விளையாட்டுவழி நிதி அறிவு

விளையாட்டுவழி நிதி அறிவு

படம்: கீர்த்திகா ரவீந்திரன்

16 Nov 2026 - 6:33 am

2 mins read

பணம் ஈட்டுவது, சேமிப்பது, செலவழிப்பது, நன்கொடை அளிப்பது ஆகிய நிதி சார்ந்த நடவடிக்கைகளைப் பற்றி சிறுவர்கள் ‘மணி டவுன்: மேக் இட் கவுண்ட்!’ (Money Town: Make It Count!) கண்காட்சிவழி கற்றுக்கொள்ளலாம்.

சிங்கப்பூர் சிறுவர் அரும்பொருளகத்தில் நவம்பர் 14ஆம் தேதி அக்கண்காட்சி தொடங்கியது. 5 முதல் 9 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்காக அது வடிவமைக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுவழி கற்றலை ஊக்குவிப்பதே அந்தக் கண்காட்சியின் நோக்கமாகும்.

கண்காட்சிக்கு வரும் ஒவ்வொரு சிறுவருக்கும் சிறப்புக் கைப்பட்டை வழங்கப்படும். அது அவர்களின் பணப்பையாகச் செயல்படும்.

வெவ்வேறு நிதிச் சூழல்களில் சிறுவர்கள் எடுக்கும் முடிவுகள் அவர்களின் வளங்களை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை அந்தப் பணப்பை வெளிப்படுத்தும்.

மேலும், பணத்தின் வரலாறும் மரபும் சார்ந்த சில அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.

ஸெங்ஹுவா தொடக்கப் பள்ளி மாணவர்கள் அக்கண்காட்சியை வழிநடத்துகின்றனர்.

கண்காட்சியில் தொண்டூழியராகச் சேவையாற்றும் மாணவி ஸ்மிருதி சந்திரா, 12, மோசடிகளைக் கண்டறிய உதவும் மோசடித் தடுப்பு நிலைய அங்கம் தமக்கு மிகவும் பிடித்ததாகக் கூறினார்.

“பணத்தைப் பொறுத்தவரை இது மிகவும் முக்கியமான தலைப்பு. மிகச் சிறிய வயதிலேயே இது குறித்து விழிப்புணர்வு பெறுவது நல்லது,” என அவர் பகிர்ந்துகொண்டார்.

48 மாதங்கள், அதற்குட்பட்ட வயதுடைய பிள்ளைகளுக்காக விளையாட்டுக் கூடம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

அங்கு உதவும் மாணவி கயல் ரெய்னா, 11, ஒரு காலத்தில் உணவுப் பொருள்கள் பணமாகப் பயன்படுத்தப்பட்டதை அந்தக் கண்காட்சி வழி அறிந்துகொண்டார்.

“நான் இப்போது உணவைப் பணமாகப் பயன்படுத்த வேண்டுமென்றால், அரிசியைத் தேர்ந்தெடுப்பேன். அதை எடுத்துச் செல்வது மிகவும் எளிது,” என்று அவர் கூறினார்.

விளையாட்டு வழி கற்றலை ஊக்குவிக்கும் அக்கண்காட்சிக்கான பெற்றோர் வழிகாட்டிகளை உருவாக்கக் குழந்தை நல சிகிச்சையாளர் தனுஜா நாயர், 47, உதவினார்.

இணையம், தொழில்நுட்பத்தால் சிக்கலான சூழல்களை எதிர்கொள்ளும் சிறுவர்களுக்குப் பணத்தை எண்ணுவதைத் தாண்டிய நிதி அறிவு அவசியம் என்பதை அவர் வலியுறுத்தினார்.

கண்காட்சியோடு இந்த உரையாடல் நின்றுவிடக் கூடாது எனக் கூறிய அவர், “பணத்தின் முக்கியத்துவம், சேமிப்பு, மோசடிகள் போன்ற பொதுவான ஆபத்துகள் குறித்து பிள்ளைகளுக்குத் தொடர்ந்து கற்பிக்க, பெற்றோர் வீட்டிலுள்ள அடிப்படைப் பொருள்களையோ அல்லது அன்றாடச் சூழ்நிலைகளையோ பயன்படுத்தலாம்,” என்றார்.

‘யுஓபி’ அறக்கட்டளை ஆதரவுடன் 2029ஆம் ஆண்டு ஜனவரி வரை இந்தக் கண்காட்சி நடத்தப்படும்.

அக்கண்காட்சியைப் பற்றிய கூடுதல் தகவல்களுக்கு https://www.heritage.sg/childrensmuseum/whatson/exhibitions/2026_11---money-town-make-it-count என்ற இணையப்பக்கத்தைப் பொதுமக்கள் நாடலாம்.

குறிப்புச் சொற்கள்