சென்னை: தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிக்கு இந்தியா முழுதும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. அதற்கு ஆளும் கட்சியான பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சிகளுமே ஆதரவு தெரிவித்து வருகின்றன.
தமிழகத்தில் திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் தேர்தல் ஆணையத்தின் தீவிரத் திருத்தப் பணிக்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்தன.
ஆனால், தமிழக வெற்றிக் கழகம் மட்டும் இதுவரை அமைதிகாத்தது. இந்நிலையில், அக்கட்சியும் வாக்காளர் திருத்தப் பணியை எதிர்த்து மாநிலம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 16) போராட்டத்தில் குதிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு காவல்துறையிடம் அனுமதியும் கேட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தில் நடிகர் விஜய் ஏதாவது ஒரு மாவட்டத்தில் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப்பணி நவம்பர் 4ஆம் தேதி முதல் ஒரு மாதம் நடத்தப்படும் என அண்மையில் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அண்மையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அரசியல் கட்சிகளின் கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப்பணியை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது என முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, கடந்த 3ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடுத்தது. இதேபோல், மேலும் சில மாநிலக் கட்சிகள் சார்பிலும் வழக்கு தொடுக்கப்பட்டது.

