தேனும் ரொட்டியும் நல்ல நண்பர்களையும் மனதார விரும்புகிறார் எல்லார்க்கும் பிடித்த ‘வின்னி தி பூஹ்’ கரடி.
திரையிலேயே கண்டு ரசித்திருக்கும் ‘வின்னி தி பூஹ்’ (Winnie the Pooh) கதாபாத்திரங்களை நேரில் சந்தித்து விளையாடுவது எப்படி இருக்கும்?
இந்த வாய்ப்பைக் கரையோரப் பூந்தோட்டங்களில் நடைபெறும் சிறுவர் விழா 2026 வழங்குகிறது.
கரையோரப் பூந்தோட்டத்தில் 12 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடந்து வரும் சிறுவர் விழா, இம்முறை ‘வின்னி த பூஹ்’ கேளிக்கைச் சித்திரத்தின் 100-வது ஆண்டுநிறைவைக் கொண்டாடும் வகையில் அதனை மையமாகக் கொண்டு அமைகிறது.
ஜூன் 21 வரை ‘சூப்பர்ட்ரீ குரோவில்’ (Supertree Grove) நடைபெறும் இந்த இலவச விழா, உங்கள் ஜூன் பள்ளி விடுமுறையை வண்ணமயமாக மாற்றலாம்.
இதன் முக்கிய அங்கமாக, சிங்கப்பூரின் முதல் ‘வின்னி தி பூஹ்’ சார்ந்த 16 மீட்டர் உயர ‘திகில் சவாரி அமைந்துள்ளது.
இதில் ஏறி, ‘சூப்பர்ட்ரீ’ எனப்படும் உயரமான செயற்கை மரங்களுக்கு இடையே பறவை போல மிதந்து செல்வது சாகசப் பிரியர்களுக்குப் புதிய அனுபவத்தைத் தரும்.
ஜூன் மாதத்தின் ஒவ்வொரு சனிக்கிழமையிலும் ‘பூஹ்வின் பிரம்மாண்ட நட்புக் கொண்டாட்டம்’ எனும் அணிவகுப்பும் நடைபெறும்.
தொடர்புடைய செய்திகள்
இதில், ஏழு மீட்டர் உயரமுள்ள மஞ்சள் நிற ‘பூஹ்’ கரடி, நற்பண்புகள் நிறைந்த அதன் நண்பர்கள் ஆகியவற்றின் பெரிய பலூன் உருவங்கள் மெல்ல அசைந்து வருவதைக் காண்பது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
“சிறுவயதிலிருந்து நான்‘வின்னி தி பூஹ்’ கேளிக்கைச் சித்திரத்தைப் பார்த்து வளர்ந்தேன். இந்த விழா, பழைய நினைவுகளை எனக்கு மீண்டும் கொண்டு வருகிறது ,” என்று அணிவகுப்பில் இருந்த ஸ்ருதி நாயர், 29, கூறினார்.
கேளிக்கை சந்தை விளையாட்டுக் கூடங்கள் பல வண்ணங்களிலும் வடிவங்களிலும் சிறார்களைக் கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.
‘டிகர்’ (Tigger) போல துள்ளிக் குதிக்க நீல நிற நீர்நிலைகள் போன்ற ‘டிரம்போலின்’கள் உள்ளன.
பிக்லெட் (Piglet) போல நிதானம் தவறாமல் நடக்க நீளமான மரக்கட்டைகளில் விழாமல் நடந்து பார்க்கலாம்.
ஈயோர் (Eeyore) அமைதியாக விளையாடும் இடமும், தேன் கூடுகள் போன்ற வட்ட வடிவ மஞ்சள் நிற பந்துக்குழிகளும் இங்கு இருக்கின்றன.
தற்காலிகக் கூடங்களில் விளையாடி மகிழ்வதுடன் சிறுவர்கள், வண்ணமயமான குட்டி ரயிலில் பயணம் செய்யலாம்.
அனைவரையும் மகிழ்வித்த இவ்விழா சிறந்த ஏற்பாடு எனப் பிள்ளைகளுடன் வந்திருந்த தாயார் விக்னேஸ்வரி சதிஷ், 36, பாராட்டினார்.

