அகம் தொலைந்த போது

அகம் தொலைந்த போது

இராசராசன் ஹேமலதா

25 Oct 2026 - 5:45 am

10 mins read

2013ஆம் ஆண்டுச் சித்திரை மாதம் 1ஆம் தேதி மாலை நேரம்.

சிங்கப்பூரின் பூமலைப் பகுதியில் உள்ள பழைய சமூக மண்டபத்தின் முன் என் காரை நிறுத்தினேன். அந்த மாலைப்பொழுதில் மழை வருமோ என்றாற்போல வானம் சாம்பல் நிற வண்ணத்தைத் தனது மேனி முழுவதும் வாரிப் பூசியிருந்தது.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் புனர்வாழ்வுக்காக அந்த மண்டபத்தில் அன்று ஒரு சிறிய கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நான் காரின் கதவைத் திறந்து இறங்கும்போது என் கைப்பேசி ஒளிர்ந்தது.

‘ஐயா! எல்லாரும் வந்துவிட்டாங்க. உங்கள் வருகைக்காகக் காத்திருக்கிறோம்.’ என்று குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார் முகிலன்.

அந்தச் செய்தியைப் படித்ததும் என் உதடுகளில் ஒரு சிறு புன்னகை மலர்ந்தது.

மக்கள் கூட்டம் நிரம்பி இருப்பதற்கான காரணம் என்னுடைய பேச்சின் வலிமை என்று என் உள் மனம் கர்வம் கொண்டது.

முகிலனுக்குப் பதில் குறுஞ்செய்தி அனுப்பிய வண்ணம் காரிலிருந்து இறங்கி மண்டபத்தை நோக்கி விரைவாக நடக்க ஆரம்பித்தேன்.

மேடையின் மத்தியில் மெதுவாக ஒளிரும் விளக்கின் கீழ் அமர்ந்திருக்கும் அனைவரும் எனது வருகைக்காகக் காத்திருந்தார்கள்.

கதிர் என்கிற கதிர்வேலன் ஒரு சாதாரண மனிதனா?

‘அவன் தொண்டூழியன்…

தொழிலதிபன்…

தன்முனைப்புப் பேச்சாளன்…’ என்று என் உள்ளம் அடுக்கிக்கொண்டே போனது. அந்தக் குரலை அடக்கிக்கொண்டு மேடை நோக்கி நடந்தேன்.

காற்றில் அசைந்தாடிய என் சுருள் முடியை ஒரு கையால் வருடியபடி நான் மேடையை நோக்கி விரைந்து செல்வதைப் பார்த்ததுமே, ‘இவர்தான் கதிரா’ என்று ஒரு முதியவர் என் காதுபடச் சொல்வதைக் கேட்டுத் திரும்பிப் பார்த்தேன்.

என்னைத் தெரியாதவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர் என்று எண்ணிக்கொண்டே மேடையை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

முதியவர் இன்றுதான் கதிரை முதல் முறையாகப் பார்க்கிறார்.

கதிரின் நடையில் தன்னம்பிக்கையும், யாரையும் எளிதில் வசீகரிக்கும் முகப் பாவமும் இருந்ததை அவர் கவனிக்கத் தவறவில்லை.

எல்லாரும் எதிர்பார்த்தது போல நான் மேடையில் ஏறியவுடன் எல்லாரிடமும் தாமதத்திற்கு மன்னிப்புக் கேட்டேன்.

அங்குக் கூடியிருக்கும் மக்களை என் கண்களால் கணக்கெடுப்புச் செய்தேன்.

அப்போது என் கண்கள் ஒருவரிடம் நின்றுவிட்டன.

அரங்கின் ஓரத்தில் ஒரு மூலையில், சுமார் அறுபத்து ஐந்து வயதுடைய ஒரு முதியவர் அமைதியாக அமர்ந்திருந்தார்.

ஏனோ இன்னொருமுறை என் கண்கள் அவரை நோக்கிச் சென்றன.

நான் உரையாற்றும் போது மிகவும் ஆர்வத்துடன் தலையாட்டி ரசித்த அந்த முதியவரைப் பார்க்கும்போது நான் மேலும் ஆர்வத்துடன் என் பேச்சைப் பேச ஆரம்பித்தேன்.

அந்த முதியவர் அவ்வப்போது தன் அருகில் வைத்திருந்த அந்த வெள்ளை நிறக் கைத்தறித் துணிப்பையைத் திறந்து பார்ப்பதும் அதில் தன் பழைய பணப்பை இருக்கிறதா என்ற சரிபார்ப்பதுமாக இருந்ததை என்னால் உணரமுடிந்தது.

மீண்டும் நான் ஏதேச்சையாகப் பார்த்த போது அவரிடம் நேரம் இருந்தால் பேசவேண்டும் என்று எனக்குத் தோன்றியது.

நான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் புனர்வாழ்வுக்காக நடத்தி வரும் ‘ஜீவா’ அறக்கட்டளையைப் பற்றிப் பேசினேன்.

என் நண்பன் ‘ஜீவா’.

சிறுவயது முதல் நண்பன்.

நான் ஏழை.

அவன் வசதியானவன்.

ஆனால், நோய் என்பது, யார் வேண்டும்? என்று தேர்ந்தெடுத்து வருவதில்லையே.

‘வயது முப்பத்து மூன்று.’

“புற்றுநோய் வந்துவிட்டது.”

அரங்கில் அமைதி நிலவியது.

“மருத்துவமனையில் படுத்திருந்தபோது ‘ஜீவா’ என்னிடம் சொன்னது —

‘நான் போய்விட்டாலும் என் பிள்ளைக்கு வாழ்க்கை பற்றிய பயம் இருக்கக் கூடாது.

அவனுக்குக் காத்திருக்கும் உலகம் நல்லதாக இருக்க வேண்டும்.’

சற்று நேரம் நான் பேச முடியாமல் நின்றேன்.

அரங்கில் இருந்தவர்கள் அமைதியாகினர்.

நண்பன் இறந்த ஒரு வருடத்திற்குள் அவன் மனைவியும் அவன் இழப்பைத் தாங்க முடியாமல் போய்விட்டார்.

அன்றிலிருந்து அவனது ஆண் குழந்தை என் குழந்தை ஆனது.

என் குரல் மெதுவாக உடைந்தது.

சற்று நேரத்தில் எனது நீண்ட உரையை நிகழ்த்திவிட்டு அமர்ந்தேன்.

நான் இப்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் புனர்வாழ்வுக்காக ஓர் அறக்கட்டளை நடத்தி வருகிறேன். அதுவே முன் நான் குறிப்பிட்ட ‘ஜீவா’ அறக்கட்டளை என்றேன்.

அதற்காக, நான் பல இடங்களுக்கும், ஏன் பல நாடுகளுக்கும் சென்று உரையாற்றி வருகிறேன்.

எல்லாரும் எனது பேச்சை மிகவும் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தனர். அந்த முதியவரும் தொடர்ந்து அமைதியாக நான் சொல்வதை மிகவும் ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டிருந்தார்.

அரங்கில் இருந்தவர்களில் சிலர் கைதட்டினார்கள்.

சிலர் கண்களில் கண்ணீர் வழிவது யாருக்கும் தெரியாமல் இருக்க ஏதோ கீழே விழுந்த பொருளைத் தேடுவதுபோலக் கண்களைத் துடைத்தனர்.

சிலர் அன்றே நன்கொடை அளிக்க முன்வந்தனர்.

அரங்கில் கடைசி வரிசையில் முதியவர் அமைதியாக உட்கார்ந்திருந்தார்.

அவர் முகத்தில் எந்தக் குறியும் இல்லை. அவரை யாரும் கவனிக்கவில்லை.

மக்கள் நன்கொடைகள் கொடுக்க வரிசையில் நின்றனர். அந்த முதியவரும் மெதுவாக வரிசையில் வந்து நின்றார்.

சுருங்கிய சட்டை. உழைப்பால் கருமையாகிய கைகள். ஆனால், கண்களில் ஒரு விசித்திரமான அமைதி; ஒரு பொலிவு அவரிடம் தெரிந்ததை என்னால் காணமுடிந்தது.

உங்களுக்கு எதாவது உதவி தேவையா? என்று வேண்டுமென்றே என் உரையாடலை முதியவரிடம் தொடங்கினேன்.

சேச்சே! அப்படியெல்லாம் இல்லை. உங்கள் பேச்சு என் மனத்தை உலுக்கியது. என்னால் ஏதாவது உதவி செய்ய முடியுமா? என்று பார்க்கிறேன் என்றார்.

என்ன உதவி செய்ய விரும்புகிறீர்கள்? என்று மெதுவாகக் கேட்டேன். என் உள்ளத்தில் இவர் என்ன பெரியதாகச் செய்துவிடப் போகிறார் என்ற எண்ணம் சட்டென மின்னல் போலத் தோன்றி மறைந்தது.

அந்த முதியவர் ஒரு நிமிடம் தயங்கினார்.

‘என்னால் அதிகமாகப் பணம் கொடுக்க முடியாது ஐயா’ என்றார்.

நான் யூகித்தது சரியாகப் போனது என்று எண்ணினேன்.

முதியவர் மெளனம் காத்தார்.

‘பெரியது சிறியது என்று எதுவுமில்லை,’ உதவ வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் போதும் என்று என் வழக்கமான வசனத்தை அவரிடமும் ஒப்புவித்தேன்.

‘… நான் மாதம் ஒரு 200 வெள்ளி அனுப்புகிறேன் ஐயா’ என்றார்.

நான் திடுக்கிட்டேன்.

அந்த முதியவரை மீண்டும் கவனமாகப் பார்த்தேன்.

‘உங்களுக்குச் சிரமமா இருக்குமா?’ என்றேன்.

அவர் சிரித்தார். ஐயா நான் ஒரு சாதாரண மனிதர்.

சிங்கப்பூரில் உள்ள பல வீடுகளுக்கு மர அலமாரிகள் செய்து தரும் ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் ஒரு சாதாரணத் தொழிலாளி.

மாதம் மிகக் குறைவான சம்பளம்தான். ஆனாலும், நீங்கள் சொன்ன கதையைக் கேட்டபோது எனக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று தோன்றியது.

பெரிதாக என்னால் தர இயலாது. ஆனாலும் நான் மாதம் 200 வெள்ளி அனுப்புகிறேன்.

உங்கள் அறநிறுவனத்தின் தகவல்களைத் தர முடியுமா? என்று கேட்டார்.

அவரே உதவி வேண்டுபவர் போல இருக்கிறார்; எனினும் மற்றவர்களுக்கு உதவும் நல்ல உள்ளம் இருப்பதை என்னால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

அவரை நான் மனதாரப் பாராட்டினேன்.

உங்களால் முடிந்தபோது செய்யுங்கள் என்று பொதுவாகச் சொன்னேன்.

‘இல்ல ஐயா. என்னால் முடியும்.’ என்றார் முதியவர் உறுதியாக.

பிறகு நான் எங்கள் அறக்கட்டளையின் தகவல்களை ஒரு தாளில் எழுதி அவரிடம் நீட்டினேன்.

அதன்பின் அவர் அமைதியாக வெளியேறினார்.

முதல் மாதம்.

அறக்கட்டளையின் கணக்கில் ஒரு சிறிய தொகை செப்டம்பர் முதல் தேதியில் வந்து சேர்ந்தது.

200 வெள்ளி

அதன் கீழ்

இப்படிக்கு

அன்புடன்

‘நன்கொடையாளன்’

என்றிருந்தது.

பெயரைக் குறிப்பிடவில்லை என்பதை நாங்கள் கவனிக்கத் தவறவில்லை.

‘அவர் தான் அந்த முதியவர்,’ என்றேன் என் உதவியாளர் குமாரிடம்.

அடுத்த மாதமும் வந்தது.

மூன்றாம் மாதமும்.

வருடம் முழுவதும் தவறாமல், மாத முதல் தேதியில் 200 வெள்ளி பணம் வந்தது.

ஆரம்பத்தில் அந்தச் செயல் எனக்குச் சாதாரண விஷயமாகத் தோன்றியது.

ஆனால், போகப் போக என் எண்ணத்தில் மாற்றம் ஏற்பட்டது.

எங்களிடம் தொடர்ந்து நன்கொடை தரும் நிறைய நன்கொடையாளர்கள் இருந்தார்கள். இருக்கிறார்கள். ஆயிரம்; பல ஆயிரம் என நன்கொடைத் தருவார்கள்.

ஆனால், இவரது நன்கொடை எனக்கு ஏதோ சற்று வித்தியாசமாகத் தோன்றியது.

சில மாதங்களில் பல வேலைப் பளுவின் காரணமாக அந்த முதியவரின் நினைவு எனக்கு மறந்து போனது.

இரண்டாவது வருடம், ஒவ்வொரு மாத முதல் தேதியிலும் அந்த 200 வெள்ளி நன்கொடையைப் பார்த்ததும் அந்த முதியவர் எப்படி இருக்கிறார்? என்று பார்க்கவேண்டும் போலிருந்தது எனக்கு.

ஏனெனில் அந்த 200 வெள்ளி ஒருபோதும் தாமதிக்கவில்லை.

அதே முதல் தேதி.

மழை

பண்டிகை

வறுமை

என எதுவாக இருந்தாலும்

நன்கொடை வரத் தவறவில்லை.

காலம் நகர்ந்தது;

ஐந்து வருடங்கள் உருண்டோடின.

ஒவ்வொரு மாதமும் முதல் தேதி 200 வெள்ளி.

ஒரு நாள் என்னுடைய உதவியாளர் குமார் சொன்னார்.

‘சார்… இந்த முதியவரைப் பாருங்க.’

‘யார்?’

அதான் சார்,

அந்த ‘அன்புடன் நன்கொடையாளன்.’

அவர் கணக்குப் புத்தகத்தைத் திறந்து என்னிடம் நீட்டினார்.

ஐந்து ஆண்டுகள்.

ஒவ்வொரு மாதமும்.

200 வெள்ளி

ஒரு தவறும் இல்லை என்றார்.

நான் சிரித்தேன்.

‘நல்ல மனுஷன்’ என்றேன்.

ஆனால், அவர் தன் பெயரைக்கூட ஏன் எழுத விரும்பவில்லை என்று யோசிக்க ஆரம்பித்தேன். கேட்காமல் விட்டது என் தவறோ? என்று எண்ணலானேன்.

ஒரு நாள் எனக்கு ஊட்ரம் பூங்கா பகுதியில் அமைந்திருக்கும் சிங்கப்பூர் பொது மருத்துவமனையின் புற்றுநோய் மையத்தில், புற்றுநோயாளிகளுடன் கலந்துரையாடுவதற்கான ஓர் அழைப்பு வந்திருந்தது.

அன்று நான் அங்குச் சற்று முன்னதாகவே சென்றுவிட்டேன்.

மருத்துவர்களின் உதவியுடன் நான் நோயாளிகள் இருக்குமிடத்தை அடைந்தேன்.

அவர்களிடம் பேசிக்கொண்டிருந்த போது, அவர்களில் ஒருவரை எனக்கு முன்பே பரிச்சயப்பட்டது போலத் தெரிந்தது; நான் அவரை உற்றுப்பார்த்த போது அப்படியே திடுக்கிட்டு நின்றுவிட்டேன்.

என் நினைவின் ஓரத்தில் மறைந்து கிடந்த ஒரு முகம் மெதுவாக வெளிச்சத்திற்கு வந்தது.

அந்த முதியவர்

அதே மெல்லிய உடல்.

இப்போ அவரது தோலின் நிறம் சற்று வெளிறிப் போய் இருந்தது.

கண்ணில் சோர்வு.

அந்த முதியவர் என்னைப் பார்த்ததும் சிரித்தார்.

‘ஐயா! … என்னை நினைவில் இருக்கா?’ என்று வலிய என்னிடம் பேசினார்.

அப்போதுதான் எனக்கு நினைவுக்கு வந்தது.

ஆம் — அந்த முதியவர்.

உங்கள் பெயரை நீங்கள் சொல்லவே இல்லையே? என்றேன்.

‘என் பெயர்?... பெயரில் என்ன இருக்கு....’ என்று இழுத்தார்.

நான் அவர் அருகில் சென்று உட்கார்ந்தேன்.

ஓ! எப்படி இருக்கிறீர்கள்?

‘உங்களுக்கு என்ன ஆயிற்று?’

என்று ‘மடை திறந்த வெள்ளம்போல்’ பல கேள்விகளைக் கேட்டேன்.

முதியவர் சிரித்தார்.

‘ஐயா!… வாழ்க்கையில் கொஞ்சம் சோதனை இருக்கத்தான் செய்யும்’ அதற்காக.... என்று மென்று விழுங்கினார்.

மருத்துவர் என் பின்னால் நின்றிருந்தார்.

அவர் மெதுவாகச் சொன்னார்.

‘இவருக்குக் கடுமையான கல்லீரல் புற்றுநோய்.’

நான் அமைதியாக இருந்தேன்.

சில நிமிடங்கள் கழித்து நான் முதியவரிடம் கேட்டேன். ‘நீங்க இன்னும் பணம் அனுப்புறீங்களே?’ என்றேன் ஆச்சரியமாக,

முதியவர் சிரித்தார்.

‘ஆமாம் ஐயா!’

‘இந்த நிலையிலக் கூட?’

அவர் தோள் குலுக்கினார்.

‘ஐயா! ஒரு விஷயம் சொல்லட்டுமா?’

‘சொல்லுங்க.’

அவர் மெதுவாகப் பேசினார்.

என் அம்மா சொல்வாங்க. ‘ஒரு முறை வாக்கு நீ கொடுத்தா அதை நிறைவேற்றணும். நிறைவேற்ற முடியாதுன்னா வாக்குக் கொடுக்கக் கூடாது.’

நான் எதுவும் பேசவில்லை.

முதியவர் தொடர்ந்தார்.

‘நான் மூணு வேளை சாப்பிட முடியலன்னாலும் பரவாயில்லை; நான் இரண்டு வேளை சாப்பிட்டுக்குவேன்.’

சிறிது நேரம் அமைதி.

‘ஆனாலும் ஐயா… அந்த 200 வெள்ளி… அது போகும்.’

‘எங்கே?’

‘உங்க அறக்கட்டளைக்கு.’

எதுவரைக்கும்?

‘என் உயிர் இருக்கும் வரை’

அந்த வார்த்தை என் உள்ளத்தைத் தைத்தது.

என் மனத்தில் ஒரு விசித்திரமான உணர்வு எழுந்தது.

பல ஆண்டுகளாக நான் மேடைகளில் ஊக்கப் பேச்சுகள் பேசி வருகிறேன்.

பலர் என்னை ‘பெரிய சேவையாளர்’ என்று பாராட்டியுள்ளனர்.

ஆனால் இப்போது…

இந்தப் படுக்கையில் படுத்திருக்கும் முதியவரைப் பார்த்த போது…

என் உள்ளம் சொல்கிறது....

‘இவன் தான் சேவையாளர்.’

‘அப்போ நான்?’ என்று என் மனத்திடம் கேட்டேன்.

‘நீ ஒரு வேலையாள்.’ என்று யோசிக்காமல் அது கூவிற்று.

நான் எழுந்தேன்.

முதியவரின் கைகளைப் பிடித்தேன்.

‘இனி பணம் அனுப்ப வேண்டாம்.’

முதியவர் சிரித்தார்.

‘அது முடியாது ஐயா!’

‘ஏன்?’

‘வாக்குக் கொடுத்துவிட்டேன்’

பதில் ஏதும் பேசாமல் அமைதியாக இருந்தேன்.

அந்த வார்த்தைகளில் உள்ள அர்த்தத்தின் கனத்தை நான் மென்று விழுங்க முயன்று, தோற்றுப் போனேன்.

அந்த நொடியில்தான் நான் புரிந்துகொண்டேன்.

‘உண்மையான தொண்டு என்பது மேடையில் பேசப்படுவதில்லை.

அது அமைதியாக வாழப்படுகிறது.’

அன்று என் வீட்டிற்கு வந்தேன். ஆனால், என்னால் அன்று இரவு தூங்கமுடியவில்லை.

நான் என் பழைய பேச்சுகளை நினைத்துப் பார்த்தேன்.

நான் சொன்ன கதைகள்.

நான் பெற்ற கைதட்டல்கள்.

நான் பெற்ற புகழ்.

என் மனத்தில் இனம்புரியாத ஒரு வலி எழுந்தது.

‘நான் மனிதர்களுக்கு உதவுகிறேனா?’

அல்லது

‘நான் என்னை உயர்த்திக்கொண்டே இருக்கிறேனா?’

என்னை நானே முதல் முறையாகச் சந்தேகித்தேன்.

மூன்று மாதங்கள் இப்படியே உருண்டோடின.

ஒரு நாள் சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனையிலிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது.

‘முதியவர் இறந்துவிட்டார்’.

நான் அந்தக் கடிதத்தை நீண்ட நேரம் பார்த்துக்கொண்டிருந்தேன்.

அதற்குள் இன்னொரு விஷயமும் இருந்தது.

ஒரு சிறிய கவர்.

அதற்குள் 200 வெள்ளி.

அத்துடன் ஒரு குறிப்பு.

‘இந்த மாதம் தாமதம் ஆகிடுச்சு ஐயா!’

மன்னிச்சுக்கோங்க.”

இப்படிக்கு

அன்புடன் ‘நன்கொடையாளன்’

பக்கத்தில் ‘சுந்தரம்’ என்று அவரது பெயர் எழுதப்பட்டிருந்தது.

(தேதி 3-நவம்பர் என்று குறிப்பிட்டிருந்தது)

முதன்முதலில் தன் பெயரை எனக்கு எழுதியிருக்கிறார்.

அந்தக் கடிதத்தைப் படித்த போது என் கண்களில் ஈரம் கசிவதை உணர்ந்தேன்.

நான் நீண்ட நேரம் மெளனம் காத்தேன்.

பின்னர் மெதுவாக என் மனத்துக்குள் சொன்னேன்.

‘முதியவரே சுந்தரம்…’

‘உதவி என்பது பெரிய பேச்சு அல்ல.

அது அமைதியாகச் செய்யப்படும் ஒரு வாக்குறுதி.’

இப்போது என் மனம் தெளிந்தது.

பிறகு ஒரு நாள் நான் மீண்டும் மேடையில் நின்றேன்.

ஆனால் அந்த நாள் நான் வேறு ஒரு கதையைச் சொன்னேன்.

நான் இன்று ஒரு முதியவரைப் பற்றிய ஒரு கதையைச் சொல்லப் போகிறேன் என்று கூறி

அவர் கதையைச் சொல்ல ஆரம்பித்தேன்.

‘அவர் பெரிய பணக்காரர் இல்லை.

புகழ்பெற்றவர் இல்லை.

ஆனால் நான் பார்த்த மிகப் பெரிய தொண்டர்.’

அரங்கில் அமைதி.

நான் மிக மெதுவாகச் சொன்னேன்.

அவர் பெயர்தான் ‘முதியவர் சுந்தரம்’

அன்றிலிருந்து நான் மக்களிடம் உதவி செய்ய வேண்டும் என்று எதையும் கோடிட்டுக் காட்டுவதில்லை.

மாறாக,

‘உங்களால் முடிந்த அளவுக்கு

நீங்கள் அமைதியாக மற்றவர்களுக்கு உதவுங்கள்.’ என்றேன் என் அகம் நீக்கி.

அந்த நாள் முதல்,

எங்களது அறக்கட்டளையின் மேற்சுவரில் ஒரு சிறிய பலகைத் தொங்கிக்கொண்டிருந்தது.

அதில் ஒரு வரி மட்டுமே இருந்தது.

‘சுந்தரம் என்ற முதியவரின் நினைவாக.’

இராசராசன் ஹேமலதா

குறிப்புச் சொற்கள்
புற்றுநோய்சிறுகதைஞாயிறு முரசு