பணத்தைச் சேமிப்பதில் பத்து வயது திஷன்யா கெட்டிக்காரி.
பெற்றோர் நாள்தோறும் கைச்செலவுக்கு அளிக்கும் பணத்தில் சிறிதளவு சேமிப்பது அவளது வழக்கம்.
வீட்டில் தமக்கென வைத்துள்ள உண்டியலில் திஷன்யா, சிறுகச் சேமித்து பணத்தொகையைப் பெருக்கி வந்தாள்.
குறிப்பிட்ட நாளில் எவ்வளவு பணத்தைச் சேமித்தோம் செலவு செய்தோம் ஆகியவற்றை எழுதும் பழக்கமும் அறிவில் சிறந்த திஷன்யாவுக்கு உள்ளது.
தாயார் சொல்லிக் கொடுத்த அந்தப் பழக்கத்தை அச்சிறுமி தவறாமல் பல ஆண்டுகளாகப் பின்பற்றுகிறாள்.
ஒருநாள் வணிகம் பற்றிப் பள்ளி வகுப்புகளில் கேள்விப்பட்ட திஷன்யா, தாமும் வணிகம் செய்ய விரும்புவதாகத் தம் தாயாரிடம் கூறினாள்.
“உன் சித்தி ஷோபனா, தீபாவளிக்காக வீட்டில் பலகாரங்களைத் தயாரித்து விற்கிறார். அவரும் மதன் சித்தப்பாவும் பிற்பகல் வீட்டுக்கு வருவார்கள், அவர்களிடம் நீ பேசு,” என்று அவரது தாயார் கூறினார்.
அம்மா சொன்னபடியே ஷோபனா சித்தியும் மதன் சித்தப்பாவும் வீட்டுக்கு வந்திருந்தனர். சித்தியைக் கண்டவுடன் திஷன்யாவுக்கு ஒரே மகிழ்ச்சி.
மூவரும் பேசிக்கொண்டிருந்தபோது வணிகம் செய்வது பற்றி திஷன்யா, சித்தியிடம் கேட்டாள்.
“நல்ல யோசனை. உனக்கு நான் உதவ விரும்புகிறேன். எந்த வகையில் உதவ வேண்டும் என்பதை நீயே கூறு?” எனச் சித்தி திஷன்யாவிடம் கேட்டார்.
எல்லோரும் சற்று யோசித்துக் கொண்டிருக்கையில் மதன் சித்தப்பாவுக்குத் திடீரென யோசனை தோன்றியது.
“சித்தி செய்யும் பலகாரங்களுக்கான பொட்டலங்களுக்கு நீ வண்ணமிடு. அழகான, கவர்ச்சிகரமான வடிவங்களை வரை. விற்கப்படும் பொட்டலங்களின் வருவாயில் ஒரு பகுதியை எடுத்துக்கொள்,” என்று மதன் சித்தப்பா கூறினார்.
அதனைக் கேட்டதும் திஷன்யாவின் முகம், சூரியனைக் கண்ட தாமரையைப் போல மலர்ந்தது.
“ஆம், சித்தப்பா. சித்தியின் பலகார வணிகத்திற்கு ஒத்தாசையாக இருக்க முடியும். நானுமே பணம் சம்பாதிக்க முடியும். சித்தி மகிழும்படி என் வேலையைத் தரமாகச் செய்வேன்,” என்று திஷன்யா கூறினாள்.
சொன்னபடியே பலகாரப் பொட்டலங்களை திஷன்யா அழகாக வடிவமைத்துத் தந்தாள்.
மலர்கள், செடிகள், விலங்குகள் போன்ற வடிவங்களை வரைந்து அவற்றை ஒட்டுவில்லைகளாக திஷன்யா உருவாக்கி பொட்டலங்களின் மீது பொருத்தினார்.
அத்துடன் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் பயன்படுத்திப் பல வகையான ஓவியங்களை உருவாக்கினார்.
தீபாவளி நெருங்க ஷோபனா சித்தியின் பலகாரங்களின் விற்பனை சூடுபிடித்தது.
திஷன்யா, இந்த வயதிலும் தம்மால் உழைத்துச் சம்பாதிக்க முடியும் என எண்ணி பெருமை கொண்டார்.
நன்றாகப் படித்துக் கணக்காய்வாளராக ஆகவேண்டும் என்பது அவரது குறிக்கோள்.
