மத்தாப்பு…
மத்தாப்பு என அவனை எவர் அழைத்தாலும், கருமுருகனுக்கு தனது உண்மையான பெயர் ஒருமுறை ஞாபகத்திற்கு வந்துபோகும். தனக்கு ஏன் மத்தாப்பென்று பெயர் வந்தது. யார் இந்தப் பட்டப்பெயரை முதலில் தனக்கு வைத்தது? மத்தாப்பு என்றால், தீபாவளி, திருவிழா, பண்டிகை நாள்களில் அனைவரும் இன்பம் பொங்க மகிழ்ச்சியாய் கொண்டாடிக் கொளுத்தி குதூகலமடையும் ஒரு வகை வெளிச்சம் தானே… வெடி போல சத்தமின்றி சன்னமாய் சிரித்திடும் மத்தாப்பு, குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் கொளுத்தி மகிழும் ஒரு இலகு வகை பண்டிகை மகிழ்ச்சிதானே…
“டேய் மத்தாப்பு… டேய்… டேய் மத்தாப்பு எந்திரிடா… இன்னும் விடியலையா உனக்கு,“ என்று காதில் ஓலைப்பட்டாசென சத்தமிட்டான் புஸ்வானம் !
புஸ்வானம்…
மத்தாப்பின் நெருங்கிய நண்பன் புஸ்வானத்தின் இயற்பெயர் சமரசம். தனக்கு ஏன் புஸ்வானம் எனும் பட்டப்பெயர் வந்தது என ஒருநாளும் சமரசம் யோசித்ததுமில்லை கவலைப்பட்டதுமில்லை. ஆனால், மத்தாப்பிற்குத் தெரியும் சமரசத்திற்கு புஸ்வானம் எனும் பெயர் எப்படி வந்ததென்று… ஊருக்குள்ள பெரிய மனுஷன் அப்படின்னா, பெரிய மனுஷன் இல்ல… வயசுல மூப்பா தொன்ணூற்றைத் தொடப்போகும் கிழம். ஊருக்குள்ள நடந்த பெரும்பாலும் எல்லா விசய வரலாறும் அறிந்த தொன்ம ஆத்துமா. அவர்தான் ஒரு தடவ நான் கேட்டப்ப…
“ எலே பயலே மத்தாப்பு, புஸ்வானம் அப்பன் பெரிய பணக்காரன்டா அப்பவே வெளிநாடெல்லாம் போயிட்டு வந்து சொந்தமா தனக்கு ரெண்டு குதிரை வண்டி, தார்சு வீடு, நிலபுலம்னு வசதியா இருந்தவன். மொத பொண்டாட்டி மகந்தான் இந்த சமரசப் பய, அவனோட அம்மா அன்னபூரணி அவ்வளவு நல்லவ அப்படி அழகு… நரம்புத் திமிருலதான் புஸ்வானம் அப்பன் வேதமுத்து, திருவிழாவுக்கு ஆட வந்த கரகாட்டக்காரி முந்தானைய மோந்துகிட்டே இவுகள அதோகதியா விட்டுப்புட்டு ஆடித் தீர்த்தான்… ஒரு நாள் அவளோட ஓடியும் போனான்… அவளைக் கல்யாணமும் கட்டிக்கிட்டான்…
புருசன் ஓடிப்போன அதிர்ச்சியில அரைக் கிறுக்காகிப்போன அம்மா அன்னபூரணிய காப்பாத்தும் பொறுப்பு புஸ்வானத்திற்கு சிறுவயது முதலே கட்டாயமானது. படிப்பெல்லாம் பாதியில போயி, அந்த வேல இந்த வேலன்னு புஸ்வானம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் பல வேலைகளைப் பார்த்துக் கொண்டே வந்தான்…
அப்படி வந்து சேர்ந்தான் ஒரு தையல் கடைக்கு எடுபுடியாக, பிறகு காஜா பட்டன் தைக்கும் பையனாக உயர்ந்து, துணியை முதலாளி கட்டிங் வெட்டிக் கொடுத்ததும் மிஷின் ஓட்டும் உதவி தையற்காரனாக வளர்ந்தபோதுதான் அந்த சவால் வந்தது… தீபாவளிக்கு இன்னும் இரண்டு மூன்று நாட்களே இருக்கும் சமயத்தில் தைத்துக் கொடுக்க வேண்டிய உருப்படிகள் நிறைய குவிந்து கிடக்கும் வேளையில்தான், முதலாளிக்கு நெருக்கமான நண்பர் பேண்ட் சட்டை தைக்கப் புதுத் துணியுடன் கடைசி நேரத்தில் கடைக்கு வந்தார்.
முதலாளியின் நண்பர் என்பதால், வேறு வழியின்றி தைத்துக் கொடுக்க முடிவானது. எல்லாம் முடிந்து தீபாவளிக்கு முதல் நாள் முதலாளியின் நண்பர் சொந்த ஊருக்குக் கிளம்பும் அவசரத்தில், தைத்த பேண்ட் சட்டையை ரயில் நிலையத்தில் வந்து தந்து உதவிட கடைசி நேரத்தில் சொல்ல, முதலாளியின் உத்தரவின் பேரில், பதற்றமும் அவசரமுமாய் ‘பேக்’ செய்து வைத்திருந்த தைத்த உருப்படியை சமரசம் எடுத்துக் கொண்டுபோய், அரையிருட்டில் மெதுவாய் நகர ஆரம்பித்திருந்த ரயில் வண்டியின் ஜன்னல் வழியே, முதலாளியின் நண்பரிடம் சேர்த்துவிட்டு வந்தபோதுதான்... தையற்கடையின் வெளியே அன்னக்கிளிபத்மாவும் அவரது கணவனும் முதலாளிய வாங்கு வாங்கென வாங்கிக்கொண்டிருந்தனர்… நல்ல நாளும் பெரிய நாளுமாய் எம் பொண்டாட்டிக்கு ரொம்பப் புடிச்ச புஸ்வான டிசைன் (இந்த வருஷ தீபாவளிக்கு வந்த புடவை ஜாக்கெட் பாவாடை மொத்த செட் டிசைன்) பல வண்ணத் துணியை இங்கே இல்ல அங்கே இல்லன்னு இப்போ போயி தேடிக்கிட்டு இருக்கீங்க… எங்கேயா வச்சிங்க?
வாசலில், சைக்கிளில் வேர்க்க விறுவிறுக்க வந்திறங்கிய சமரசத்தைப் பார்த்ததும் முதலாளியின் முகத்தில் மகிழ்ச்சி… இந்தா சமரசம் வந்துட்டான்ல… சமரசம் எங்கடா அன்னக்கிளி அக்காவோட புஸ்வானம் மொத்த செட்டயும் வச்ச…
ரொம்ப நேரமா நிக்கிறாங்கடா காணமுன்னு தேடிக்கிட்டு இருக்கோம்… ஒவ்வொரு தைச்ச பார்சல் பேக்கயெல்லாம் பிரிச்சுப் பார்த்துக்கிட்டிருக்கோம்… தீபாவளி நேரமும் அதுவுமா அன்னக்கிளியக்கா கத்தி ஊரக்கூட்டுது… எங்கேனு பாருடா சமரசம்… என முதலாளி சொல்லிக்கொண்டிருக்கும்போதே, வேக வேகமாய் சமரசம் கடைக்குள் நுழைந்து அரை வெளிச்சத்தில் அங்கும் இங்கும் அடுக்குகளில் தைத்த பேக் செய்த பார்சல் கவர்களில் கிறுக்கி எழுதியிருந்த பெயர்களில் அன்னக்கிளி அக்காவின் பெயரைத் தேடிக்கொண்டிருந்தான்…
“இன்னைக்கு என் டிரஸ் மாத்திரம் வரல உங் கடையில ஒருத்தனும் தீபாவளி கொண்டாட முடியாது,“ என அன்னக்கிளிபத்மா அக்கா தையற்கடை வெளியே சத்தமாய் அரற்றிக்கொண்டிருந்தாள். முதலாளி முகம் வெளிறிப்போய் பதற்றமாய், வாடிக்கையாளர்கள் வேறு கடைக்குள் வந்து போய்க் கொண்டிருக்க, சமரசத்தை நோக்கிக் கோபமாய் “டேய் அந்த புஸ்வானத்த வேகமாய்த் தேடுங்கடா… எனக்குன்னு வந்து சேர்ந்திருக்கீங்க, என் வீட்டுலேயும் தீபாவளிதானடா…” என கத்திக்கொண்டிருந்தார்.
அங்கும் இங்கும் உளப்பிக் கொண்டிருந்த சமரசத்தின் கால்களில் ஓரமாய், தையற்கடையின் முகப்பு அடுக்கு மேசையின் கீழ் அடியில், யார் கண்ணிலும் படாதவாறு சரிந்து விழுந்து கிடந்த ‘பேக்’ செய்யப்பட்ட கவர் மெத்தென தட்டுப்பட்டது… அப்பாடா என சந்தோஷமாய் கீழே அவசரமாய் குனிந்து எடுத்துக் கொண்டிருக்கையிலேயே… கடைப்பையன் ஒரு பொடிசு “அன்னக்கிளியக்கா உங்க புஸ்வான புடவ ஜாக்கெட் பாவாட கிடைச்சாச்சு“ என தெருவே கேட்கும்படியாய் கத்திச் சொல்ல… அன்னக்கிளியக்கா கடையின் உள் நோக்கி நகர… சமரசம் வேகமா எடுத்துப் பிரிடா… என முதலாளி சொல்லச் சொல்ல…
சமரசம் விறுவிறுவென கவரைப் பிரிக்க…
உள்ளே, பேண்ட் சட்டை… முதலாளியின் நண்பரோட பச்சை நிறப் பேண்ட்டும் சந்தனக் கலர் செக்டு சட்டையும் உள்ளே இளித்தது….
“டேய் புறம்போக்குங்களா அப்ப என்னோட புஸ்வான புடவை ஜாக்கெட் பாவாடை…“ என அன்னக்கிளிபத்மா கண்கள் சிவக்கக் கத்த…
இரவில் வேகமாய் சென்றுகொண்டிருந்த ரயில் வண்டியின் சன்னல் காற்றில் தையற்கடை முதலாளியின் நண்பர் அம்பலவாணன் ஆகாசமாய் உறங்கிக் கொண்டிருந்தார்… தலைக்கு அடியில் வாகாய் மெத்தென்று சமரசம் கொடுத்திருந்த அன்னக்கிளி அக்காவின் தீபாவளித் துணி பார்சல் இருந்தது.”
“இப்ப உனக்குப் புரிஞ்சிருக்குமே சமரசம் எப்படி புஸ்வானம் ஆச்சுன்னு“ என இருமியபடியே பெரிசு, மத்தாப்பு எனும் கருமுருகனைப் பார்த்தபடியே…
“ஆனா உனக்கு எப்படிலே மத்தாப்புன்னு பேர் வந்துச்சுன்னு உனக்குத் தெரியுமாடே?“ என்றது பெரிசு.
மத்தாப்பு யோசித்தான். எதனால எப்படி நமக்கு மத்தாப்புனு பேர் வந்திருக்கும்? சமரசம் புஸ்வானம் ஆன மாதிரி நமக்கும் ஒரு கதை இருக்குமோ…
“பெரிய கதையெல்லாம் ஒன்னும் கிடையாதுடே... அவனுக்கு மத்தாப்புன்னு ஏன் பேர் வந்ததும்னு எனக்கும்தான் தெரியும்டே “சுப்பையா மாடுகளுக்கு தீவனத்தைக் கலக்கிக் காட்டியபடியே இசக்கியிடம் சொல்ல ஆரம்பித்தார்…
“அப்போ நம்ம வீட்டுக்குப் பக்கத்துலதான் அவங்க குடும்பம் இருந்திச்சு. இவன் ஒரு பைய மூத்தவன், தங்கச்சி தாமரைன்னு ஒரு பாப்பா. அப்பா அம்மா ரெண்டுபேரும் வய வேலைக்குக் போவாங்க. ரெண்டு ஆட்டுக்குட்டி இருந்துச்சுன்னு நெனைக்கிறேன்.
கருமுருகன் அதான் மத்தாப்பு, ஒன்னாவதோ ரெண்டாவதோ படிச்சுக்கிட்டு இருந்தான். ஊருல திருவிழா, தீபாவளி, இப்படின்னு வந்தா, சின்னதா சிறிசு சிறிசா கடைக வெளியூர் ஆட்கள் வந்து போடுவாக... சின்னமா தீபாவளிச் சந்தைன்னு, அதிலே தொடர்ந்து ஒரு வாரமா நிக்காம இறங்காம... ஒரு வாரமா சைக்கிள் ஓட்ற வீரனெல்லாம் வருவாங்க.
நிறைய ட்யூப் லைட்டுகள் கட்டி வட்டமா கம்பு அடிச்சு சைக்கிள் வீரன் அந்த வட்டத்துக்குள்ள சுத்திக்கிட்டே இருப்பாரு இரவும் பகலுமாய்… சனங்க வெளியே நின்னு வேடிக்கை பார்ப்பாங்க. சைக்கிள் வீரன் சைக்கிள் ஓட்டும்போது இரவு வேளைகளில் அவனது குடும்பம் பிள்ளைகள் சினிமா பாட்டுக்கு வேஷம் போட்டு நடனம் ஆடுவாங்க.. அதுல அவனோட குட்டிச் சின்ன மக பேரு “மத்தாப்பு “ டான்ஸ் ரொம்ப பிரமாதமாய் ஆடுவாள். குட்டித் தொப்புளைச் சுற்றி நட்சத்திரப்படம் ஜிகினாவெல்லாம் ஒட்டி, முகத்துக்கு உதட்டிற்கு வண்ணம் பூசி, கண் புருவ கலர் மை போட்டு, ஜிகு ஜிகுன்னு பளபளக்க ஆடையுடுத்தி அந்தக் குட்டிப் பாப்பா டான்ஸ் ஆடுனா… கூட்டம் விசில் காதப் பொளக்கும்.
அவ ஆட ஆட அவளோட அம்மா சுற்றியிருக்கும் ரசிகர் கூட்டத்தை நோக்கி உண்டியல் ஏந்தி வர, சில்லறை நோட்டென உண்டியல் நிறையும். இறுதியாய் சைக்கிளில் மகள் மத்தாப்பை ஏற்றி உட்காரவைத்து, சைக்கிள் வீரன் சினிமா பாட்டுடன் சுற்றிவர கூட்டம் கைதட்டி ஆர்ப்பரித்து கலையும். சைக்கிள் வீரன் தீபாவளியையொட்டி ஊருக்கு வந்த நாள் முதலே, கருமுருகன் பள்ளிமுடிந்து மாலையானால் அங்குதான் நிகழ்ச்சி முடியும்வரை… சைக்கிள் வீரன் செய்யும் அனைத்து சாகசத்தையும் ஆச்சரியமாய் பார்த்து ரசிப்பான் கருமுருகன்… குறிப்பாக சைக்கிள் வீரன் ட்யூப் லைட்டுகளைப் பல்லால் கடித்து பட் பட்டென உடைக்கும்போது கண்களை மூடிக் கொள்வான்.
மத்தாப்பின் நடனம் வந்தால் போதும் சந்தோஷமாகிவிடுவான். குதித்து கூட்டத்திற்குள், அவள் ஆடும் சினிமா பாடலுக்கு, மத்தாப்பைப் போலவே இடுப்பை நெளித்து உலுக்கி முடிச்சுப்போட்ட காற்சட்டை இடுப்பிலிருந்து நழுவி நழுவி இறங்குவதை ஒரு கையால் இறுக்கிப் பிடித்தபடியே நடனமாடுவது அவனது தினசரி வழக்கமானது. இதனை ஒட்டுமொத்தக் கூட்டமும் கைதட்டி ரசிக்கும்… கூடவே மத்தாப்பும், அவளது அம்மாவும், அப்பா சைக்கிள் வீரனும், தம்பிகளும் சேர்ந்து சிரித்தபடியே ரசித்து ஆடுவார்கள்.
கருமுருகனுக்கு, என்றாவது ஒருநாள் சைக்கிள் வீரன் தன்னையும் மத்தாப்பைப் போல் சைக்கிளில் ஏற்றி வைத்து கூட்டம் கைதட்டத் தட்ட வட்டமாய் வட்டமாய் சுற்றிவரமாட்டானா என்ற ஏக்கம் இருந்தது. ஒவ்வொரு நாளும் கூட்டம் கலைந்து சென்றபிறகு, மெதுவாய் தன் வீடு நோக்கி நகரும் கருமுருகனை மத்தாப்பின் அம்மாவும் அப்பாவும் தம்பிகளும் தங்களோடு சேர்ந்து சாப்பிட அழைப்பார்கள். கருமுருகன் வெட்கப்பட்டு ஓடிவிடுவான்.
அன்று ஒருநாள் ஆவலுடன் மத்தாப்பின் ஆட்டத்திற்காகக் காத்திருந்த கருமுருகனுக்கு ஏமாற்றம். அன்று மத்தாப்பிற்கு உடம்பு சரியில்லையாம். அவள் ஆட வரவில்லை. கவலையோடு வீடு திரும்ப நகர்ந்த கருமுருகனிடம், மத்தாப்பின் அம்மா காதருகே வந்து மெதுவாகப் பேசினாள். கருமுருகனின் முகமெல்லாம் மிகவும் பிரகாசமானது. மகிழ்ச்சியோடு வீடு நோக்கி ஓடினான்.
அடுத்த நாள் மாலை பள்ளி முடிந்தவுடன் சீக்கிரமாகவே கூட்டம் வருவதற்கு முன்னதாகவே சைக்கிள் வீரன் திடலுக்கு கருமுருகன் வந்துவிட்டான். மாலை இரவு நெருங்க, திடலின் ட்யூப் லைட் கலர் விளக்குகள் பளிச்சிட ஆரம்பித்தன. சினிமா பாட்டு ஒலிக்க ஆரம்பித்தது.
சைக்கிள் வீரன் வேகமாய் வட்டமிட ஆரம்பித்தான். வட்டத்திடலைச் சுற்றி மக்கள் கூட்டம் அதிகமாக ஆரம்பித்தது. பிரபலமான நடனப் பாடல் ஒலிக்க ஆரம்பித்தபோது, கூட்டம் உற்சாகத்தில் கை தட்ட ஆரம்பித்தது… ஜிலு ஜிலுவென குட்டைப் பாவாடை சட்டையுடன், தொப்புள் தெரிய… தொப்புளைச் சுற்றி நட்சத்திரப் படம் மற்றும் ஜிகினாக்கள் சகிதமாய், வண்ணக்கலர் முகத்திலும் உதடுகளிலும் பூசி, கண் புருவங்களில் கலர் நிறப்பூச்சூகளுடன், தலை நிறையக் கனகாம்பரப் பூச்சூடி… திடல் நடுவே தோன்றினாள் மத்தாப்பு!
இடுப்பை நெளித்துக் குலுக்கிச் சிரித்தபடி உற்சாகமாய் குதித்தபடி, ஒலித்த சினிமா பாடலுக்கு நடனமாட ஆரம்பித்தாள் மத்தாப்பு… கூட்டம் உற்சாகமாய் கத்தியபடி கைதட்ட ஆரம்பித்தது. சிரிப்பும் கேலியும் பொங்க ஓஓஒய்ய்ய் எனக் கத்தியபடியே… விசில் பறந்தது.
“என்னமா ஆடுறான் பாரு மத்தாப்பு மாதிரியே… இல்ல இல்ல மத்தாப்ப தூக்கிச் சாப்பிடற மாதிரி இந்த குட்டி வாண்டுப் பய தீயா ஆடுறானே. கருமுருகா… டேய் மத்தாப்பு… மத்தாப்பு கருமுருகா… வேஷப் பொருத்தம் பிரமாதம்டே. மத்தாப்பு கருமுருகா... கைத்தட்டல்கள் எகிறியது.”
வட்டத்தைச் சுற்றி ஏந்திவந்த உண்டியலில் சில்லறையும் நோட்டுமாய் நிரம்பியது.
இறுதியாய் சைக்கிள் வீரன் கருமுருகனை சைக்கிளில் ஏற்றி வட்டமாய் வேகமாய் வலம்வந்தபோது, கருமுருகனுக்கு ஆகாசத்தில் பறப்பதுபோல் அவ்வளவு உற்சாகமும் பெருமிதமும்… ஒட்டுமொத்தக் கூட்டமும் “டேய் மத்தாப்பு… குட்டிப்பய மத்தாப்பு… மத்தாப்பு.. மத்தாப்பு.. கருமுருகா மத்தாப்பு...” என ஆரவாரமாய் கைதட்டிக் கத்தியது.
சிறு கூடாரத்திற்குள் போர்த்தியபடி படுத்திருந்த மத்தாப்பு சிறு புன்னகையுடன், சைக்கிளில் வலம் வந்துகொண்டிருந்த கருமுருகன் என்ற மத்தாப்பை ஆச்சரியமாய் பார்த்துக்கொண்டிருந்தாள்.”
சுப்பையாவின் மாடுகள் தீவனம் உண்ட செரிப்புடன் திருப்தியாய் அசைபோட்டுக் கொண்டிருந்தன. இசக்கி கையில் வந்தமர்ந்த ஈக்களைத் தட்டிவிட்டுக் கொண்டிருந்தார்.
“டேய் மத்தாப்பு… டேய்… டேய் மத்தாப்பு எந்திரிடா… விடிஞ்சிருச்சிடா… விடிஞ்சிருச்சிடா… எந்திரிடா மத்தாப்பு எந்திரிடா இன்னைக்கு தீபாவளிடா,” என்று காதில் ஓலைப்பட்டாசென சத்தமிட்டான் புஸ்வானம்!
- நெப்போலியன்
