உலகக் கிண்ணம்

உலகக் கிண்ணம்

1 mins read
796653da-83c3-4eb1-bb88-671552b78182
-

உதைக்கப்பட்டபோதெல்லாம்

இலக்கு நோக்கியே

பயணித்த பந்து.

வெவ்வேறு

கால அவகாசங்களில்

வேறுபட்ட கால்களுக்கிடையில்

மாட்டிக்கொண்டபோதும்

வெற்றியை நோக்கியே

உருளும் பந்து.

தாகமும்... மூச்சும்...

இளைத்தபடி

சில சமயங்களில் தடுமாறினாலும்

தூக்கி உந்தத் தகுந்த விசைஞன்

வந்தபோது,

வீரமாய் முன்னேறும் பந்து.

வேகமாய் ஓடுகையில் நிறுத்தப்பட்டு

சுற்றி வளைத்துக் கவனிக்கப்பட்டு

வேறு திசைக்கு மாற்றப்படலாம்...

ஓட்டி வந்த சக்தி

எதிர்த் திசைக்கு இரையாகலாம்...

மீண்டும் வந்த திசைக்கே

திருப்பப்படலாம்...

அங்கே,

அடக்கிப் பிடிக்கப்படலாம்...

ஆவேசமாய்த் தாண்டி வெளியேறலாம்...

இத்தனைக்கும் சளைக்காமல்

உற்சாகமாய்

ஓடிக்கொண்டிருக்கும் பந்து.

மஞ்சள் அட்டையால் மரியாதை இழந்து

சிவப்பு அட்டையில் சீக்கிரம் வெளியாகக்

காரணமாகிப் போனாலும்,

கனவுகளைத் தொலைத்து விடாமல்

சுழலும் பந்து.

எடுப்பார் கால்பிள்ளையென

உதைப்பார்க்கு ஓடும் பிள்ளையான

பந்திற்கு,

நடுவர்களாய் சில பேர்

தற்காலிகத் தயவாய் சில பேர்

வேடிக்கைப் பார்த்து

சிரிக்கவும்... வசைக்கவுமே...

பல பேர்.

நமது

வாழ்க்கைக் கிண்ணங்கள்

உலக விளையாட்டரங்கில்

தினமும்

பந்தாய்ச் சுழன்றபடியே

வெற்றி

தோல்வியை

நிரப்பிக் கொள்கின்றன...

காற்றடைத்த பைகள்தான்

பந்தும் நாமும்

உலகக் கிண்ணத்தில்

உயிருள்ளவரை

உருண்டபடியே!

நெப்போலியன்

குறிப்புச் சொற்கள்
உலகக் கிண்ணம்கவிதைகதை/கவிதைஞாயிறு முரசு