அம்மா சிரிங்க

அம்மா சிரிங்க

9 mins read
சிறுகதை கணேஷ்பாபு
04d3768f-4d1e-4dab-9b91-2f6abc493734
செயற்கை நுண்ணறிவு கொண்டு உருவாக்கப்பட்ட சித்திரம். - தமிழ் முரசு
Google News Preferred Icon

மாலை வெயிலில் மினுங்கியபடியே நகர்ந்தது அந்த நகரப் பேருந்து. பேருந்தின் அகன்ற கண்ணாடிச் சாளரங்களினூடாக ஊடுருவிய சூரியப் பிரபை அங்கிருந்தவர்களை தன் பொன்மஞ்சள் ஒளியில் மூழ்கடித்திருந்தது. ஆங்காங்கே நின்றபடியும் சட்டென நினைத்துக்கொண்டாற்போல வேகமாகவும் சென்று கொண்டிருந்த பேருந்தில் அமர்ந்திருந்தவர்கள் அலுப்புடன் காணப்பட்டார்கள். வேலை முடிந்து சலித்துத் திரும்புபவர்களே அதிகம் இருந்தார்கள். கிட்டத்தட்ட அனைவருமே கைப்பேசியின் திரையில் எதையோ பார்த்தபடியே ஆயாசத்துடன் அமர்ந்திருந்தார்கள்.

பேருந்தின் ஆகக் கடைசி இருக்கையின் ஓரத்தில் அமர்ந்திருந்தாள் அந்தப் பெண். மெலிந்து ஒடுங்கிய ஒற்றை நாடிச் சரீரம், சிவந்த முகம், பிறைச் சந்திரனை நினைவூட்டுவது போல நெற்றியில் மெல்லிய வளைந்த சந்தனக் கீற்றை இட்டிருந்தாள். சிவந்த நிறத்தில் பார்ப்பதற்கு பிரகாசமாக இருந்தாள். ஆனால், கண்களுக்குக் கீழ் நிரந்தரமான கருமை படிந்திருந்தது அவளது நிறத்துக்குப் பொருந்தாமல் சற்றே ரூபக்குறையாக இருந்தது. அடிக்கடி நெஞ்சு ஏறியிறங்கி மூச்சை இழுத்து விட்டுக்கொண்டிருந்தாள், ஆஸ்துமா நோயாளியாக இருக்கலாம். நிறம் மங்கியதொரு சேலை அணிந்திருந்தாள். என்ன நிறம் என்று சரியாக மட்டுப்படவில்லை. ஒருகாலத்தில் அது பசிய நிறமுடையதாக இருந்திருக்கலாம்.

அவள் அருகில் அவளது மகன் அமர்ந்திருந்தான். எட்டு வயதிலிருந்து பத்து வயதுவரை இருக்கலாம். பார்க்கப் பசுமையானவனாக அன்றலர்ந்தவனாக இருந்தான். இளம்பச்சை நிற டீ சர்ட்டும், வெண்ணிற சார்ட்ஸும் அணிந்திருந்தான். வழக்கமான சிறுவனைப்போல அவன் காணப்படவில்லை. முதல் பார்வையிலேயே அவனிடம் ஏதோ ஒன்று வித்தியாசமாகத் தென்பட்டது.

ஓர் இடத்தில் அமரும் பொறுமையற்றவனாகவும், இருக்கையைவிட்டு அடிக்கடி எழுந்து செல்ல முயற்சிப்பவனாகவும் இருந்தான். கண்கள் எதிலொன்றும் நிலையாகப் படியாமல், அலைபாய்ந்துகொண்டே இருந்தன. துணி காயப்போடும் கழியில் அமரும் குருவியைப்போல ஊசலாடியபடியும் படபடப்புடனும் காணப்பட்டான். துப்பாக்கி வெடிப்பதற்காகக் காத்திருக்கும் ஓட்டப் பந்தய வீரனைப்போல, அடுத்த நொடி எங்காவது ஓடிப்போய்விடுபவன் போலவே இருந்தான். பேருந்துக்கு உள்ளேயும், வெளியேயும் பார்வையை வீசியபடி, கைகளை ஆட்டிக்கொண்டே இருந்தான்.

அவன் கையில் ஒரு சிறிய மண் நிற குதிரை பொம்மையை வைத்திருந்தான். நிமிடத்துக்கு நூறுமுறை, மேலேயும் கீழேயும் பக்கவாட்டிலும் அதை ஆட்டிக்கொண்டே வந்தான். அந்தப் பெண் யாரிடமோ கைப்பேசியில் பேசிக்கொண்டிருந்தாள்.

“ஆமாக்கா, இப்பத்தான் அருணோட கிளாஸ் முடிஞ்சுச்சு, வீட்டுக்குப் போயிட்டிருக்கேன்கா, பஸ்ல. இப்ப டோபி காட்ல இருக்கேன்கா, வீடு போய்ச் சேர இன்னும் ஒரு மணி நேரத்துக்கு மேல ஆயிரும். டிராபிக் வேற.”

“அருணா? அவனப் பத்தித்தான் தெரியும்லகா, இப்பவரைக்கும் ஒரு முன்னேற்றமும் இல்லக்கா. இனிமே வாழ்க்கைல என்னக்கா இருக்கு, சலிச்சுப் போச்சுக்கா, இந்த பஸ்ஸு மாதிரித்தான் என் வாழ்க்கையும் நின்னு நின்னு நகர்ந்துக்கிட்டு இருக்கு, என்னத்தச் சொல்ல?”

“தைரியமாத்தான் இருக்கேன்க்கா, தைரியத்துக்கு என்ன குறை?”

“விரக்தியால்லாம் பேசலக்கா, மனுசங்க எல்லாரும் அவங்கவங்க வாழ்க்கையில் ஒரு முன்னேற்றத்த எதிர்பார்த்துத்தான வாழ்ந்துக்கிட்டு இருக்காங்க, என் வாழ்க்கையில் எந்த முன்னேற்றமும் இல்லங்கறது நிச்சயமா தெரிஞ்சதுக்கு அப்புறமும் எந்த நம்பிக்கையில வாழ முடியும், வாழ்க்கைக்குன்னு ஒரு கொறஞ்சபட்ச ஆதாரம் வேணும்லக்கா, பிடிமானம் எதுவுமில்லாம காட்டாத்து வெள்ளத்துல சிக்கிக்கிட்ட மாதிரி அலைபாஞ்சுட்டு இருக்கேன்.”

அந்தப் பெண் போனில் பேசிக்கொண்டிருக்கும்போதே அவளது மகன் அங்கும் இங்கும் எழுந்து ஓட முயற்சித்தான். பெரும் பிரயாசைப்பட்டு அவள் அவனது கைகளை இறுகப் பற்றியபடியே பேசினாள்.

இதுவரை எதுவும் பேசாமல் வந்தவன், முதன்முதலாகத் தன் அம்மாவின் முகத்தைத் தன்னை நோக்கி வலுக்கட்டாயமாகத் திருப்பி, “அம்மா, சிரிங்க” என்றான்.

“அத ஏன் கேக்கறீங்க, அம்மா சிரிங்கன்னு சொல்றான்”, என்றாள்.

“ஆமாக்கா, இந்த ஒரு வார்த்தையத்தான் நாள் முழுக்கச் சொல்லிட்டே இருப்பான். வேற எதுவும் பேசத் தெரியாது, பத்து வயசுல அவனால பேச முடிஞ்சது அம்மா சிரிங்கன்ற இந்த வார்த்தைய மட்டுந்தான்.”

“உங்களுக்குத்தான் தெரியுமேக்கா, மூணு வயசுல இருந்து வைத்தியம் பார்த்துக்கிட்டு இருக்கோம். நாலாயிரம் பேரு இருக்க நாய் மேல இடி விழுந்தமாதிரி, எனக்குத்தான் ஊருப்பட்ட பிரச்சினையெல்லாம் தேடி வருது. ஒரு பிரச்சினையின்னு ஒண்ணு இருந்தா அதுக்குத் தீர்வுன்னு ஒண்ணு இருக்கணும்லக்கா? அதுதான நியாயம்? ஒரு வியாதின்னு இருந்தா அதுக்கு மருந்துன்னு ஒண்ணு கட்டாயமா இருக்கணும்லக்கா? எனக்கு மட்டும் ஏன் தீர்வே இல்லாத பிரச்சினைகளும், மருந்தே இல்லாத வியாதிகளும் தேடி வரணும்? எந்த ஜென்மத்துல செஞ்ச வினையோ, இப்படி ஆட்டி வைக்குது. கண்ணு முன்னாடி சாவான பாவம் பண்ணிக்கிட்டிருங்கவங்க எல்லாம் நல்லாத்தான் இருக்காங்க, நானோ, என் பையனோ என்ன பாவம் பண்ணினோம்னு தெரியல, இப்படிப்பட்டதொரு பாவப்பட்ட விதி விதிச்சிருக்கு.”

“ஒரு முன்னேற்றமும் இல்லக்கா, அருணுக்கு மூணு வயசுல ஆட்டிசம்னு சொன்னாங்க, அந்த வார்த்தையவே அப்பத்தான் முதன்முதலா கேள்விப்பட்டேன். இது வியாதியெல்லாம் இல்ல, ஒரு குறைபாடு, ஆனா இத சரிபண்ணுறதுக்கான மருந்துன்னு எதுவும் இல்லயாம். பேச்சு வர்றதுக்கான தெரபியும், பழக்கவழக்கங்கள ஒழுங்குபடுத்துறதுக்கான தெரபியும்தான் குடுக்குறாங்க, இவனால படிக்க முடியலக்கா, வழக்கமான ஸ்கூல்ல சேர்க்க முடியாதுன்னு மறுத்துட்டாங்க, அதனால வீட்டுப் பக்கமா இருக்கிற ஒரு ஸ்பெஷல் ஸ்கூல்லதான் சேர்த்துவிட்டிருக்கேன்”.

இப்போது அந்தச் சிறுவன், தன் தாயின் முகத்தை இழுத்தபடியே, “அம்மா சிரிங்க” என்றான். அவள் அதைக் கண்டுகொள்ளாமல் தன் பேச்சைத் தொடர்ந்தாள்.

“படிப்புன்னு ஒண்ணும் பெருசா சொல்லிக்குடுக்க மாட்டாங்க, அவனுக்குத் தேவையான அன்றாட விஷயங்கள சொல்லிக்குடுப்பாங்க, டிராபிக் சிக்னல எப்படிக் கடக்கணும், காச எப்படி எண்ணனும், மத்தவங்களோட எப்படிப் பழகணும், அவனுக்குத் தேவையான காரியங்கள அவனா எப்படிச் செய்யணும், இப்படி அவனோட வாழ்க்கைல அடிப்படை விஷயங்களையும் தினப்படி காரியங்களையும் பிறத்தியார் உதவியில்லாம எப்படிச் செய்யணும்னு சொல்லிக்குடுப்பாங்க, அவனுக்குத் தேவையும் அதுதானக்கா? அல்ஜீப்ராவும், ஹிஸ்டரியுமா அவனுக்குத் தேவை?”

“என்னமோ தெரியலக்கா, இந்த உலகம் எங்கியோ என்ன விட்டு தொலைதூரத்துல போயிட்டிருக்கு, நான் மட்டும் நகராம நின்ன இடத்துலயே நின்னுக்கிட்டிருக்கேன். வாழ்க்கை ஒரு ஓட்டப்பந்தயம். நம்மால ஆன மட்டும் வேகமா ஓடணும்னு சொல்வாங்க, எங்கூட இந்தப் பந்தயத்த ஓட ஆரம்பிச்சவங்க எல்லாரும் ரொம்ப தூரம் முன்னாடி ஓடிப் போயிட்டாங்கக்கா. தூரத்துல ஒரு சின்னப் புள்ளியாத் தெரியற அளவுக்கு முன்னாடி போயிட்டாங்க. நான் மட்டும்தான் தொடங்கின இடத்துலயே நின்னுக்கிட்டு இருக்கேன். தீர்வே இல்லாத பிரச்சினைகளச் சுமந்துக்கிட்டு. சிறுத்தையும் மானும் முயலும் ஓடற காடுக்கா இந்த வாழ்க்கை. நான் ஆமைகூட இல்லக்கா, நத்த. எப்படி இந்த வாழ்க்கைய ஓட்டப் போறேன்னு தெரியலக்கா”

அவள் பேசிக்கொண்டிருக்கும்போதே கண்ணீர் ஒரு நூலைப்போல அவளது கன்னங்களில் வழிந்தது. அந்தப் பையன் தன் விரல்களால் அந்த நீர்க்கோட்டைத் தொட்டபடியே மீண்டும் “அம்மா, சிரிங்க” என்றான்.

“பையன் பிரச்சினை ஒருபக்கமிருக்க, வீட்டிலயும் அவரோட இணக்கமா இருக்க முடியலக்கா. பையனுக்கு இருக்கற பிரச்சினையப் புரிஞ்சுக்கவே மாட்டேங்கறாரு. அவரால தன்னோட பையனுக்கு சரியாக்கவே முடியாத ஒரு குறைபாடு இருக்குங்குறத ஏத்துக்கவே முடியல. என்னோட மகனுக்கா இப்படி, என்னோட மகனுக்கா இப்படின்னு தினமும் புலம்பிக்கிட்டே இருக்குறாரு. ஒரு கட்டத்துல இத ஏத்துக்கிட்டாத்தானாக்கா அடுத்தடுத்து நகரமுடியும். அதுகூடப் பரவாயில்ல. இத ஒரு கௌரவப் பிரச்சினையாவும் பாக்குறாரு. ஃபிரண்டுகளோட குழந்தைங்க, சொந்தக்காரங்களோட குழந்தைங்கள எல்லாம் பார்த்துட்டு, நம்ம குழந்தை மட்டும் ஏன் இப்படின்னு தனக்குத்தானே பேசிக்கிட்டு வருத்தப்பட்டுட்டு இருக்காரு. நான் ஏதாச்சும் ஆறுதல் சொன்னா கோவிச்சுகுறாரு. ஒங்ககிட்ட சொல்றதுக்கு என்னக்கா, நாங்க ரெண்டு பேரும் கடந்த ஏழு வருசமா நடைப்பிணமாத்தான் வாழ்ந்துட்டு இருக்குறோம்.”

இப்போது அந்தப் பையன் தன் தாயின் கைவிரல்களைப் பற்றிக்கொண்டு, “அம்மா, சிரிங்க” என்றான்.

“இப்பல்லாம், எங்க ரெண்டு பேருக்குள்ள அடிக்கடி சண்ட வருதுக்கா. இவனோட நிலைமையப் புரிஞ்சுக்காம இவன அவர் கடுமையா பேசுறாரு. அது எனக்குப் புடிக்கலக்கா. இப்படிப்பட்ட பிள்ளைங்களப் பெத்தவங்களே இவங்கள வெறுக்க ஆரம்பிச்சுட்டா, இந்த உலகத்துல வேற யாருக்கா, இவங்களப் புரிஞ்சுக்குவாங்க. அன்புகாட்ட வேணாம், ஒரு ஆறுதலா இருக்கலாம்ல. கொஞ்ச வேணாம், திட்டாம இருக்கலாம்ல. இந்த ஒரு கொறயத் தவிர வேறொண்ணும் இல்லக்கா. என் பையன இன்னிக்கெல்லாம் பார்த்துக்கிட்டே இருக்கலாம். வரைஞ்சுவச்ச ஓவியத்துல இருந்து பறிச்சு எடுத்தாப்ல வடிவா இருப்பான். ஒரு குட்டி இளவரசனாட்டம். அவன் குடுத்து வச்சது அவ்வளவுதான். போயும் போயும் எங்களுக்கு வந்து பிறந்துட்டான்.”

“ஊருக்கு வந்திரலாம்க்கா. அங்க என்னப் பிரச்சினைனு உங்களுக்கே தெரியும். சொந்தக்காரங்ககிட்ட ஒவ்வொருநாளும் ஏதாவது பேச்சு வாங்கிக்கிட்டேதான் காலத்த ஓட்டணும். சொந்தக்காரங்களப் பொறுத்தமட்டிலும், நாம நல்லா இருந்தாலும் பிரச்சின, நல்லா இல்லைன்னாலும் பிரச்சினதான்க்கா. இதுல ஒவ்வொருத்தரும் டாக்டரா மாறி ஆலோசனை சொல்றதுதான் தாங்க முடியல. நேர்ல ஒருமாதிரி பேசறதும், முதுகுக்குப் பின்னாடி ஒரு மாதிரி பேசறதும். சொந்தக்காரங்களோட இணக்கமா இருக்கணும்னா ஒண்ணு நம்ம வாய மூடி வச்சுக்கணும், இல்லன்னா ரெண்டு காதையும் மூடி வச்சுக்கணும். எனக்கு இந்த ரெண்டுமே சரிப்பட்டு வராது. என்னா செலவானாலும் இங்கயே இருக்குறதுதான் சரின்னு படுதுக்கா. அது மட்டுமில்ல, ஊருல ஆட்டிசம் பத்தி இன்னும் பரவலா தெரியலக்கா. சிங்கப்பூருல எவ்வளவோ தேவலை. இந்தக் குழந்தைங்களோட பிரச்சினைகள இங்க புரிஞ்சுக்கிறாங்க. ஆனாலும் நம்மள நோகடிக்கிறதுக்கு இங்கயும் சிலர் இருக்கத்தான் செய்யுறாங்க. போன வாரம்கூட, என் பையன் ஓவரா கத்துறான்னு சொல்லி ஒரு டாக்ஸி டிரைவர் நடுவழியிலயே எங்கள இறக்கி விட்டுட்டாரு. நோயக்கூட சமாளிச்சிரலாம். மனுஷங்கள சமாளிக்கிறதுதான் கஷ்டமாயிருக்கு.”

இவள் பேசிக்கொண்டிருக்கும்போதே, ஓர் இளம்பெண், அந்தப் பையனுக்கருகே வந்து அமர்ந்தாள். அந்தப் பையன் சட்டென அவளது கையைத் தொட்டான். இதைக் கவனித்த இவள், பையனின் கையை விடுவித்துக்கொண்டு, அந்தப் பெண்ணிடம், “ஸாரி” என்றாள்.

அந்தப் பெண் இறுக்கமான முகபாவத்துடன் வேறொரு இருக்கையில் மாறி உட்கார்ந்து கொண்டு, தன் கைப்பேசியைப் பார்க்கத் துவங்கினாள். பையன் தன் தாயின் முகத்தைத் தன்னை நோக்கித் திருப்பி மீண்டும், “அம்மா, சிரிங்க” என்றான்.

அவள் மீண்டும் போனில் தன் உரையாடலைத் தொடர்ந்தாள், “ஒண்ணும் இல்லக்கா, வழக்கமா நடக்குறதுதான். அதெல்லாம் இல்ல. பேசலாம்க்கா. எனக்கு வீட்டுக்குப் போயிட்டா போன்ல பேசறதுக்கு நேரம் இருக்காதுக்கா. எனக்குப் பேசறதுக்குப் பிடிக்கும்கா. வீட்டுக்காரரோட இப்பல்லாம் பேச்சுவார்த்த கொறஞ்சுக்குட்டே வருதுக்கா. பக்கத்து வீட்டுக்காரங்க, ஃபிரண்ட்ஸுன்னு யாரும் அதிகம் இல்ல. இப்படி எப்பவாச்சும் பேசிக்கிட்டாத்தான் உண்டு.”

“எனக்கு இருக்குற கவலையெல்லாம், என் காலத்துக்கு அப்புறம் இவன யாருக்கா பாத்துக்கப் போறாங்க என்கிறதுதான். இப்பவே என்னத்தவிர யாரும் இவனோட நேரம் செலவிட மாட்டேங்கறாங்க. இவன் வளரவளர விதவிதமான பிரச்சினைகளும் வரும்.

“வருங்காலத்த நினைச்சா ரொம்ப பயமா இருக்குக்கா. தூக்கமே வரமாட்டேங்குது. பொதுவா பெத்தவங்களுக்கு வயசானா பிள்ளங்கதான் பாத்துக்குவாங்க. ஆனா, எத்தன வயசானாலும் என் பையன நான்தான பாத்துக்கணும். வருங்காலத்துல நல்லா இருப்போம்னு நம்பித்தான ஒவ்வொருத்தரும் வாழ்க்கைய ஓட்டிக்கிட்டு இருக்காங்க. வருங்காலம்னு ஒண்ணு எங்களுக்கெல்லாம் இல்லையேக்கா. வருங்காலமும் இருட்டாத்தான் இருக்கும்னு நிச்சயமா தெரிஞ்சதுக்குப்புறமும் வாழ்ந்துக்கிட்டே இருக்குறது மாதிரி சிரமமான காரியம் வேறெதுவும் இல்லக்கா. “

“தெய்வமா, அப்படி ஒண்ணு இருக்காக்கா? கோயிலு கோயிலா போயி அலுத்துப் போச்சுக்கா. இனிமேலும் முடியாது. என்னத்த சொல்றது?. உங்களுக்கு நம்பிக்கை இருந்தா எங்களுக்காக வேண்டிக்கங்கக்கா.”

“நாளைக்கு கூப்புடறீங்களா?. சரிக்கா. என் புராணத்தையே பேசிக்கிட்டு இருந்துட்டேன். ஒங்களுக்கும் நேரம் ஆச்சு. ஒங்ககிட்ட பேசினது கொஞ்சம் ஆறுதலா இருக்குக்கா. அடிக்கடி பேசுங்கக்கா. சரிக்கா, சரிக்கா” என்று சொல்லி, போன் பேச்சை நிறைவு செய்தாள் அந்தப் பெண்.

மிகவும் சோர்வுடன் தென்பட்ட அந்தப் பெண் சற்று நேரம் கண்ணை மூடினாள். சட்டென தொண்டை கனத்து, கண்கள் நீர் சுரந்தன. உண்மையில் அவளுக்கு ஆறுதல் கிடைக்குமளவு ஒன்றும் நடந்துவிடவில்லை. இன்னொருவரிடம் தன் வாழ்வின் துயரத்தை இப்படி விஸ்தாரமாகச் சொல்ல நேர்ந்துவிட்டதே என்று அவளுக்கு ஆற்றாமையாக வந்தது.

நெஞ்சு புகைய, உடல் சோர, இருக்கையில் சாய்ந்தாள். வாழ்வைப் போலவே, இந்த பேருந்தின் இரு பக்கமும் குறுகியபடி வந்து அவளை இருபக்கமும் அழுத்துவதாகத் தோன்றியது. மூச்சு முட்டியது. சரியாக, அத்தருணத்தில், அந்தப் பையன் அவளது முகத்தை மீண்டும் தன் பக்கம் திருப்பி, சத்தமாக, “அம்மா சிரிங்க” என்றான்.

அதுவரை அடக்கிவைத்திருந்த நெருப்புக் குழம்பு, சட்டென அவளுள் வெடித்தது. பார்த்துக்கொண்டிருந்தபோதே அந்தப் பெண் உக்கிர ரூபியானாள்.

“ஷட் அப் அருண், இப்ப உனக்கு என்ன வேணும், நான் சிரிக்கணும், அவ்வளவுதானே, நான் சிரிச்சா உனக்கு நெறஞ்சுருமா, எல்லாம் சரியாயிருமா?” என்றபடியே, ”ஹஹஹா, ஹாஹாஹா” என்று வெறித்தனமாகச் சிரிக்கத் துவங்கினாள்.

அது சாதாரணச் சிரிப்பில்லை. சங்கிலித் தொடர் போன்று நீண்டு பெருகிய முடிவற்ற அமானுடச் சிரிப்பு அது. திசைகளின் எல்லைகளில் சென்று எதிரொலித்த சிரிப்பு அது. சிறிய உடம்பு கொண்ட சாதாரண மானுடப் பெண்ணின் சிரிப்பா அது? நஞ்சுண்டு கறுத்த கண்டம் கொண்டவளும், அரவு நாண் பூட்டி நெடுமலை வளைத்தவளும், அவுணன் தலைமிசை நின்ற தையலுமான கொற்றவையின் சிரிப்பல்லவா அது! ஒரு கையில் சங்கும் மறுகையில் சக்கரமும் ஏந்திய அந்தரியின் சிரிப்பல்லவா அது! திசைப்பூதங்கள் வெருளும், அணங்கு கிளம்பியதுபோன்ற அந்தச் சிரிப்பை, ஆகாயத்தைத் தகர்த்தெறியக்கூடிய அந்தச் சிரிப்பை, பாவம் அந்தச் சிறிய பேருந்தினால் தாங்க முடியவில்லை.

பேருந்து ஓட்டுனர் ஒருகணம் திகைத்து, வண்டியை நிறுத்தி அவளை மிரட்சியுடன் பார்த்தார். சக பயணிகள் எல்லாம் அலுப்பு மறந்து அவளை அச்சத்துடன் பார்த்தனர்.

வம்பப் பெருந்தெய்வம் ஒன்று புகுந்தாற்போல அந்தப் பெண் சிரித்துக்கொண்டே இருந்தாள். வான்பிளந்து கொட்டும் சரமழையாய் அவளது சிரிப்பு பொங்கிப் பிரவகித்தபடியிருந்தது. யாருக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை.

சிறிது நேரத்தில் அந்தப் பேருந்து மீண்டும் கிளம்பியது. அவளது பெருஞ்சிரிப்பின் பாரத்தைத் தாங்கமாட்டாத அந்தப் பேருந்து, முக்கித் திணறித்தான் அந்த மருள்மாலை வேளையில் மீதி தூரத்தைக் கடக்க வேண்டியிருந்தது. இறுதிவரை அந்தப் பெண் இறங்கவேண்டிய நிறுத்தம் மட்டும் வரவேயில்லை.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்