மெஸ்ஸி 10

மெஸ்ஸி 10

1 mins read
e40b8f6b-2d38-4005-9655-5a0e705be0b7
-

இரா சத்திக்கண்ணன்

இளஞ்சிவப்பு கலந்த

நீலவானக்கூரையின் கீழ்

பனித்துளி நனைத்த பச்சைப்புல்வெளி

போர்த்தி

காற்பந்தாட்ட மைதானம்!

கொந்தளிக்கும்

கடலலைகளின் ஆர்ப்பரிப்பை

விஞ்சிநிற்கும்

விண்ணைத் துளைக்கும்

மெஸ்ஸி மெஸ்ஸியென்ற

கோஷமெங்கும்

நகர மறுக்கிறது

காற்பந்து

விலக மறுக்கின்றன

கோடிக்கண்கள்

மெஸ்ஸியின் கால்களிலிருந்து

பத்தொன்பது வீரர்களும்

இரு கோல்காப்பாளர்களும்

சூழ

காற்பந்துடன் பேசியபடி

களமிறங்கும்

மெஸ்ஸியின் கால்களின்

ஆனந்த தாண்டவம்!

எங்கிருந்து பறந்து

வருகிறாரெனப்

புரியாமல் ரசிக்கிறது !

அருகில் வரும்போதெல்லாம்

அவரை

ஆரத்தழுவி மகிழ்கிறது!

கோல்கம்பம்

மெஸ்ஸியின் கால்களில்

தவழ்ந்த காற்பந்து

கோல்கம்ப வலையை

முத்தமிட்டபோது

மகிழ்கிறது

மொத்த மைதானமும்!

புயலாய் பறக்கிறது

காற்று

மெஸ்ஸி

ஓடும் திசையில்

ஆயினும்

விஞ்ச முடியாமல்

வெட்கப்படுகிறது!

மாயக்காரர்

மெஸ்ஸி செய்யும்

மாயமோ

மந்திரமோ

பொழிகிறது கோல்மழை!

சிலர் நாட்டிற்காக

விளையாடுகிறார்கள்

ஆனால்

உலகமே

மெஸ்ஸிக்காக

விளையாடுகிறது!

உயரே உயரே

விஸ்வரூபமெடுக்கிறார்

மெஸ்ஸி

காற்பந்தாகவே!

குறிப்புச் சொற்கள்
மெஸ்ஸிஇரா.சத்திக்கண்ணன்கவிதைகாற்பந்து