்பை
பிரதியெடுத்துக் கொள்வார்கள்
பின்னொரு நாளில்.
சி.கருணாகரசு

