பிள்ளைகளைக் கொண்டாடுவதற்கான சிறந்த மாதம் அக்டோபர். இவ்வாண்டு அதற்கு மேலும் சிறப்பூட்டும் வண்ணம், எஸ்பிளனேட் அரங்கு ‘அக்டோபர்ஸ்ட்’ எனும் கலைத் திருவிழாவை நடத்தியது.
பிள்ளைகளின் மனத்தைக் கவர்ந்து, கலைகளைப் போற்றும் வகையில் பல சுவாரசியமான நிகழ்ச்சிகள் அக்டோபர் 2ஆம் தேதி அரங்கேறின.
ஆடல், பாடல், கதை நேரம் என உற்சாகமூட்டும் வகையில் பிள்ளைகள் தங்களது கற்பனைத் திறனையும் வளர்த்துக்கொண்டனர்.
‘தி ஸ்டோரி கீப்பர்ஸ் ரூம்’ என்ற நிகழ்ச்சியில், பிள்ளைகள் எழுதிய கற்பனை நிறைந்த கதைகள் பார்வைக்கு வைக்கப்பட்டன.
அத்துடன், அவற்றைக் காண வந்த சிறார்க்கும் கதை எழுதும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது.
விளையாட்டுகளில் பிள்ளைகளை ஈடுபடுத்தும் வகையில் திடல் விளையாட்டுகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. பிள்ளைகள் ஓடி ஆடி நண்பர்களுடன் விளையாடி மகிழ்ந்தனர்.
உணர்வுகளை மலர்களாய் வடிவமைக்கும் ஒரு விசித்திரமான பட்டறையும் அத்திருவிழாவில் அரங்கேறியது.
வெவ்வேறு வண்ணங்கள், வெவ்வேறு உணர்வுகளைக் குறிக்கும். தங்கள் உணர்வைக் குறிக்கும் வண்ணத்தாள்களைக் கொண்டு பிள்ளைகள் மலர்களை வடிவமைத்தனர்.
‘ரிஃப் ரேஃப் கிளிட்டர் நாய்ஸ்’ நிகழ்ச்சி, இசையைக் கொண்டு பிள்ளைகளை நடனமாட ஊக்குவித்தது.
சிறார்களே நடனத்தை வடிவமைத்து கற்பனைத் திறனை வெளிப்படுத்த அது ஓர் அற்புதமான வாய்ப்பாக அமைந்தது.
பிரபல எழுத்தாளர் ‘ரோல்ட் டால்’ எழுதிய பிள்ளைகளுக்கான கதையை மேடையேற்றி, பிள்ளைகள் விரும்பும் மாய உலகை ‘தி வாஸ் கம்பெனி’ உயிர்ப்பித்தது. அந்நிகழ்ச்சியில், பிள்ளைகளே தங்களுக்கான பாடலுடன் இணைந்த நாடகத்தைப் படைத்தனர்.
அலைகள், காற்று, விண்மீன்கள், அமைதி ஆகியவற்றை உணர்வுபூர்வமான வகையில், ஓசைகள் வழியாகவும் அசைவுகள் மூலமாகவும் ‘அ யூனிவர்ஸ் இன் சவுண்ட்ஸ்’ நிகழ்ச்சி படைத்தது. ஓசைகளின்வழி சிறாரைத் தங்களது கற்பனை உலகிற்குக் கொண்டுசென்றது அந்த நிகழ்ச்சி.
அத்துடன், பிள்ளைகளுக்கு உற்சாகமூட்டும் வகையில் பல இசை நிகழ்ச்சிகளும் அரங்கேறின.
