கரையோரப் பூந்தோட்டத்தின் பேஃபிரன்ட் கூடாரத்திற்கு அருகே நடந்து சென்றால் கண்ணைக் கவரும் பெருஞ்சிற்பம் ஒன்றைக் காணலாம்.
தாயாக ஓர் ஓராங் ஊத்தானும் அதன் சேய் அருகில் உள்ள மரத்தின் கிளையில் தொங்குவது போலவும் அந்தக் கலைப்படைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் - போர்ச்சுகல் நாடுகளுக்கு இடையே கடந்த நாற்பது ஆண்டுகளாகத் தழைத்துவரும் நல்லுறவைப் பறைசாற்றவும் சுற்றுச்சூழலைப் பேணுவது பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கவும் அச்சிலை எழுப்பப்பட்டுள்ளது.
அக்கலைப்படைப்பிற்கு ‘புதுவாழ்க்கை’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
பயன்படுத்திய பொருள்களையும் குப்பைகளையும் கொண்டு உலகெங்கும் விலங்கு உருவங்களைப் போன்ற 200க்கும் மேற்பட்ட கலைப்படைப்புகளை உருவாக்கிய 38 வயது போர்ச்சுகீசியக் கலைஞர் போர்டாலோ II அந்தச் சிலையை வடிவமைத்துள்ளார்.
நான்கு ஆண்டுகளுக்குமுன் இதே இடத்தில் புலி வடிவச் சிலையை அவர் வடிவமைத்திருந்தார். பழைய சாலைத் தடுப்புகளையும் நடமாடும் கழிவறைகளின் கதவுகளையும் கொண்டு அந்தக் கலைப்படைப்பை அவர் உருவாக்கியிருந்தார்.
ஓராங் ஊத்தான் சிலையை உருவாக்குவதற்குத் தேவையான பழைய பொருள்களைத் திரட்ட அவருடைய நண்பர்களும் குடும்பத்தினரும் உதவினர்.
‘சிங்லைஃப்’ காப்புறுதி நிறுவனமும் நன்கொடை இயக்கம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்தது.
காடழிப்பு, சட்டவிரோதமாக விலங்குகளை வேட்டையாடுதல் உள்ளிட்ட காரணங்களால் ஓராங் ஊத்தான்களின் எண்ணிக்கை சரிந்து வருகிறது. உலகம் முழுதும் தற்போது ஏறத்தாழ 119,500 ஓராங் ஊத்தான்களே மிஞ்சியுள்ளன. அதுபற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், அச்சிலையை போர்டாலோ எழுப்பியுள்ளார்.
சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய நடவடிக்கைகளில் மனிதர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வந்தால், ஓராங் ஊத்தான்களின் எண்ணிக்கை குறைந்து, அவற்றின் இனம் அடியோடு அழிந்துவிடும் என்பதை உணர்த்தும் வகையில் தாயுடன் சேய் இருப்பதுபோல் கலைப் படைப்பை அமைத்துள்ளார் போர்டாலோ.
அந்தக் கலைப்படைப்பை உருவாக்க, போர்டாலோவும் ஐவர் அடங்கிய அவருடைய குழுவினரும் இணைந்து இரண்டு வாரங்கள் அயராது உழைத்தனர்.
அச்சிலையை நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ அக்டோபர் 22ஆம் தேதி (வியாழக்கிழமை) திறந்துவைத்தார்.
