பெருநகர்ச் சாலையில் ஆயிரம் விளக்குகள்
கோபுர வளைவுகள்
வண்ண மின்சாரப் பூக்கள்
இரவை இரவலாக வாங்கிப் பகலாக்கும் ஒளி
வாட்டி வதைக்கும் வெயிலில் நின்று
உயரக் கம்பத்தில் ஏறி
வீதிகளுக்கு விளக்கேற்றியவன் வீட்டில்
சுடர் விடாத ஆழ்ந்த இருள்
முன்னூறு வெள்ளிப் பட்டெடுத்து
தோளில் உயர்த்திக் கொள்ளும் ஒரு கை
பத்து வெள்ளி சாமந்திப் பூவின் வாசத்திற்காக
பத்து நிமிடம் வீதியில் பேரம் பேசும் அதே கை
புதுப்பட்டு வீசும் நறுமணத்தின் பின்னே
புழுத்துப் போன எண்ணங்களின் நாற்றம்
மேனிக்கு மட்டும் புதுச்சாயம் பூசிவிட்டால்,
மனத்தின் கறை மறைந்துவிடுமோ?
நரகாசுரனை வதம் செய்ததாய் சொல்கிறோம்;
நாளுமொரு முகமூடி அணிந்து கொண்டு
நமக்குள்ளே அறியாமை இருளைச் சுமக்கிறோம்
வாசம் வீசும் பூக்கள் வாடிவிடும்
வாங்கிய பொருள்கள் பழதாகிவிடும்
வாசலின் விளக்குகள் இரவோடு அணையும்
மனத்தின் இருளில் சுடரேறுவதே தீப ஒளி - தீபாவளி!
விஷ்ருதா நந்தகுமார்
