வட்டச் சுற்று

வட்டச் சுற்று

1 mins read
e0b0aa28-5fa0-4816-960b-f15405114817
-

வட்டச் சுற்று வழித்தடமோ

வந்த வரிசை நான்காகும்

தொட்டுச் செல்லும் நிலையங்கள்

தொன்மை மிக்க நகரங்கள்

எட்டுத் திசையை இணைப்பதைப்பார்

எழிலாய்க் காக்கும் காட்டடியில்

விட்டு விட்டு வெளியேறும்

விந்தை கொண்ட பாதையல்ல ! (1)

கிழக்கு மேற்கு தடத்தையிது

கிடைத்த இரண்டில் தொட்டுவிடும்

வழக்கு மாறி போகாமல்

வாஞ்சை கொண்டு மூன்றுமுறை

பழக்க மில்லாப் பயணியரும்

பாதை மாறிப் போகாதார்

உழைக்கும் வர்க்கப் பயனாளி

உடனே வீட்டை அடைவாரே ! (2)

மொத்த முள்ள அறுதடத்தில்

முனைய மில்லாத் தடவழியாம்

பத்தைத் தாண்டும் இணைப்புவழி

பாதை காணும் புதுமையென

மத்தைக் கொண்டு கடைவதைப்போல்

மாறி மாறி சுற்றிவரும்

அச்சம் வேண்டாம் பயணிக்க

ஆழம் அடியில் அறுபதுதான் ! (3)

வலதில் சுற்ற வெளிவட்டம்

வாயில் யாவும் வலப்புறந்தான்

உலகில் காணும் இவ்வடிவம்

உயர்ந்த தரத்தில் ஒன்றாகும்

இலகு வாகப் பயணிக்க

இடையில் வந்த வழித்தடமாம்

செலவில் பெரிதும் சேமிக்க

சீர்மை கொண்ட சிங்கப்பூர் ! (4)

இடதில் சுற்ற சிறுவட்டம்

இதிலும் அவர்கள் வலப்புறந்தான்

நடக்கும் தூர நிலையங்கள்

நான்கில் ஒன்றாம் கணக்குபடி

தடங்கள் ஒன்றாய்ச் சேர்ந்தாற்போல்

தரவு கொண்ட நெடும்பாதை

படங்கள் எடுத்துப் பயணிக்க

பற்றோ சீட்டோ தேவையில்லை ! (5)

எல்ல. கிருஷ்ணமூர்த்தி

குறிப்புச் சொற்கள்