இன்றுதான் என் வேலையின் கடைசி நாள். மூன்று வருடமாகப் பணிபுரிந்த இந்த ஏற்றுமதி நிறுவனத்தின் கணக்குப்பிரிவில் வெளியேற்றப்படும் நான்காவது ஊழியன். இணைய விற்பனை பரவலான பின்னர் எங்கள் தொழிலை அது நேரடியாகப் பாதித்தது. அதன் விளைவாக ஆட்குறைப்பு செய்தாக வேண்டிய கட்டாயம்.
முதலாளி என் நிலை அறிந்தவர். ஒப்பந்தம் முடிந்தபின்னரும் கூட இரண்டு மாதம் நீட்டிப்பு செய்து வேலை கொடுத்தார். எழுத்தில் இல்லாது, இரண்டு மாத ஊதியத்தையும் சேர்த்தே கொடுத்தார். என்னைச் சமாதானம் செய்யும் பொருட்டு மதிய உணவுக்கு அழைத்துச் சென்றார். உணவில் கவனம் செலுத்த முடியவில்லை. நாக்கு சுவையறியாது திகைத்திருந்தது.
கையில் வேறு எதாவது வழி இருக்கிறதா?
நிமிர்ந்து அவரைப் பார்த்தேன். இணையத்தில் பதிந்து வைத்திருக்கிறேன். நிச்சயம் அடுத்த வேலை கிடைத்துவிடும் என்று சிரிக்க முயன்றபடி சொன்னேன்.
உள்ளுக்குள் மனம் இப்படி நினைத்துக்கொண்டது. இடையில் எத்தனை காத்திருக்க வேண்டும் என்று தெரியவில்லை. வீட்டுச்செலவு, மாதாந்திர தவணை, பிள்ளைக்கு டியூஷன் கட்டணம், இசை வகுப்புக் கட்டணம் எல்லாம் கண் முன் நின்றது. ஒரு மாதம் வேலை இலாமல் சமாளித்துக்கொள்ளலாம். இரண்டாவது மாதம் அதிகபட்சம் ஓடும். மூன்றில் தடுமாறி விழக்கூடும். அதற்குள்ளாகக் கிடைத்துவிட்டால் நிமிர்ந்துவிடலாம்.
என்ன யோசனை? பெரிதாகக் கவலைப்பட வேண்டாம். உனக்குத் திறமை இருக்கிறது, வயதும் அதிகம் இல்லை. அடுத்த வேலை சீக்கிரம் கிடைத்துவிடும். நானும் என் நண்பர்களின் நிறுவனத்தில் சொல்லியிருக்கிறேன் என்றார்.
புன்னகைக்க முயன்றேன்.
சாப்பிட்ட பிறகு காரில் அலுவலகத்தில் இறக்கிவிட்டு வாழ்த்திவிட்டுச் சென்றார். நான் மீண்டும் அலுவலகம் வந்து ஹேண்ட் ஓவர் காரியங்களை மேற்கொள்ள ஆரம்பித்தேன். என் கைவசம் உள்ள கணக்குகள், தகவல்கள் எல்லாவற்றையும் திரட்டி மேடம் டெய்சிக்கு சமர்ப்பிக்க வேண்டும். கம்பெனியின் ஆரம்ப காலத்திலிருந்து உள்ளவள். நிர்வாக அடிப்படைகளை எனக்குக் கற்றுக்கொடுத்தவள்.
மாலை ஐந்து மணிக்கு என்னுடைய லேப்டாப், கம்பெனி போன், மற்றும் இதர பொருட்களை ஒப்படைத்துவிட்டு வெளியே வந்தேன்.
வானம் வெளிவாங்கி சோம்பலுடன் இருப்பதுபோலப் பட்டது. நகரம் அதன் இயல்பில் இயங்கிக்கொண்டிருந்தது. என் ஒருவனின் வேலையிழப்பின் பொருட்டு அது தன் இயல்பை மாற்றிக்கொள்ளவில்லை.
இதுபோல எத்தனையோ இழப்புகளை அது கண்டிருக்கக்கூடும். வழக்கமாக டீ குடிக்கும் கடையில் அமர்ந்தேன். ஏராளமான மனிதர்கள் தங்கள் கவலைகளை ஐந்து நிமிடங்களுக்கு ஒத்திவைத்துத் தங்களுடன் வந்தவர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தார்கள்.
பால் கலக்காத தேநீர் வந்தது. இரண்டு கைகளாலும் அதை அணைத்து இளம் சூட்டை எனக்குள் கடத்தினேன். நேநீர் தரும் இந்த ஐந்து நிமிட இளைப்பாருதலை உலகில் வேறு எந்த விஷயமும் கொடுக்குமா என்று தெரியவில்லை. எழுந்து ஓட வேண்டும். அதற்கு முன் தீர அனுபவித்துவிட வேண்டும்.
தேரீரை அருந்தி முடித்தபின்னும் செய்வதற்கு ஒன்றும் இல்லாமல் அமர்ந்திருந்தேன். ஒரு மணி நேரம் கடந்திருந்தது. அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று திட்டம் ஒன்றுமில்லை. எதாவது ஒரு கதவு திறக்கும். வெளியில் மெல்ல இருள் பரவ ஆரம்பித்தது.
பேருந்து நிறுத்தம் நோக்கி நடந்தேன். இன்னும் கொஞ்சம் நடக்கலாமெனத் தவிர்த்து இன்னொரு நிறுத்தம்வரை நடந்தேன். இப்படியாக மூன்று நிறுத்தங்கள் நான் நடந்தே வந்துகொண்டிருக்கும்போது என்னைக் கடந்து சென்ற லாரி திடீரென நின்றது. லாரியின் பின்பக்கம் நிறைய தொழிலாளர்கள் அமர்ந்திருந்தனர்.
ஒரே சீருடை. களைத்த முகங்கள், வியர்வை வழிந்து பச்சை நிற டிஷர்ட்டில் வெள்ளை நிறமாகக் கோடிழைத்திருந்தது. அதிலிருந்து ஒருவன் குதித்து இறங்கியவுடன் வண்டி புறப்பட்டுச் சென்றது.
கக்கத்தில் ஹெல்மெட் உடன் என் எதிரே நடந்து வந்துகொண்டிருந்தான்.
உயரம் குறைவாகவும், சதைப்பற்றில்லாமலும் இருந்தார். வயது முப்பதுக்கு மேல் இருக்கும். என்னைப்பார்த்த உடன் சினேகத்துடன் புன்னகைத்தபடி வந்தான். என் நினைவில் எந்த இடத்திலும்ல் இம்முகம் இல்லை. ஒருவேளை என் பின்னால் வரும் எவரையும் எதிர்நோக்கி புன்னகைக்கிறானா? திரும்பிப்பார்த்தபோது அந்தச்சாலையில் என்னையும் அவனையும் தவிர வேறு யாரும் இல்லை.
நேராக வந்தவன் என்னை நோக்கிக் கைகளை நீட்டி “ஹவ் ஆர் யூ ப்ரதர்? என்றான்.
நான் திகைத்துப் புன்னகைக்க முயன்று கைகுலுக்கினேன். இன்னமும் அவன் யார் என்பதை யூகிக்க முடியவில்லை.
என் பெயர் மொனிருல் இஸ்லாம். பங்களாதேஷி. உங்களை எனக்குத் தெரியும், ஆனால் உங்களுக்கு என்னைத் தெரிய வாய்ப்பில்லை.
திருமூர்த்தி என்று அறிமுகப்படுத்திக்கொண்டேன். இதற்கு முன் நாம் சந்தித்திருக்கிறோமா?
சந்தித்திருக்கிறோம்.
ஒரு வருடம் இருக்கும். ஹார்ட் பார்க்கில் புல்வெட்டுதல், மற்றும் மரம் கழிக்கும் பணி எங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. நல்ல உச்சி வெயில் நேரம். அன்றைய தினம் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அது ஒரு மோசமான நாள். அன்று காலைதான் அந்தத் துயரச்செய்தி வந்திருந்தது. நீண்ட காலம் கழித்து என் மனைவி கர்ப்பம் தரித்திருந்தாள். நானும் சிங்கப்பூர் திரும்பி ஓரிரு மாதங்கள் ஆகியிருந்தது. ஈரத்தரை வழுக்கி விழுந்தபோது எதிர்பாராதவிதமாகக் கரு கலைந்துவிட்டதாகத் தகவல் வந்தது.
நாங்கள் வேலை செய்யும்போது கைகள், முகம் எல்லாவற்றையும் மறைத்துக் கண்ணுக்குப் பாதுகாப்பு கண்ணாடி அணிந்திருப்போம். யாருக்கும் அடையாளம் தெரியாது.
அப்படியான சமயத்தில் நீங்கள் அங்கு வேலை செய்த அனைவருக்கும் குளிர்ந்த ஐஸ் லெமன் டீ கொடுத்தீர்கள் நினைவிருக்கிறதா?
நான் பல இடங்களில் பல சமயங்களில் இப்படி பலருக்கும் வாங்கிக்கொடுத்திருக்கிறேன். வெயிலில் யாராவது வேலை செய்துகொண்டிருந்தால் அவர்களைக் கடந்து செல்லும்போது குளிர்ந்த பானம் எதாவது தந்துவிட்டு செல்வது என் வழக்கம். இந்தப்பழக்கத்தை சீனர் ஒருவரிடமிருந்து நான் கற்றுக்கொண்டேன். அவரும் இப்படியாக முகம் தெரியாத எவருக்கும் வாங்கிக்கொடுத்துவிட்டு ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டுச் செல்வார். இந்நகரத்தின் ஏதோ ஒரு மூலையில் இவனுக்கும் என்றோ ஒருநாள் வாங்கிக்கொடுத்திருக்கிறேன். நினைவில்லை என்று சொன்னால் வருத்தப்படக்கூடும்.
நன்றாக நினைவிருக்கிறது ப்ரதர். எப்படி இருக்கிறீர்கள் என்றேன்.
நன்றாக இருக்கேன் ப்ரதர். அன்று நீங்கள் செய்த அந்தச் சிறு உதவி எனக்குப் பெரும் ஆறுதலைத் தந்தது. முக்கியமாக அன்றைய தினத்தில் முகம் மறைத்த என் ஸ்கார்புக்குப் பின்னே அழுதுகொண்டிருந்தேன். முக்கியமான இந்தத் துயர சமயத்திலே என் மனைவியின் கைகளைப் பற்றிக்கொண்டு ஆறுதல் சொல்லாமல் இங்கே புற்களை வெட்டிக்கொண்டிருக்கிறேனே பெரும் சோகத்தில் இருந்தேன். அப்போதுதான் நீங்கள் என்னிடம் நலம் விசாரித்துவிட்டு ஒரு குளிர்ந்த தேநீரை கையில் அளித்துச் சென்றீர்கள்.
அந்த வார்த்தைகளும், நீரும் என் தனிமையை கழுவிச்சென்றது. புல்வெட்டும் மெஷினை அணைத்துவிட்டு சாலையின் ஓரமாக அமர்ந்து நிதானமாக அக்குளிர்ந்த நீரைப் பருகினேன். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது.
அப்படியா நல்லது... நானும் இப்படியான துயர சம்பவங்களைக் கடந்துதான் வந்திருக்கிறேன். அனேகமாக வாழ்வில் அனைவருமே இந்தத் தருணங்களைக் கண்டு மீண்டு வந்திருப்போம். நீங்களும் அப்படியாக விரைவில் மகிழ்ச்சியின் எல்லையைத் தொடுவீர்கள். வாழ்த்துகள் என்று கைகுலுக்கி விடைபெற முயற்சித்தேன். அவன் விடுவதாக இல்லை. என்னோடு ஒரு தேநீர் அருந்த வேண்டும் என்றான்.
இப்போதுதான் நான் அருந்திவிட்டு வருகிறேன். இன்னொருநாள் பார்க்கலாம் என்றாலும் விடுவதாயில்லை. சரி என்று சொல்லி வழியில் உள்ள உணவகத்தில் நுழைந்து அமர்ந்தோம்.
பங்களாதேஷில் உள்ள ராஜ்சாஹி என்ற பகுதியிலிருந்து வருகிறான். இந்தியாவின் கோல்கத்தாவை தொட்டடுத்து உள்ள மாவட்டம். அங்கிருந்து இந்தியாவுக்குள் சென்று வேலை செய்பவர்கள் ஏராளம். பெரிய காவல் ஒன்றும் இல்லை. பாஸ்போர்ட் இல்லாமலே அங்கும் இங்கும் சென்று வரலாம். என் நண்பர் மூலமாக இங்கே புல்வெட்டும் வேலை கிடைத்து வந்தேன். ஆறு வருடமாக இதே வேலைதான். சுருக்கமாக அவன் வரலாறு சொன்னான்
.நானும் இந்தியாவின் தென்கோடிப்பகுதியிலிருந்து வருகிறேன். ஒரே மகள் செக் 2 படிக்கிறாள். அக்கவுண்டண்ட் வேலை. அதற்குமேல் ஒன்றும் சொல்வதற்கில்லை. இன்றுதான் என்வேலையின் கடைசிநாள். நாளையிலிருந்து வேலை இல்லை. வறட்டுப்புன்னகையினூடாக நான் சொன்னபோது நம்பிக்கையளிக்கும் விதமாக. இன்ஷா அல்லா உங்களுக்கு இன்னொரு வேலை விரைவில் கிடைக்கும். நீங்கள் ஒன்றுக்கும் கவலைப்படத்தேவையில்லை பூரணச்சிரிப்புடன் அவன் சொல்லும்போது அவனின் முகத்தில் தென்பட்டது பரிசுத்தமான அன்பு.
அந்த நம்பிக்கையோடுதான் நான் அன்று வீடு சேர்ந்தேன்.