- உமையாளம்பிகை
விடிந்தது. என் கண்கள் மெல்ல திறந்தன. அலாரம் தேவையில்லை. மணி இப்போது காலை 5.30. எனக்குத் தெரியும். இயந்திரமாய் எழுந்தேன். மெத்தை விரிப்புகளைச் சரி செய்தேன். காலைக் கடன்களை முடித்தேன்.
காலையில் எனக்குத் தேவை ஒரு கப் ‘தே ஓ கோசோங்’ மட்டுமே. அதன் கசப்புத் தன்மையை இரசித்துக் குடித்தேன். ‘உன்னால் முடியும்’ என்ற தமிழ் எழுத்துகளைக் கொண்ட டோட் பேக்கில் என் கைத்தொலைபேசி, பணப்பை இரண்டையும் எடுத்துப் போட்டுகொண்டு வீட்டை விட்டுக் கிளம்பினேன். காதில் ‘காது மொட்டு’களைச் சொருகினேன். தினமும் அதே பாடலில்தான் என் நாளைத் துவங்குவேன். ‘மௌனமான நேரம். இள மனதில் என்ன பாரம்?’ மென்மையான இசையைக் கேட்டுக்கொண்டு மாடிப்படிகளில் மூன்று மாடிகளில் இருந்து மெல்ல இறங்கி, உட்லண்ட்ஸ் பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடந்தேன்.
வாரநாள் என்பதால், காலை 6.30 மணிக்கு எல்லாரும் பரபரப்பாக ஓட்டமும் நடையுமாகக் காணப்பட்டார்கள். நானும் அவர்களில் ஒருவராகத்தான் இருந்தேன்.
காலை 6.40க்கு பேருந்து நிலையத்தை வந்தடைந்தேன். நேராக நடந்தால் பர்த் பி1 (Berth B1). அங்கு 6.45க்குப் பேருந்து எண் 858 வரும். தினமும் அதே பேருந்தில்தான் பயணம் செய்வேன். நன்மை என்னவென்றால் பயணத்தில் நான் யாருடனும் பேச வேண்டிய தேவையில்லை.
எனக்குப் பிறருடன் பேசுவது என்றால் ஒருவகைப் பீதி, பயம். யாராவது என்னிடம் பேச வந்தால், என் இதயம் வேகமாகத் துடிக்கும். மூச்சுவிடச் சிரமமாக இருக்கும். உடல் வியர்த்து, கை நடுங்கத் தொடங்கும். அவர்கள் கேட்கும் சாதாரணமான “எப்படி இருக்கிறாய்?” என்ற கேள்விக்குக்கூட என்னிடம் பதில் இருப்பதில்லை. என் தொண்டை அடைத்துக் கொள்கிறது; நா வறண்டுவிடுகிறது. சில சமயங்களில் என் தலைசுற்றி மயக்கம் வந்துள்ளது. மருத்துவர் கொடுத்த மாத்திரைகள் ஓரளவுதான் மனத்தை அமைதிப்படுத்த உதவுகின்றன. சில காலமாகவே நான் இவ்வாறு தனிமையில்தான் வாழ்ந்துகொண்டும் செத்துக்கொண்டும் இருக்கிறேன்.
பேருந்தில் ஏறி, பயண அட்டையை டேப் செய்துவிட்டு தினமும் நான் அமர விரும்பும் அதே இருக்கையில் அமர்ந்தேன். பேருந்தின் நடுவில் கதவுகளுக்கு மிக அருகிலுள்ள முதல் இருக்கை. இடது பக்கம். சன்னல் ஓரம். என்றும் தனிமையில். என் பக்கத்து இருக்கையில் வந்து அமர்ந்து, இறங்கிப்போகும் யாரும் என்னைக் கண்டுகொள்ளமாட்டார்கள். 8-5-8. இதுதான் சிங்கப்பூரில் மிக நீண்ட லூப் வளையப் பேருந்துப் பயணம். உட்லண்ட்ஸ் முதல் சாங்கி விமான நிலையம் வரை மொத்தம் 73.4 கிலோமீட்டர். புண்பட்ட என் மனத்திற்கு நீண்ட பேருந்துப் பயணம் ஒருவகை அமைதியைத் தருகிறது.
சில நாட்களுக்கு முன்புவரை நான் வீட்டைவிட்டு வெளியே வரவும் தயங்கினேன். இப்போது மக்கள் கூட்டம் ஓரளவு நிறைந்த பேருந்தில் அமர்ந்து இருக்கிறேன். இது பெரும் முன்னேற்றம் என்று டாக்டர் நியோ என்னைப் பாராட்டினார். அவரின் வற்புறுத்தல் மட்டும் இல்லையென்றால் நான் இதைச் செய்திருக்கமாட்டேன். இது என் உளவியல் பதற்றத்தைக் குறைக்க உதவும் ‘நேரடித் தொடர்பு சிகிச்சை’.
நமக்கு எதைப் பார்த்து பயம் அல்லது பதற்றம் இருக்கிறதோ, அதைத் தவிர்ப்பதற்குப் பதிலாக, பாதுகாப்பான முறையில் அதை எதிர்கொள்ளப் பழகுவதே இந்தச் சிகிச்சை முறையாம். இதன் மூலம் நமது மூளைக்கு அந்தச் சூழல் உண்மையில் ஆபத்தானது அல்ல என்பதை நாம் கற்றுக்கொடுக்கிறோம் என்று டாக்டர் நியோ விளக்கினார்.
பேருந்து நகர ஆரம்பித்ததும் என் தலையைச் சற்றுக் குணிந்தவாறு மெல்ல சுற்றிப் பார்த்தேன். மக்கள் பெரும்பாலும் அவர்களுடைய தொலைபேசியைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். பாடல்கள் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
இயல்பாகப் பயணம் செய்வதுபோல் தோன்றினாலும் என்னைப்போல் பலர் இங்கு அமர்ந்து இருப்பர் என்று என் சிகிச்சை கலந்துரையாடல்களில் நான் அறிந்துகொண்டேன். வலது பக்கம் மெதுவாகத் திரும்பினேன். ஜன்னல் ஓரத்தில் தலை சாய்த்து, பேருந்தின் அதிர்விலேயே ஆழ்ந்து உறங்கும் ஓர் இளைஞன். மடியில் ஒரு தேய்ந்துபோன பை. அவரைப் பார்த்தால் சாங்கி விமான நிலையத்தில் பணிபுரிபவர் போல் தெரிகிறது. அவரைப் பார்க்க சற்றுப் பொறாமையாக இருக்கிறது. பொது இடத்தில், ஓடும் பேருந்தில்கூட இப்படி நிம்மதியாகக் கண்களை மூடி அவரால் தூங்க முடிகிறது. இந்த உலகம் பாதுகாப்பானது என்று நம்பி ஒருவரால் எப்படிக் கண்களை மூட முடிகிறது?
அவரின் பின் இருக்கையில் ஓர் உயர்நிலைப் பள்ளி மாணவி. தன் சீருடைக்கு மேலே ஜாக்கெட்டை அணிந்துகொண்டு அமர்ந்திருக்கிறாள். அவளால் அமைதியாக அமர முடியவில்லை. மேலே கீழே தலையை அசைக்கிறாள். கால்கள் ஏதோ தாளம் போடுகின்றன. அவள் உடல் நடுங்குகிறது. அந்த நடுக்கத்தை நான் அறிவேன். அது குளிரால் அல்ல. பதற்றத்தால். என்னால் அந்த அசைவுகளை உணர முடிகிறது. கையில் ஏதோ குறிப்புகளை வைத்துப் படித்துக்கொண்டிருக்கிறாள். இன்று முக்கியமான தேர்வாக இருக்கும். அவளைப் பார்த்ததும் என் பள்ளிப் பருவம் ஞாபகத்திற்கு வந்தது. உடனே என் தாயாரின் குரல் என் காதுகளுக்குள் கேட்டது,
“மகா, நல்லா படிக்கணும். நல்ல வேலைக்குப் போகணும். நல்ல பையனைக் கல்யாணம் பண்ணிக்கணும். அப்பதான் வாழ்க்கை மகிழ்ச்சியா இருக்கும்! என்ன, புரியுதா?” இதைதான் என் தாயார் தினமும் கூறுவார். இதையே என் வாழ்க்கை குறிக்கோளாகக் கொண்டு கல்வியை மட்டும் முன்நிறுத்தி இரவு பகல் பாராது படித்தேன். இதனால் நான் பெற்றது கொஞ்சம். இழந்தவை அதிகம்.
எல்லாப் பாடங்களிலும் 80 மதிப்பெண்களுக்கு மேல் வாங்கவேண்டும், அப்போதுதான் ஒருவேளை மதிப்பெண் தணிக்கை செய்யப்பட்டாலும் பாதிக்கப்படாமல் சிறப்புத்தேர்ச்சி பெற முடியும் என்று அம்மா கூறுவார். சில நேரங்களில் 78, 79 மதிப்பெண்கள் பெறுவேன். அவ்வளவு தயார் செய்தும் அந்த ஓரிரு மதிப்பெண்களில் ஏற்படும் அந்த ஏமாற்றம் எனக்கு மிகப் பெரிய மன உளைச்சலை ஏற்படுத்தும். இதை மற்றவர்களிடம் கூறிப் புரியவைக்க முடியாது.
தோழிகளிடம் கூறினால், ‘‘நடிக்காத லா!’’, “ஏ.. 79 மார்க்ஸ் வாங்கிட்டேன்னு ஷோ ஆஃப் பண்ணாதே!” என்று கூறுவர். நாளடைவில் அவர்கள் என்னைவிட்டு விலகினரா, நான் அவர்களைவிட்டு விலகினேனா என்றுகூட நான் உணரவில்லை. இரவு நெடுநேரம் கண்விழித்துப் படிப்பேன். மாதிரித் தேர்வுத்தாள்களைப் பயற்சி செய்வேன். இதனால் தூக்கத்தை இழந்தேன். மற்ற மாணவர்களைப்போல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்கவேண்டும் என்று எனக்கு ஆசை. ஆனால், ஒவ்வொரு முறை தொலைக்காட்சியின்முன் அமரும்போதும் “படிச்சி முடிச்சிட்டீயா? டிவி பாக்குறே?” என்ற குற்றவுணர்வு என்னுள் எழும். இதனால் மன நிம்மதியை இழந்தேன்.
தொடர்ந்து உழைத்து இழந்த அந்த ஓரிரு மதிப்பெண்ணை விடாமல் துரத்திப் பிடித்துவிட்டேன். பல்கலைக்கழகத்தில் சிறப்புப் பட்டத்துடன் நான் என் பட்டப்படிப்பை முடித்தேன். நான் பெற்ற 4.8 சிஏபி-யை பார்த்த என் அம்மாவின் முகத்தில் பெருமிதத்தையும் திருப்தியையும் கண்டேன். அதுதான் என்னைப் பொறுத்தவரை முழு வெற்றி. ஆனால் இந்த வெற்றியே எனக்கு ஒரு தோல்வியாக அமையும் என்பதை நான் உணரத் தவறிவிட்டேன்.
அம்மாவின் அறிவுரைப்படி நல்ல ஒரு வேலையில் அமர்ந்தேன். நல்ல சம்பளம். பெயர்பெற்ற நிறுவனம். என் மேற்பார்வையாளர், திரு ஷாம், என் கல்விச் சான்றிதழ்களைப் பார்த்து என்னை அதிகம் பாராட்டினார். என்மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தார். அவரின் எதிர்பார்ப்பை ஏமாற்றிவிடக்கூடாது. அவரிடம் நல்ல பெயர் வாங்கவேண்டும் என்பதில் குறியாக இருந்தேன்.
ஆனால், பள்ளியும் வேலையும் முற்றிலும் வேறுபட்டு இருந்தன. வேலையிடத்தில் ‘80’ மதிப்பெண்கள் வாங்குவது எப்படி என்று என்னால் சரியாகக் கணிக்கமுடியவில்லை. என்னைப் பொறுத்தவரை எந்த வேலையையும் ஒழுங்காகச் செய்யவேண்டும் என்று எனக்கே ஓர் உயரிய குறிக்கோளை நான் வைத்துக்கொண்டேன். அப்பொழுதுதான் யாரும் என் வேலையில் குறை கண்டுபிடிக்க முடியாது. ஒரு மின்னஞ்சலை அனுப்புவதுகூட மிகத் தெளிவாக அமையவேண்டும் என்று நேரம் எடுத்துக்கொண்டு வார்த்தைகளைத் தெரிவு செய்வேன். தொடக்கத்தில் எல்லாம் நன்றாகப் போய்கொண்டு இருந்தது.
அதே நேரத்தில் என் அம்மா, “அடுத்து என்ன? ஒரு நல்ல பையனைப் பார்க்க வேண்டும்” என்று அடிக்கடி நினைவுபடுத்தினார். குடும்ப நண்பரான, விமலனை எனக்கு அறிமுகப்படுத்தினார். விமலன் எனக்கும் என் அம்மாவுக்கும் நிறைய உதவிகள் செய்திருக்கிறார். வீட்டிலிருந்து சுயதொழில் செய்பவர். நாங்கள் இருவரும் ஒற்றைப் பெற்றோர் குடும்பத்தைச் சார்ந்தவர்கள்.
விமலன், தன் அம்மாவிற்குக் கொடுக்கும் முன்னுரிமை என்னை மிகவும் கவர்ந்தது. இருவரும் அடிக்கடி குடும்ப நிகழ்வுகளில் சந்திக்கத் தொடங்கினோம். தொலைப்பேசியில் பேசத் தொடங்கி, பின்னர் அவ்வப்போது வெளியில் சந்திக்கவும் தொடங்கினோம்.
என் வாழ்க்கைப் படகு சரியான திசையை நோக்கிப் போய்கொண்டு இருந்ததாக நினைத்து மகிழ்ந்தேன்.
வேலையிடத்தில் நான் எந்த வேலையையும் அரைகுறையாகச் செய்ததில்லை. ஆனால், அதிக நேரம் எடுத்துக்கொள்வதால் என் வேலைகளை நேரத்தோடு முடிக்க முடியவில்லை. வேலையிடத்தில் இரவு பத்து மணிவரை இருந்து வேலை செய்தும் சில வேலைகளை உரிய நேரத்தில் ஒப்படைக்க முடியவில்லை. கூடுதல் அவகாசம் கேட்கவேண்டியிருந்தது. என் பக்கத்து மேசையில் அமர்ந்திருப்பவன் டெஸ்மண்ட். எட்டு மணிக்குத் தொடங்கும் வேலைக்கு ஒன்பது மணிக்குத்தான் வந்து சேர்வான். காலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல், விபத்து, அது, இது என்று கலகலவென்று பேசி ஏதாவது சாக்குப்போக்கு சொல்லுவான். 10.30 மணிக்கு தேநீர் அருந்தச் செல்வான். மதிய உணவு சாப்பிடச் சென்று திரும்பி வர மூன்று மணியாகும். ஆனால், வேலையை டக்கு டக்கு என்று செய்து ஒப்படைத்து விடுவான். அதனால் யாரும் அவனைக் குறை கூறுவதில்லை. அவன் சமர்ப்பிக்கும் வேலையில் பிழைகள் இருந்திருக்கின்றன. ஆனால் திரு ஷாம், “அவசரத்தில் அனுப்பும்போது கவனிக்காது இடம்பெற்றிருக்கலாம்” என்று கூறி அவற்றைப் பொருட்படுத்தமாட்டார்.
மாறாக, விழுந்து விழுந்து வேலை செய்யும் நான், மற்றவர்கள் பார்வையில் ‘மெதுவாக வேலை செய்கிறேன்’, ‘செயல்திறன் அற்றவர்’, ‘ஃபெர்பெக்ஷனிஸ்ட்’ என்றெல்லாம் பெயர் வாங்கினேன்.
“நூறு விழுக்காடு வேலை செய்யத் தேவையில்லை” என்று திரு ஷாம் அடிக்கடி நினைவுப்படுத்த தொடங்கினார். நான் 80 விழுக்காட்டைத்தான் நோக்கிச் செயல்படுகிறேன். ஆனால் எது 80 விழுக்காட்டு உழைப்பு? இந்த வேலை எனக்குள் மெல்ல ஒருவிதத் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தத் தொடங்கியது. மற்ற சிலரும் டெஸ்மண்ட்-ஐ போல்தான் வேலை செய்கிறார்கள். காலைமுதல் இரவுவரை ஓய்வு உழைச்சலின்றி வேலை செய்தும் என்னால் வேலையிடத்தில் நல்ல பெயரைப் பெற முடியவில்லை. இதனால் எனக்கும் என் குழு உறுப்பினர்களுக்கும் இடையே விரிசல் மெல்ல எழும்பியது. நான் குழுவாகச் செயல்படவில்லை என்று கூறத் தொடங்கினர்.
என் மன வலியை விமலனிடம் பகிர்ந்துகொண்டேன். நான் அவரை அடிக்கடி சந்திக்க இயலாததற்கான காரணத்தையும் எடுத்துரைத்தேன். விமலன் என்னைப் புரிந்துகொள்ள முயற்சி செய்தார். அன்பான வார்த்தைகளில் ஆறுதல் கூறினார்.
ஆனால், விமலனின் அம்மா அதை வேறு விதமாகப் பார்த்தார். “நாளு பேரோட வேலை செய்யும்போது நாமதான் நம்மளை மாத்திக்கணும். சம்பளம் குடுக்குறவன், நீ வேகமா செய்யணும்னுதான் எதிர்பார்ப்பான்,” என்று கூறினார். “மன உளைச்சலா இருந்துச்சினா வேலையை விட்டுடு. கல்யாணம் பண்ணி வீட்டுலே விமலனுக்கு உதவியா இரு” என்று நெருக்கடி கொடுக்கத் தொடங்கினார். “இதையே சமாளிக்க முடியலேனா, இன்னும் எவ்வளவு இருக்கு வாழ்க்கையிலே?” என்றும் மெல்ல நச்சரிக்கத் தொடங்கினார்.
எனக்கு அவர் பேசியவிதம் பிடிக்கவில்லை. இதனால் எனக்கும் விமலனுக்கும் கருத்து வேறுபாடுகள் நிகழத் தொடங்கின. “அம்மா அப்படித்தான் பேசுவாங்க. காதிலே வாங்கிக்காதே.” என்று அவர் கூறுவார். அதைவிட அவர் தன் அம்மாவிடம், “மகாகிட்ட அப்படிப் பேசாதீங்கம்மா” என்று சொல்லவேண்டும் என்று நான் எதிர்பார்த்தது தவறா? வேலையிடத்திலும் நல்ல பெயர் வாங்க முடியவில்லை, விமலனிடமும் அவருடைய அம்மாவிடமும் நல்ல பெயர் வாங்க முடியவில்லை என்பதில் எனக்குப் பெரும் வருத்தம்.
என்னிடம்தான் ஏதோ குறை உண்டோ? என்னுடன் படித்த நண்பர்கள் பலர் வேலையிடத்தில் பதவி உயர்வு பெற்றும், திருமணம் செய்து பிள்ளைகள் பெற்றும் முன்னேறிக் கொண்டிருந்ததை சமூக வலைத்தளங்களில் பார்த்தேன். நான் மட்டும் ஒரு சுழலில் சிக்கிக்கொண்டிருந்ததைப்போல் தோன்றியது.
என்னால் நன்றாக வேலை செய்யமுடியும் என்று நான் நம்பினேன். ஆனால் வேலையிடத்தில் மற்றவர்கள் அதை நம்பவில்லை. அவர்கள் என்னைப் பற்றிப் பின்னால் பேசுவதை நான் கேட்டேன். நான் அமைதியைக் கடைப்பிடித்தேன். நாளடைவில் திரு ஷாம் என்னிடம் பேசத் தொடங்கிய விதத்திலிருந்து நான் நன்றாக வேலை செய்யத் தகுதியற்றவள் என்று நானே ஏற்றுக்கொள்ளத் தொடங்கினேன்.
நான் ஓர் ஏட்டுச் சுரைக்காய். கறிக்கு உதவ முடியாது. வாழ்க்கை என்னும் தேர்வில் 80 மதிப்பெண்கள் பெறுவது முக்கியமில்லை. சூழல்களுக்கு ஏற்பத் தன்னை மாற்றிக்கொள்ளும் இயல்பைப் பெற்றிருக்கவேண்டும் என்பதுதான் முக்கியம் என்று அறிந்தேன். அதற்குள் எல்லாம் முடிந்துவிட்டன.
விமலன் என்னைவிட்டுப் பிரிந்து தூரம் சென்றுவிட்டார். என்னைக் காட்டிலும் தனியாக நின்று வளர்த்த தன் அம்மாதான் அவருக்கு முக்கியம் என்று கூறினார். அது உண்மைதான்.
வாழ்க்கையில் எனக்கு அடுத்தடுத்து தோல்விகள்தான். யாரைப் பார்த்தாலும் “இன்னும் திருமணம் செய்யலையா?”, “அதே பதவியிலேவா இருக்குறே?”, “இப்ப விமலன்கூட இல்லையா?” என்ற கேள்விகள் அம்புபோல் தைத்தன.
நான் முடிந்தவரை பிறரிடம் பேசுவதைத் தவிர்த்துக்கொண்டேன். இருந்தாலும் அதே கேள்விகள், என் குறைகள், என் தோல்விகள் யாவும் என் மனத்தில் ஒலித்துக்கொண்டே இருந்தன. இந்த மன உரையாடல்களை நிறுத்தச் சொல்லி தினமும் அழுவேன். ஆனால் அவை ஓய்வதில்லை. வேலைக்குச் செல்லாமல் அடிக்கடி விடுப்பு எடுக்கத் தொடங்கினேன்.
அம்மா என்னை மன நல ஆலோசகரிடம் செல்ல வற்புறுத்தினார். அங்கேதான் டாக்டர் நியோ எனக்கு அறிமுகமானார். அவர் கொடுத்த மாத்திரைகளை நான் சரியாக உண்ணவில்லை. எனக்கு என் அம்மாவின் மேல்தான் அதிகக் கோபம் வந்தது.
“நல்லா படிக்கணும். நல்ல வேலைக்குப் போகணும். நல்ல பையனைக் கல்யாணம் பண்ணிக்கனும். அப்பதான் வாழ்க்கை சந்தோஷமா இருக்கும்! என்ன, புரியுதா?” என்று சொல்லி வளர்த்ததால்தான் என் வாழ்க்கை இப்படி கேள்விக்குறியானது. நான் செய்த தவறு என்ன? நான் நன்றாகப் படித்தேன். நல்ல வேலைக்குச் சென்றேன். நல்ல பையனைத் திருமணம் செய்ய நினைத்தேன். ஆனால் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க இவை மட்டும் போதாது. இதை ஏன் எனக்குக் கற்றுக்கொடுக்கவில்லை என்று அம்மாவிடம் அடிக்கடி சண்டையிட்டேன். அதைக் கேட்டது தவறு என்று அவர் கூறினார்.
ஒரு குழந்தையை இவ்வுலகத்திற்குக் கொண்டு வந்த தாய், அக்குழந்தைக்கு எவ்வாறு உலகச் சவால்களைச் சமாளிக்கக் கற்றுத்தரவேண்டும் என்று நான் கேட்பது தவறா? என் அம்மாவிடம் பேசுவது எனக்கு எரிச்சலூட்டியது. வீட்டைவிட்டு வெளியேறி வாடகை வீட்டிற்குக் குடியேறினேன்.
நான் நிம்மதியாகச் சாப்பிட்டு, தூங்கிப் பல மாதங்கள் ஆகின்றன. மற்றவர்கள் வாழ்க்கையில் சிறப்பாக இருக்கின்றனர். நான் தோற்றுப்போனவள். டாக்டர் நியோவின் அறிவுரைப்படி என் வேலையை விட்டேன். என் காயங்களை மெல்ல ஆற்றிக்கொண்டிருக்கிறேன். என் நினைவலைகளில் இருந்து மீண்டு வந்து என் கண்ணீரைத் துடைக்கின்றேன்.
பேருந்து 858 மீண்டும் உட்லண்ஸ் பேருந்து நிலையத்திற்கு வந்து பயணத்தை முடித்துவிட்டது. தொடங்கிய இடத்திற்கே வந்துவிட்டேன். இன்றைக்கு இது போதும். பரபரப்பான சிங்கப்பூர் வாழ்க்கையில் நிற்கக்கூட நேரமில்லாமல் ஓடும் மனிதர்களிடையே இதோ அமைதியில் வாழும் சிலரைப் போல் நானும் வாழ்கிறேன்.
(முற்றும்)
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் “முத்தமிழ் விழா 2026“ சிறுகதைப் போட்டி - பொதுப்பிரிவில் ஊக்கப் பரிசு பெற்ற கதை.
முனைவர் உமையாளம்பிகை
